கள்ளிக்காட்டு காதல்கள்





நாப்பத்தஞ்சு வயசாகியும் இன்னும் கல்யாணம் முடிக்காம இருக்குற தாய் மாமன் வெள்ளையப்பனைப் பார்க்கையில அய்யனாளுக்குப் பாவமா இருந்துச்சு. காலையில பொழுதேற ஆடு மேய்க்கப் போற அவன், ராத்திரி நெருங்கின பெறவுதான் ஊருக்குள்ள வருவான். ஆடுகளைப் பத்திக் கொண்டுபோய் கெடையில விட்டு, குட்டிகள ‘ஊட்டுக்கு’ விட்டு, பெறவு வந்து சேர ஊரடங்கிரும். அவனப் பெத்தவ ஆவடை... ஒரு ‘கொடுசூலி’. வீட்டுல கஞ்சி காய்ச்சிறதோட சரி. குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய மாட்டா. ஊருக்குள்ள பொறணி பேசி, ஓராளு விடாம சண்டை போடுறதுதான் அவ வேலை.

காலையில ஆடு மேய்க்கப் போற மகன்தான், அதுக்கு முன்னாடி ரெண்டு படி சோளமோ, கம்போ இடிச்சுக் கொடுக்கணும். ஊருக் கெணத்துல தண்ணி இறைச்சி நிரப்பணும். இன்னும் சின்ன வேலை சிறிய வேலையெல்லாம் செஞ்சுட்டுத்தான் அவன் ஆடு மேய்க்கப் போவணும். இல்லையின்னா, அவன் ஆடு மேய்க்கிற இடத்துக்கே தேடிப் பார்த்துப் போய் வஞ்சிட்டு வருவா ஆவடை.
வெள்ளையப்பன் இடிச்சுக் கொடுக்குற சோளத்தையோ, கம்பையோ காய்ச்சி வட்டுலுல போட்டு, காலையில பசிக்கும் மத்தியானத்துக்கும் கொஞ்சம் சோளச் சோத்தை வச்சு அனுப்பிருவா. கலயத்தைக் கட்டியிருக்குற கயித்துல ரெண்டு வெங்காயத்தை வெஞ்சனத்துக்கு சொருகியிருப்பா. அந்த வெங்காயம் உரிக்காமலயே இருக்கும். அதோட அவ வேலை முடிஞ்சுது. பிறகு ஊருக்குள்ள பொறணி பேசக் கிளம்பிருவா.

அய்யனாளுக்கு தாயோ, தகப்பனோ... யாரும் கிடையாது. ஒரு கூனல் விழுந்த பாட்டி மட்டுமே துணைக்கு இருந்தா. அவளுக்கு கண்ணும் சரியாத் தெரியாது; காதும் கேட்காது. பேருக்கு ‘நானும் பேத்திக்குத் துணையா இருக்கேன்’னுதான் இருந்தா. அய்யனாளுக்கு அவ சேத்திக்காரி சிவனாயிதான் எப்பவுமே துணை. சிவனாயிக்கும் சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது. அதனால, காலை எழுந்ததுல இருந்து, ராத்திரி படுக்குற வரைக்கும் ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணாத்தான் இருப்பாக; ஒண்ணாத்தான் திரிவாங்க. படுக்கையும் கூட ஒண்ணாத்தான். அது அது ஆகற வயசுல ஆகிடணும்னு சிலர் கரிசனத்தோட பொண்ணு கேட்டு வந்தாங்க. ஆனா, கல்யாணத்துல அய்யனாளுக்கும் இஷ்டமில்ல; சிவனாயிக்கும் இஷ்டமில்ல. காலம் முச்சூடும் ரெண்டு பேரும் பிரியாம இருக்கணும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டு வாழறவுகளாச்சே... அதனால், யாருக்கும் வாக்கப்பட்டுப் போனா ஒருத்தரை ஒருத்தர் பிரிய வேண்டி வரும்னு கல்யாணமே வேணாம்னு இருந்தாக.

இதுக்கு மத்தியிலதான் அய்யனாளுக்கு மாமன் மேல கரிசனம் வந்து ஒட்டிக்கிருச்சு. ‘பாவம்! கொணமில்லாத தாயி வவுத்துல பொறந்துட்டு, ஒரு சொகமில்லாம ஆடு உண்டு, காடு உண்டுன்னு அலையிதாரு. நம்மனாச்சிலும் அவருக்கு வாக்கப்பட்டு, அவர் கூடவே ஆடு மேய்க்க போறதோட, ஒரு நல்லது பொல்லது காச்சி வாய்க்கு ருசியா கொடுப்போம். வென்னி வச்சிக் கொடுத்து முதுகு தேச்சி குளிக்கச் சொல்லுவோம். வெள்ளி, செவ்வாய்க்கு அவரக் கூட்டிட்டு ஒரு கோயில், குளம் போயிட்டு வருவோம்’னு நினைச்சா. அத சிவனாயிகிட்டயும் சொன்னா.
அதக் கேட்டு சிவனாயிக்கு கோவமும், அழுகையுமா வந்துச்சு. ‘நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் முடிக்காம இருப்போமுன்னு நீதானே சொன் னே?’’ன்னு கேட்டா.

‘‘சொன்னேன். ஆனா, எம் மாமனப் பாக்கையில மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நானு அவருக்கு வாக்கப்பட்டாக்கூட நீயும், நானும் எப்பவும் போல இருப்போம்’’னு வாக்குக் கொடுத்து சிவனாயிய சம்மதிக்க வச்சா அய்யனாளு.

பிறகு மாமனத் தேடி கெடைக்குப் போயி, அவர்கிட்ட தன் ஆசையச் சொன்னா. அதக் கேட்டு வெள்ளையப்பன் திக்குமுக்காடிப் போனான். ஆனாலும் அவளை ஏத்துக்கறதுக்கு அவன் மனசு கூசுச்சு. ஏன்னா, அவனுக்கு வயசு நாப்பத்தஞ்சு நெருங்கிடுச்சு. அய்யனாளோ சிட்டுக்குருவி மாதிரி சிக்குன்னு அழகா, சுறுசுறுப்பா திரியிற சின்னப் பொண்ணு. ‘நானு இவமேல ஆசப்படலாமா? அப்படியே ஆசப்பட்டாலும் நம்ம ஆத்தா நம்மள கல்யாணம் முடிக்க விடமாட்டா ளே’ ங்கிற எண்ணத்துல அய்யனாளுகிட்ட இந்தக் கல்யாணம் வேணாமுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.
ஆனா அவ பிடிவாதமா, ‘வாக்கப்பட்டால் உமக்குத்தான் வாக்கப்படுவேன்’னு சொன்ன பிறகு அவனால ஒண்ணும் பேச முடியல. வலிய வந்து வாக்கப்படுற அக்கா மகளக் கட்டிக்கிடக் கசக்குமா? உடனே, ஊர் நாட்டாமைகிட்டச் சொல்லி, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினான் வெள்ளையப்பன்.

மகனுக்கு கல்யாணம் முடிக்க ஆவடைக்கு ஆசையே இல்ல. ஆனா, நாட்டாமையே விருப்பப்பட்டு பேசி முடிச்ச மாதிரி நடந்ததால அவளால ஒண்ணும் பேச முடியல. எப்படியோ ஒரு வழியா அய்யனாளோட வெள்ளையப்பனுக்கு கல்யாணம் முடிஞ்சுது.

ஆனா, மொதமொதலா ரெண்டு பேரும் சேர்ந்து ஆடு மேய்க்கப் பொறப்பட்டப்ப ஆவடை சண்டைக்கு வந்துட்டா. ‘‘ரெண்டு பேரும் ஒண்ணா போவக்கூடாது. நீ என்னைக்கும் போல வேலைக்குப் போ; அவன் ஆடு மேய்க்கப் போவட்டும்’’னு அவ சொன்னதும், ரெண்டு பேருக்கும் பொசுக்குன்னு ஆயிருச்சு.

அன்னிக்கு வெள்ளையப்பன் வீட்டுக்கு வர இருட்டிருச்சு. வரும்போதே ஆசையா ‘‘அய்யனா... அய்யனா...’’ன்னு கூப்பிட்டுக்கிட்டே வர, அவன் ஆத்தா பத்ரகாளியா எழுந்து ஆடிப்புட்டா.
‘‘ஏண்டா, பொறந்ததுல இருந்து தெனமும் பொண்டாட்டியத்தான் கூப்புட்டுட்டு வந்தியா? மலபோல நானு வாசப்படியில படுத்திருக்கேன். அவள எதுக்கு எழுப்புத?’’
‘‘சாப்பாடு வைக்கத்தான்!’’

‘‘இம்புட்டு நாளா அவதான் சாப்பாடு வச்சாளா? அவ வேலைக்குப் போய் வந்து அலுத்துப் போயி கெடக்கா. மாமன் வந்தாருன்னா என்ன எழுப்பாதேன்னு சொல்லிட்டுத்தான் படுத்தா’’ன்னு ஒரு பொய்யச் சொல்லி, கும்பாவில சோறு போட்டு வைச்சா.

‘‘தின்னுட்டு ராத்திரி கொல்லையில போயி படு’’ன்னு விரட்டியும் விட்டுட்டா. வெள்ளையப்பன் பேசாம போயி படுத்துட்டு தூங்குறது மாதிரி விடிய விடிய முழிச்சிட்டு இருந்தான். அவன் ஒருநாளு கூட ஆத்தாளை எதுத்துப் பேசாதவன். அய்யனாளுக்கும் யாரையும் எதுத்துப் பேசுற பழக்கம் கிடையாது. அதனால, ஆவடை அவங்களை ஆட்டி வச்சா. தெனமும் இதே மாதிரி அவுகளைப் பிரிச்சிப் படுக்க வச்சா. அய்யனாளுக்கும் ஆவடை சரியா கஞ்சி ஊத்த மாட்டா. சேத்திக்காரினு யாரு வந்தாலும் வஞ்சி தொறத்திருவா. சிவனாயியோட கூட பழக விடமாட்டேன்னுட்டா.  

கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வருஷம் ஆச்சி. வெள்ளையப்பனுக்கு மனசு தாங்கல. ‘இப்படி அழகான பொண் டாட்டி... அதுவும் நம்ம மேல பிரியமா இருக்க பொண்டாட்டிய கல்யாணம் முடிச்சும், அவகூட ‘பேசிப் பழக’ முடியலயே’ன்னு கவலையிலயே படுக்கையில விழுந்துட்டான். அய்யனாளும் துளசி கஷாயம் போட்டுக் கொடுத்தா. வென்னி வச்சி ஒத்தணம் கொடுத்தா. ஆனா, அவ புருஷன் பொழைக்கல. செத்துப் போன வெள்ளையப்பனை சுடுகாட்டுக்குக் கொண்டு போனாக. அப்ப அய்யனாளும் கூடவே தீப்பாயறதுக்காக (உடன்கட்டை ஏறுதல்) போனா.
அப்ப சிவனாயி வந்து, ‘‘நீ தீப்பாய வேணாம். முந்தி மாதிரி எப்பவும் நாம ஒண்ணாவே இருப்போம்’’னு சொன்னா.

ஆனா அய்யனாளு, ‘‘என் மாமன் இல்லாம என்னால இருக்க முடியாது. நீ அழாதே. நான் தீப்பாஞ்ச உடனே என் கொசுவத்துல ஒரு பிடி வந்து தனியா விழும். அதைக் கொண்டு போய் பத்திரமா வச்சுக்க. உன்னத் தேடி நல்ல மாப்பிள்ளை வருவான். அழகழகான பிள்ளைக பிறக்கும். நீ நல்லா இருப்பே. என்ன கஷ்டம் வந்தாலும் நானும் உன் கூடவே இருப்பேன்’’னு சொல்லிட்டா.
ஊர்க்காரவுக எவ்வளவோ பேசிப் பார்த்தும், அவ தீப்பாயிறத தடுக்க முடியல. அவ சொன்னது போலவே தீயில இருந்து கொசுவம் வந்து விழுந்துச்சு. ஆனா, சிவனாயி அதை எடுக்கல. ‘‘அய்யனாளு இல்லாம நானு வாழ மாட்டேன்’’னு அவளும் தன்னை மாய்ச்சுக்கிட்டா.

ஊரே இந்தப் பாசத்துல நெகிழ்ந்துருச்சு. வாழ வந்த மருமகள மாமியார்க்காரி எப்படி நடத்தக் கூடாதுங்கறதுக்கு சாட்சியாவும், நட்புன்னா எப்படி விட்டுக் குடுத்து வாழணும்ங்கறதுக்கு உதாரணமாவும் இருக்கற இந்த ரெண்டு பேருக்கும் ஊர்க்காரவுக கோயில் கட்டி கும்பிட்டு வாராக. ஸ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து மல்லிபுதூர் போற வழியில இன்னைக்கும் இவுக கோயில் இருக்கு...