சிங்கம் சுறுசுறு சூர்யா!





அவதார்’ மரம் போன்று உயர்ந்துகொண்டே இருக்கிறது சூர்யாவின் கிராஃப். ஏ, பியில் ஆரம்பித்து எல்லா சென்டர்களிலும் வரவேற்பு வானளாவி இருக்கிறது. இத்தனை மன்றங்கள், இவ்வளவு ரசிகர்கள் என்று கணக்கு போட்டு நேரத்தை வீணாக்காமல் அடுத்தடுத்த படங்களில் மூழ்கி, கதைகளில் கவனம் செலுத்துவது சூர்யாவின் ஸ்பெஷல்.

‘மாற்றான்’ முடிந்துவிட்டது. ‘அயன்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் - சூர்யா காம்பினேஷன்; ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதை என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... ஆந்திராவிலும்தான்! யெஸ்... தெலுங்கு ஏரியாவிலும் சூர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால் அங்கும் வெளியாகிறது ‘மாற்றான்’. தெலுங்கிலும் சூர்யாவே டப்பிங் பேசுகிறாராம். தெலுங்கு பேசுவதில் சூர்யா சூரப்புலி இல்லையென்றாலும், அதற்கான சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் தன்னை தயார் செய்துகொண்டிருக்கிறார்.

சரி, ‘மாற்றான்’ முடிந்ததும்... நீங்கள் நினைப்பது சரியே! ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ல் நடிக்க ஆயத்தமாகி விட்டார் சூர்யா. வரும் 26ம் தேதி தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘சிங்கம்’ படத்தின் க்ளைமாக்ஸிலேயே ‘வேட்டை தொடரும்’ என்று லீட் கொடுத்திருந்த ஹரி, பார்ட் 2விற்கான ஸ்கிரிப்ட்டை இன்னும் பரபரப்பாக எழுதியிருக்கிறாராம். அந்த ‘சிங்க’த்தில் நடித்த அதே நட்சத்திரங்கள்தான் பார்ட் டூவிலும் பங்குபெறுகிறார்கள். படத்தில் முக்கியமான நட்சத்திரங்களே 40 பேர் இருக்கிறார்களாம். இதில் பிரகாஷ் ராஜ் மட்டும் இருக்க மாட்டார்.

தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே லொகேஷன் பார்த்துத் திரும்பிய ஹரி, வழக்கம் போலவே ஏக் தம்மில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘பாட்டு சீனுக்கு ஃபாரீன் போறாங்களா..?’ என்று எதிர்பார்க்கும் ரசிகர்களையும் ஏமாற்றப் போவதில்லை. இரண்டு பாடல்களுக்காக ஃபாரீன் பறக்கிறது படக்குழு.

‘லிங்குசாமிக்கு சூர்யா ஒரு படம் பண்ணுவதாக இருந்ததே’ என்று ஞாபகப்படுத்துகிறவர்களுக்கான கொசுறு இது... குழப்படி இல்லாமல் கால்ஷீட் கொடுப்பதில் தெளிவான ஆள் சூர்யா என்பதால், ‘சிங்கம் 2’ முடிந்ததும்தான் அடுத்த கமிட்மென்ட். இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடந்ததுடன் இருக்கிறது. ஹரி படம் முடிவதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் ஆகிவிடும். எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குப் பிறகே லிங்குசாமி படம் தொடங்கும் என்கிறார்கள். ஹீரோயின், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்ற விஷயங்களை இப்போதைக்கு முடிவு செய்வதாக இல்லை லிங்குசாமி.
- அமலன்