பொதுநல வழக்கு போடுவது எப்படி?





அநேகம் பேர் பாதிக்கப்படுகிற ஒரு பிரச்னை எங்கள் பகுதியில் நடக்கிறது. எத்தனையோ புகார் தந்தும் பலனில்லை. பொதுநல வழக்கு போட நினைக்கிறேன். அதற்கு என்ன நடைமுறைகள்?
- வெ.ரத்தினசாமி, மதுரை.
பதில் சொல்கிறார் ‘டிராபிக்’ ராமசாமி
(சமூகநல ஆர்வலர்)
சம்பந்தப்பட்ட இடங்களில் புகார் செய்ததற்கான ஆதாரங்களை நகல் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்கள் யார் யார் என்று நினைக்கிறீர்களோ  அவர்களைப் பிரதிவாதிகளாகப் போட்டு ஒரு அஃபிடவிட் தயார் பண்ணவும். தேவைப்பட்டால் வக்கீல் உதவி கோரலாம். அல்லது நாமே தயாரிக்கலாம்.

அஃபிடவிட்டில் நீங்கள் யார், பிரச்னை என்ன, அதனால் மக்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கிற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இதற்குத் தேவைப் படுவது 200  ரூபாய்க்கு முத்திரைத்தாள்கள் மட்டுமே. அஃபிடவிட் தயாரானவுடன் கையிலிருக்கும் ஆதாரங்களை அத்துடன் இணைத்து, நீதிமன்றத்தில் இயங்கும் ‘ரிட் ஃபைலிங் செக்ஷ’னில் தாக்கல்  செய்யவும். அங்கு ரிட் பெட்டிஷன் என இன்னொரு மனு கேட்பார்கள். அதில் தாங்கள் விரும்பும் வேண்டுகோளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் கொடுக்க வேண்டும்.

கோர்ட்டில் வாதாட வக்கீல் நியமிப்பதோ அல்லது நீங்களே வாதாடுவதோ உங்கள் விருப்பம். தமிழிலேயே வாதாடலாம். ஆனால் மனு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ரிட் ஃபைலிங்  செக்ஷனில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால், இரண்டொரு நாட்களில் அது விசாரணை வழக்குகளின் லிஸ்ட்டில் சேர்ந்து விடும்.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் நான் போட்டித் தேர்வு எழுதி வேலைக்குப் போக நினைக்கிறேன். ‘லட்சக்கணக்கானவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்’ என பயமுறுத்துகிறார்கள்  சிலர். என்னால் முடியுமா? அதற்கு நான் செய்ய வேண்டியது என்ன?
- முத்துக்குமார், திருச்சுழி.

பதில் சொல்கிறார் சங்கர் (சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, சென்னை)
சரியான நேரத்தில் தங்களுக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது. கல்லூரி முடித்ததும் மேலே படித்தாலும் சரி, கிடைக்கிற வேலையில் சேர்ந்தாலும் சரி... போட்டித் தேர்வுகளை விடாமல்  துரத்துவது நல்லது. இதற்கென்றே உள்ள கோச்சிங் கிளாசில் சேர உங்கள் குடும்பச் சூழல் அனுமதித்தால் இன்னும் சிறப்பு. பயிற்சி வகுப்பில் சேர்பவர்கள் அங்கு கிடைக்கும் மெட்டீரியல்,  டிப்ஸ்களை முழுமையாகப் பயன்படுத்தினாலே போதும். கோச்சிங் செல்லாதவர்கள் தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் தேர்வுத் தயாரிப்புக்காக ஒதுக்குவது சிறந்தது. அதிகாலை, மாலை,  இரவு என இந்த நேரங்களைப் பிரித்துக்கொள்ளலாம். யு.பி.எஸ்.சி., ரயில்வே, எஸ்.எஸ்.சி., மாநில தேர்வாணையத் தேர்வுகள் என போட்டித் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி... பெரும்பாலும்  அப்டிட்யூட், பொது அறிவு, நடப்பு நிகழ்வு ஆகியவற்றில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இதற்கான கேள்வி - பதில் புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்றன. அனுபவமுள்ள நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கிப் பயிற்சி செய்யவும். சம்பந்தப்பட்ட தேர்வாணையங்களின்  பழைய கேள்வித்தாள்களையும் வாங்கிப் பார்க்கலாம். இவை தேர்வாணைய இணையதளங்களிலேயே கிடைக்கிறது.

நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்கள் மிக முக்கியம். எல்லா முன்னணி நாளிதழ்களையும் பார்த்து விடுவது நல்லது. ஏனெனில் சமயங்களில் அரசின் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் ஒரு  சில பத்திரிகைகளில் மட்டும் வெளியாகலாம். www.indg.in என்கிற இணையதளத்திலும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

தினமும் செய்தித்தாள் படிக்கும்போது முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். தவிர, போட்டித் தேர்வுகளுக்கென்றே சில பத்திரிகைகள் வெளியாகின்றன.  Competition Success Review, Competition Wizard, G.K.Today போன்ற இதழ்களை ரெகுலராகப் படிக்க வேண்டும். அவற்றில் வரும் மாடல்  தேர்வுகளை எழுதிப் பார்ப்பதும் அவசியம்.

அரசு வேலை என்பதால் போட்டி தவிர்க்க முடியாததே. ஆனால் தொடர்ச்சியான பயிற்சி இருக்கும்பட்சத்தில், குறுகிய காலத்திலேயே வேலை க்ளிக் ஆவது சாத்தியம்தான்.