ரஜினி விழாவில் நான் ஸ்பெஷல் கெஸ்ட்! ஸ்ரேயா





வருடங்கள்தோறும் வயதுகள் குறையும் தோற்றப் பொலிவில் இருக்கும் ஸ்ரேயா, எப்போதுமே இளசுகள் வட்ட இளவரசிதான். 'சந்திரா’ படத்துக்காக சினிமாவிலும் இளவரசியாகியிருப்பவர், அதன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் ஆயத்தத்தில் இருந்தார். அவர் நடித்த ஹாலிவுட் படமான ‘மிட்நைட்’ஸ் சில்ட்ரன்’ புரொமோஷனுக்காக கனடா சென்று டொரன்டோ திரைப்பட விழாவில் பங்கேற்பதும் அவரது பயணத் திட்டத்தில் இருந்தது. பயண அவசரத்தில் இருந்தவரை பத்து நிமிடங்கள் நம் வசப்படுத்த முடிந்தது.

தமிழிலும் மெகா ஹிட்டான ‘நான் ஈ’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தெலுங்குப் படமான ‘சத்ரபதி’ இப்போது தமிழில் ‘சந்திரமௌலி’யாக உருவெடுக்க, அதுதான் ஸ்ரேயாவை நாம் திரையில் காணவிருக்கும் அடுத்த தமிழ்ப் படமாக அமைகிறது. ‘ஈ’க்கு சீனியர் என்கிற முறையில் ராஜமௌலி பற்றி சிலாகித்தார் ஸ்ரேயா.

‘‘அப்படி ஒரு டைரக்டரை எப்போதாவதுதான் சந்திக்க முடியும். அவரோட நான்காவது தெலுங்குப் படம் இது. முந்தைய மூணு படங்களும் சூப்பர் ஹிட் வரிசையில் அமைய, இந்தப் படத்தில் என்னை நடிக்க அவர் கேட்டபோது எந்த நிபந்தனையும் இல்லாம சரின்னு சொல்லிட்டேன். கதை கூட என்னன்னு கேட்கலை. அது அவர்மேல நான் வச்ச நம்பிக்கைன்னு சொல்லலாம். அது வீண்போகாம அமைஞ்சுது. இந்தப் படத்துல நான் நடிச்சதுக்குப் பிறகுதான் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்னு டோலிவுட்டின் உச்ச ஹீரோக்கள் கூட நடிக்கிற வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தது.

தாய்ப் பாச சென்டிமென்ட்டை கமர்ஷியல் கலந்து சொல்ற கதையில, ஒவ்வொரு காட்சியையும் உணர்வு கலந்து செதுக்கியிருந்தார் ராஜமௌலி. அம்மாவை விட்டுப் பிரிய நேரும் ஹீரோ பிரபாஸ், சூழ்நிலையால் ஒரு புரட்சி வீரனா தெரிவார். ஒரு காட்சியில தன் அம்மாவான பானுப்ரியாவைக் கூட்டி வந்து வச்சிருப்பார்; அம்மாவுக்கு அது தன் மகன்னு தெரியாது. சாப்பிட மறுக்கும் அம்மாவை சாப்பிட வைக்க அவர் காதலியான நான் உதவுவேன். அந்தக் காட்சிகள் எனக்கு என் அம்மா நினைவுகளைக் கொண்டு வந்திடுச்சு. அவர் படம் மூலமா அடுத்து நான் தமிழுக்குள்ள வர்றதும், அந்தப் படத்தை என் மேனேஜர் சதீஷே இங்க கொண்டு வர்றதும் எனக்குப் பெருமையான விஷயங்கள்.

ராஜமௌலியோட தனித்தன்மை, ஒரு இடத்துல சேரைப் போட்டுக்கிட்டு உட்கார மாட்டார். அந்த சீன்ல ஆர்ட்டிஸ்ட் நீச்சல் அடிக்கணும்னா, அவர் முதல்ல தண்ணிக்குள்ள இறங்கி அதுக்கான சாத்தியத்தைப் பார்ப்பார். சண்டைக் காட்சிகளா இருந்தா, அவரே இறங்கி சண்டை போட்டுக் காண்பிப்பார். குதிரை ஏறணும்னா அவர் முதல்ல குதிரைல ஏறிக் காட்டுவார். அவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லையோன்னு தோணும். இதுதான் அவரோட வெற்றி ரகசியம்னு நான் நினைக்கிறேன். நான் இப்போ நடிக்கிற ‘சந்திரா’ படத்துக்காக ஒரு சீன்ல களரி சண்டை போட்டிருக்கேன். அது சரியா வரணும்னு அஞ்சு நாள் தனியா அதுக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்னா, ராஜமௌலி மாதிரி இயக்குநர்கள்தான் அதுக்கு முன்னுதாரணம்...’’



‘‘சிவாஜி 3டியில தயாராகுதே... தெரியுமா?’’
‘‘ஆமாமா... அந்த சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ரஜினி சாரே அது பற்றி சந்தோஷப்பட்டதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கும் அதுதான் முதல் 3டி படமா அமையப் போகுது. 3டியில என்னை நானே பார்த்து ரசிக்கத் தயாரா இருக்கேன்.

ரஜினி சாரோட நடிச்சு சில வருடங்கள் ஆனாலும், அவரோட நடிச்ச பெருமை இன்னைக்கும் இப்படி தொடர்ந்துக்கிட்டே இருக்கிறது சந்தோஷமா இருக்கு. ‘சிவாஜி’ படம் 3டியில் தயாராகிறது ஒரு செய்தின்னா, உங்களுக்கு இன்னொரு செய்தி வச்சிருக்கேன். வருடா வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில அவர் ரசிகர்கள் ஒண்ணுகூடி ரஜினி சாருக்கு விழா எடுக்கிறாங்க. ‘சிவாஜி’ல நான் அவரோட ஜோடியானதுக்காக, இந்த வருட ஸ்பெஷல் கெஸ்ட்டா அந்த விழாவுல கலந்துக்க நான் டோக்கியோ போ றேன்..!’’
மௌ வல் புன்னகையுடன் பேக்கப் ஆனார் ஆம்பல் அழகி..!
- வேணுஜி