பிரசவம்





‘‘  The same movements that get the baby in, get the baby out.’’
 From the book ‘Birthing from Within’ by Pam England - Rob Horowitz


இயற்கைப் பிரசவம் என்பது தாய்மையடைந்த ஒரு பெண், கிட்டத்தட்ட 280 நாட்கள் கருக்காலம் முடிந்து, கருப்பையிலிருக்கும் குழந்தையை, குறைந்த மருத்துவ உதவிகளுடன் தன்  சுயமுயற்சியின் மூலமே வெளியுலகிற்கு ஈன்று தருதல் ஆகும். வலி நிறைந்த இதனை சுகப்பிரசவம் என்பது வினோதமே!

ஒரு பிரசவத்தில் குழந்தை மட்டுமல்ல, ஒரு தாயும் சேர்ந்தே பிறக்கிறாள். பைபிளின் பழைய ஏற்பாட்டின் உபாகமத்தில் வரும் மோசஸின் அறிவுரைகளில், பாதுகாப்பான தாய்மை குறித்தும்  செவிலிகள் சுத்தபத்தமாக இருப்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி 98ல் சோரனஸ் என்ற ரோமானியர், தான் பிரசவம் பார்த்த அனுபவங்களைக் கொண்டு பேறுகால மருத்துவம்  குறித்த பாடநூல் ஒன்றினை எழுதினார். 16ம் நூற்றாண்டு வரை அப்புத்தகம் பயன்பாட்டில் இருந்தது. 1544ம் ஆண்டில் பிரசவம் பற்றிய முதல் ஆங்கிலப் புத்தகமான Birth of  Mankind,   தாமஸ் ரேனால்ட் என்ற பிரிட்டன் மருத்துவரால் எழுதப்பட்டது.

ஏவாள் செய்த பாவங்களுக்கான தண்டனையாகவே பிரசவ வலி பெண்களுக்கு ஏற்படுகிறது என அக்காலத்தில் நம்பினர். சர்ச்கள் அதை அங்கீகரித்தன. பிரசவ வலி எடுக்க சாட்டையால்  அப்பெண்ணை அடிக்க வேண்டும் என்றொரு மூடநம்பிக்கையும் சில பகுதிகளில் இருந்தது. ஒரு ஜெர்மானிய சக்ரவர்த்தினியின் பிரசவத்தின்போது, 20 பேரை நிற்க வைத்து சவுக்கடி  கொடுத்தனர். அரசிக்கு நல்லபடியாகப் பிரசவம் நடந்தது!

அப்போதெல்லாம் முடி திருத்துபவர்களே பிரசவமும் பார்த்தனர்! மத்திய காலத்தில் செவிலிகள்தாம் பெண்களுக்குப் பிரசவம் பார்த்தனர். ஆண்கள் அருகில் கூட அனுமதிக்கப்படவில்லை.  1522ல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் காக்டர் வெர்ட் என்பவர் பெண் வேடத்தில் பிரசவ அறைக்குள் நுழைந்தது தெரிந்து, தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். அவ்வளவு கடுமையான எதிர்ப்பு. 17ம்  நூற்றாண்டில் செவிலிகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. இங்கிலாந்தில் செவிலிகளுக்கு இலவச வீடுகள் கொடுத்தனர். நியூ ஆம்ஸ்டர்டாமில் அவர்களுக்கு தாராளமான சம்பளம்  வழங்கப்பட்டது.

செவிலிகள் அவசர காலத்தில் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்ய வேண்டி இருந்ததால், அவர்களை சட்டபூர்வமாகக் கையாளும் பொறுப்பை இங்கிலாந்து சர்ச்களின் பிஷப்கள் ஏற்றனர்.  செவிலிப் பணிக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. சேவைக்கு கட்டாய நிதிவசூல் செய்தல், பில்லி சூனியம் பழகுதல் / வைத்தல், ஏழை மகளிர்களுக்கு பிரசவம் பார்க்க மறுத்தல், அரசு / மத  அமைப்புகளிடம் குழந்தை பிறப்பு விவரங்களை மறைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

17ம் நூற்றாண்டு வரை செவிலிகளை சூனியக்காரிகள் என முத்திரை குத்திக் கொலை செய்வது ஆங்காங்கே பரவலாக நடந்தது. அக்காலகட்டத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள்  அனைத்திலும் ஆண்கள் டாக்டர்களாக உருவாகினர். 1650ல் வில்லியம் சாபெர்லென் என்பவர், ‘ஃபோர்செப்ஸ்’ எனப்படும் இடுக்கியைக் கண்டுபிடித்தார். பெண்ணின் இயற்கை முயற்சியில்  பிரசவம் நிகழாத பட்சத்தில், இந்த இடுக்கியை பிறப்புறுப்பின் வழி செலுத்தி குழந்தையின் தலையைக் கவ்வி வெளியிழுத்தார்கள். இப்போதும் இது புழக்கத்தில் உள்ளது. ஆனால்,  அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இடுக்கி மிக அரிதாகவே பயன்பட்டது. பயன்படுத்தப்பட்டதும் கூட குடும்ப ரகசியமாகவே காக்கப்பட்டது. ஃபோர்செப்ஸின் பயன்பாட்டை மருத்துவரிடையே  பரவலாக்கியவர், 18ம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து மருத்துவரான வில்லியம் ஸ்மெல்லி. இதனால் செவிலிகளின் வேலையும் வருமானமும் பாதிக்கப்பட்டது. பொறாமை கொண்ட  செவிலிகள், ஆண்கள் பிரசவம் பார்ப்பதை ஒழுக்கமற்ற செயலாகப் பிரகடனப்படுத்தினர்.

1739ல் இங்கிலாந்தில் பிரசவ வார்டு தொடங்கப்பட்டது. இது செவிலித் தொழிலுக்கு பெருத்த அடியாக அமைந்தது. பயிற்சியளிக்கப்பட்ட ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்க்கத் தொடங்கினர்.  ஆனால், அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கே கட்டுப்படியானது. 1765ல் டாக்டர் வில்லியம் ஷிப்பன் என்பவர் ஃபிலடெல்ஃபியாவில் முதன்முதலில் செவிலிகளுக்கான பயிற்சியகம்  தொடங்கினார்.

1828ல் மகப்பேறு மருத்துவரைக் குறிக்கும் ‘ளிதீstமீtக்ஷீவீநீவீணீஸீ’   என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ‘முன் நிற்கும்’ என்ற பொருளுடைய லத்தீன் வார்த்தையிலிருந்து இது  உருவானது. 1817ல் பிரிட்டிஷ் இளவரசி சார்லட், 50 மணி நேர பிரசவ வலிக்குப்பின் இறந்த குழந்தையைப் பெற்றார். அடுத்த 5 மணி நேரத்தில் அவரும் செத்துப்போனார். க்ரோஃப்ட் என்ற  அவரது மருத்துவரே இதற்குக் காரணம் என மக்கள் வசை பாட, அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆண் மருத்துவர்களுக்கான எதிர்ப்பு வலுத்தது. மருத்துவக் கழகம் தலையிட்டு  ஃபோர்செப்ஸின் பயன்பாட்டை கட்டாயமாக்கியது.

1848ல் டாக்டர் வால்டர் சான்னிங் முதன்முதலாக ஈதர் திரவத்தை மயக்க மருந்தாக பிரசவத்தின்போது பயன்படுத்தினார். 1853ல் இந்திலாந்து மகாராணி விக்டோரியா, தனது ஏழாம்  குழந்தையைப் பெற்றெடுக்க குளோரோஃபார்ம் மயக்க மருந்தைப் பயன்படுத்தினார். அவர் அதை வெளியில் சொல்ல, பிரசவத்தில் குளோரோஃபார்ம் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ்  ஸிம்பல் ஆனது.

19ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியினால், நகர்ப்புற கீழ்த்தட்டுப் பெண்கள், புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனைகளுக்குப் படையெடுத்தனர். மத்தியதர, மேல்தட்டுப் பெண்கள், வீட்டிலேயே  பிரசவம் பார்த்துக் கொண்டனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவமனைகள் பெருக, நிறைய பெண்கள் அச்சேவையைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் செவிலிகளுக்கான  தேவை முற்றிலும் ஒழிந்தது.

1902ல் ஸ்கோபோலமைன் என்ற மறதி வஸ்துவை மயக்க மருந்தாகப் பிரசவத்தில் பயன்படுத்தினர். 1914ல் இதனுடன் வலி குறைக்கும் மார்பைன் கலந்து ட்வைலைட் ஸ்லீப் என்ற மயக்க  மருந்தை உருவாக்கிப் பயன்படுத்தினர். இதனால், பிரசவத்தின்போது என்ன நடந்தது என்பதே பெண்களுக்கு சுத்தமாக நினைவிருக்கவில்லை. மேல்தட்டு பெண்கள் ‘ட்வைலைட் ஸ்லீப்  சங்கங்கள்’ அமைத்து, இதைப் பிரசவத்தின்போது பயன்படுத்துவதை ஒரு சமூகநிலைக் குறியீடாக ஆக்கினர்.



1920ல் ஜோஸப் டிலீ என்பவர், தனது மிகப்பிரபலமான பிரசவம் குறித்த பாடநூலை வெளியிட்டார். ‘வலி கண்டவுடன் பெண்களுக்கு மயக்க மருந்து தரவேண்டும், கருப்பைவாய் விரிந்து  கொடுக்க உதவ வேண்டும், பிரசவத்துக்கு முக்கும் சமயம் ஈதர் தர வேண்டும், பிறப்புறுப்பு வாயில் சிறுவெட்டு இட வேண்டும், இடுக்கி பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க  வேண்டும், தொப்புள்கொடியை வெளியே எடுத்து வெட்டிவிட வேண்டும், கருப்பை சுருங்க மருந்துகள் அளிக்க வேண்டும், பிறப்புறுப்பின் வாயை மறுபடி சரி செய்ய வேண்டும்’ என  ஒவ்வொன்றையும் அந்த நூல் விரிவாக விவரித்தது. அமெரிக்க பிரசவ முறைகள், இதை சுவீகரித்தே உருவாக்கப்பட்டவை.

1940களின் தொடக்கத்தில் மருத்துவர்கள் மைக்கேல் ஓடெண்ட் மற்றும் ஃப்ரெட்ரிக் லெபோயெர், செவிலி ஈனா மே கேஸ்கின் ஆகியோர் செவிலியகங்களில் / வீட்டில், நீருக்குள் வைத்துப்  பிரசவம் பார்ப்பதைப் பிரபலப்படுத்தினர்.

1940களில் பெண்களுக்கு பிரசவத்தின்போது மயக்கமருந்து தருவதும், அவர்கள் மயக்கத்திலிருக்கும்போதே ஃபோர்செப்ஸ் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும் சாதாரணமாகிப்  போனது. பிரசவத்திற்கு முன்பாக பிறப்புறுப்பு ரோமங்களை அகற்றுவதும், எனிமா கொடுப்பதும், சலைன் ட்ரிப்ஸ் இறக்குவதும், பிரசவ வலியின்போது கைகளைக் கட்டிப் போடுதலும்,  குழந்தை பிறந்த பின்னர் 12 மணி நேரத்துக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதும் சகஜமாயிற்று.

1953ல் ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் ஃபெர்னாண்ட் லாமேஸ் என்பவர் பிரசவம் குறித்த கண்டுபிடிப்புகளை நூலாக வெளியிட்டார். அது குழந்தையின் தந்தையை பிரசவ அறைக்குள் அழைத்து  வந்தது. 1958ல் ராபர்ட் ப்ராட்லே என்ற மருத்துவர், கணவர் அருகிலிருக்க, ஒரு சுகப்பிரசவத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். 1970களில் தொடங்கி பரவலாகத் தந்தைகள் பிரசவ  அறைக்குள் அனுமதிக்கப்பட்டபோதும் ஒரு மூலையில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

1968ல் எலெக்ட்ரானிக் கருவிகளின் மூலம், வயிற்றிலிருக்கும் கருவைக் கண்காணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதிக ரிஸ்க்கான கேஸ் எனக் கருதப்படும் பெண்களுக்கு  மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. 1979ல் டெமெரோல் என்கிற பிரசவ மயக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

1980களின் இறுதியில் பிரசவ வலி தொடங்கி, குழந்தை பிறப்பு வரை எல்லா வசதிகளையும் ஒரே அறையில் அளிக்கும் எல்டிஆர் ரூம்கள் உருவாக்கப்பட்டன. 1993ல் எபிட்யூரல்  அனஸ்தீசியா குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு, அதன் மோசமான விளைவுகள் அறியப்பட்டதால், அது தடைசெய்யப்பட்டது.

‘3 இடியட்ஸ்’ படத்தில் அமீர்கான் (பின் அதன் மறுபதிப்பான ‘நண்பன்’ படத்தில் விஜய்) மருத்துவமனை செல்ல முடியாத அவசர நிலையிலிருக்கும் பெண்ணுக்கு தன் மெக்கானிக்கல்  எஞ்சினியரிங் ப்ரோஜெட்டின் உதவியில் இயற்கைப் பிரசவம் நிகழ்த்துவதாய்க் காட்டுவார்கள். ‘எந்திரன்’ படத்தில் சிட்டி எனும் ரோபோ ரஜினி, நிலைமை சிக்கலாகிப் போன ஒரு  பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதாக வரும். சுகப்பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் பிறப்புரிமை... நிஜப் பெண்ணுரிமை!