நிழல்கள் பாதை





தீபாவளியன்று நிறைய பேருக்குக் கண் தெரியவில்லை. பட்டாசுகளின் புகை மூட்டமும் குடிபோதையின் தள்ளாட்டமும்தான் காரணம். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே நானும்  என் பூனைக்குட்டிகளும் பாதுகாப்பான அறைக்குள் பதுங்கிவிட்டோம். ‘பயந்தாங்கொள்ளி அப்பா...’ என்று என் குழந்தைகள் கைகொட்டிச் சிரித்தார்கள். இந்த அவமானத்திற்கெல்லாம் பயந்து  அபாயத்தை எதிர்கொள்ள முடியுமா? ஆனால் தீபாவளியன்று மாலை வெளியே சென்றே தீரவேண்டிய நிர்ப்பந்தம். மொத்த ஜனமும் ஒன்று ‘துப்பாக்கி’ பார்க்கப் போயிருக்கும், அல்லது  டி.வியில் ‘மங்காத்தா’ முன் அமர்ந்திருக்கும் என்று நானே முடிவு செய்துகொண்டு கிளம்பினேன்.

வசமாக கண்ணி வெடிகளுக்கு நடுவில் சிக்கினேன். நாலாபுறமும் இடையறாத தாக்குதல்கள். சரவெடிகளின் நெருப்புத்துளிகள் கார் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்தன. ராக்கெட்டுகள் பாதி  எரிந்த நிலையில் காரின்மீது வந்து விழுந்தன. சாலையோரம் கொட்டிக் கிடக்கும் மணல், குப்பைகளில் இருந்தெல்லாம் திடீர் திடீர் என வெடிகள் கிளம்புவதைக் கண்டேன். சாலைகளில்  வெடிப்பவர்கள், தெருவில் நடப்பவர்களையும் வாகனங்களில் செல்பவர்களையும் ஏதோ அற்பப்பிராணிகளைப் பார்ப்பது போல பார்ப்பது தெரிந்தது. ‘‘நீங்கள்லாம் இன்னைக்கு கூட ஏண்டா  வெளிய வர்றீங்க... இன்னைக்கு சிட்டி முழுக்க எங்க கையில இருக்கு’’ என்று அவர்கள் சொல்லாமல் சொல்வது எனக்குக் கேட்டது.

நான் தீபாவளி உட்பட எல்லா பண்டிகைகளையும் மனமுவந்து கொண்டாடுபவன்; எனது சமய நம்பிக்கையின்மைகளைக் கடந்து, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும்  என்னை இணைத்துக் கொள்ளவே எப்போதும் விரும்பியிருக்கிறேன். தினமும் ஒரு பண்டிகை வந்தால் நல்லதுதான் என்று குழந்தைகளைப் போலவே நானும் ஏங்கியிருக்கிறேன். மனிதர்கள்  தங்கள் மன அழுத்தத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் விடுபடும் ஒரு தருணமாகவே பண்டிகைகள் தோன்றியிருக்கின்றன. தீபாவளி அப்படி ஒரு உற்சாகமான பண்டிகையாகவே சிறு வயது  முதல் இருந்திருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்குள் ஏதோ ஒரு வன்முறை ஒவ்வொரு வருடமும் சேர்ந்துகொண்டே வருகிறது.

தீபாவளிக்கு பயணம் செய்யும் மக்களின் இன்னல்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கிடைக்கிற பஸ்களிலும் ரயில்களிலும் அடித்துப் பிடித்து ஏதோ போர்க்கால அகதிகளைப் போல  தங்கள் ஊர்களை நோக்கிச் செல்கிறார்கள். திரும்பி வரும்போதும் அதே நெருக்கடி. தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களின் பொருளாதார ரீதியான அழிவு, பெருமளவு மக்களை சென்னை  போன்ற பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர வைக்கிறது. தீபாவளிக்கு ஊருக்குப் போகிற இந்தப் பெரும் கூட்டம், பிழைப்பிற்காக இடம் பெயரும் மக்கள் குறித்த அவலச் சித்திரத்தையே  மனதில் எழுப்புகிறது.

சென்னையில் மழை பெய்தாலும் போக்குவரத்து நெரிசல். பண்டிகை வந்தாலும் போக்குவரத்து நெரிசல். மக்கள் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமோ, அப்போதெல்லாம்  பெரும் துன்பத்தை அவர்கள்மீது சுமத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்த நகரத்தை உருவாக்கியது போலிருக்கிறது. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே எல்லா இடங்களிலும் நெரிசல்  ஆரம்பமாகி விட்டது. கடைவீதிகளில் சொன்ன விலைக்குக் கிடைத்ததை வாங்கிக் கொண்டு மக்கள் தப்பிச் செல்லும் காட்சியை காண முடிந்து. ஸ்வீட் ஸ்டால், நகைக் கடை இரண்டிலும்  ஒரே மாதிரி கூட்டம். வாங்குவதற்கு மக்களுக்கு ஏராளமாய் இருந்தன. ஒரு பண்டிகை என்பது எப்படி ஒரு பிரமாண்டமான வர்த்தகத்தின் கேந்திரமாக மாறியது என்பது வினோதமானது.
தீபாவளியன்று குழந்தைகளுக்கு மத்தாப்புகள் வாங்கித் தருவது என்ற ஒரு எளிய நிகழ்வு இன்று பயங்கரமான வெடிகளின் மூர்க்கத்தனம் மிக்கதாக மாறிவிட்டது. ஏதோ பாறைகளை வெடி  வைத்துத் தகர்ப்பதுபோல ஊர் முழுக்க தகர்க்கிறார்கள். அந்தக் காலத்தில் கொஞ்சம் பயங்கரமான வெடி என்றால் மூன்றே மூன்றுதான். லட்சுமி வெடி, வெங்காய வெடி, அணுகுண்டு.  (அப்படித்தான் அதைச் சொல்வோம்!) மந்திரிகளிடையே வட்டச் செயலாளர்களைப் போல சீனி வெடிகள் கொஞ்சம் இருக்கும். இப்போது அதெல்லாம் கொசு என்பதுபோல படு பயங்கர  வெடிகள் எல்லாம் வந்துவிட்டன. தரையிலேயே வெடிப்பது, ஆகாயத்தில் வெடிப்பது, பத்தாயிரம் முறை இடைவிடாமல் வெடிப்பது என்று சத்தத்தை, பீதியை அதிகரிக்க என்னென்ன  உண்டோ... அத்தனையையும் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். நரகாசுரன் வதம் செய்ய்யப்பட்ட நாளில் இந்த வெடிகளில் ஒன்றுகூட மார்க்கெட்டில் இருந்ததாக புராணத்தில் குறிப்புகள்  இல்லை. பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிக்கும்போது மக்கள் மனதில் வெளிப்படும் உற்சாகம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.  


பட்டாசு மாசுகளால் விளையும் சுகாதாரக் கேடும் சுற்றுச்சூழல் கேடும் இன்னொரு கட்டுரைக்கான விஷயம். மக்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு பாதுகாப்பற்ற முறையில்  பட்டாசுகளைக் கொளுத்துகிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தீபாவளி பட்டாசுகள் உற்பத்தியில் தொடங்கி, அதை வெடிப்பது வரை ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்த ஆண்டு  தீபாவளியின்போது 150 தீ விபத்துகளுக்கு மேல் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, தீபம் ஏற்றுவது, ஸ்வீட் செய்வது, கோயிலுக்குப் போவது, புத்தாடை அணிவது போன்றவற்றுடன் குடி இவ்வளவு பெரிய சடங்காக  வரலாற்றில் எப்போது சேர்ந்தது என்று தெரியவில்லை. கொண்டாடுவது என்றாலே குடிப்பது என்று கற்றுக்கொண்ட ஒரு கலாசார குருட்டுத்தனத்தின் விளைவுதான் இந்த தீபாவளிக்குடி.  அதாவது தினமும் குடிப்பவர்கள் இரண்டு மடங்கு அன்று குடிப்பார்கள். தீபாவளியன்றும் அதற்கு முந்தைய நாளிலும் சேர்த்து 270 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் விற்பனை நடந்தது அதை  நிரூபித்திருக்கிறது.

குடி, வெடி, தொலைக்காட்சி இவற்றிற்கு அப்பால் மிஞ்சியிருக்கும் உண்மையான தீபாவளி என்பது மிகவும் சிறியது. அது தீபாவளி தினத்தில் ஏதோ ஒரு கணத்தில் தோன்றி  மறைந்துவிடுகிறது. சோனாவுக்கு வந்த சோதனைகள் நடிகை சோனா பற்றிய இரண்டு சர்ச்சைகள் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு நடுவே என் மனதை பாதித்தன. ‘‘ஆண்கள் எல்லாம்  ‘டிஷ்யூ’ பேப்பர் போன்றவர்கள்... பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்து விடுவேன்’’ என்று அவர் கூறியதற்கு, தமிழ்நாடு ஆண்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட  அறிவிப்பையும் வெளியிட்டது. (இப்படி ஒரு சங்கம் இருப்பதை அன்றுதான் அறிந்து, உடனடியாக அட்ரஸ் நோட் பண்ணிக்கொண்டேன்!) இதையடுத்து சோனாவின் ஆபீஸ், வீடு  ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு விட்டார்கள் சோனா சொன்னதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காலம்காலமாக பெண்களை டிஷ்யூ பேப்பராக  உபயோகித்த ஒரு சமூகத்தில், ஒரு பெண் எந்த நோக்கத்திற்காக அதைச் சொன்னாலும், அதற்கு அவளுக்கு உரிமை இருக்கிறது.

சோனாவின் இந்த ஸ்டேட்மென்ட்டை என் சிநேகிதி ஒருத்தியிடம் சொன்னேன். அதற்கு அவள், ‘‘நிறைய வீடுகளில் உள்ள ஆண்களுக்கு ஒரு டிஷ்யூ பேப்பரின் உபயோகம் கூட கிடையாது’’  என்றாள். நடிகர் எஸ்.பி.பி. சரண் தன்னிடம் பொது இடத்தில் தவறாக நடந்துகொண்டதாக சோனா இன்னொரு புயலையும் முன்பு கிளப்பினார். பொதுவாக ராம் சேனா ஆட்கள்தான்  பார்ட்டிக்குப் போகும் பெண்ககளிடம் தவறாக நடந்து கொள்வார்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன். ‘‘கவர்ச்சி நடிகையா இருந்தாலும், எனக்கு தன்மானம் கிடையாதா?’’ என்று அவர்  பேட்டியில் கேட்டார். நியாயம்தான். சாமியார் கொடுத்த ஃபத்வா ‘மீனவர்கள் சிலர் பேச்சைக் கேட்டு தன் மனைவி சீதையை தீக்குளிக்கச் சொன்ன ராமர் மிகவும் மோசமான கணவர்’ என்று  சொன்ன ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் அறிவித்துள்ளார். அநேகமாக  இந்தியாவின் விலையுயர்ந்த எச்சில் இதுவாகத்தான் இருக்கும்.

இதைப் படித்தபோது எனக்கு எழுத்தாளனாக இருப்பதன் சௌகர்யம் புரிந்தது. புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ கதையில், ராமரின் பாதம் பட்டு கல்லிலிருந்து உயிர்த்தெழுந்த அகலிகை  சீதையைச் சந்திக்கிறாள். சீதையிடம் அவள் தீக்குளித்தது பற்றிக் கேட்கிறாள். ‘‘அவர் கேட்டாரா... நீ செய்தாயா..?’’
சீதை அதற்கு, ‘‘அவர் கேட்டார்... நான் செய்தேன்...’’ என்கிறாள். ‘‘அவன் கேட்டானா?’’ என்று அலறுகிறாள் அகலிகை. ‘அவர்’ என்பது ‘அவன்’ என்று மாறும் அந்த ஒற்றைச் சொல்லில்  ஒரு யுகம் தலைகீழாக மாறுகிறது.
புதுமைப்பித்தன் அரசியல் வாதியாக இருந்திருந்தால் என்னாவது?
(இன்னும் நடக்கலாம்...)

நான் படித்த புத்தகம்


பரதகண்ட புராதனம்
ஆசிரியர்      : டாக்டர் கால்டுவெல்
பதிப்பாசிரியர் : பொ.வேல்சாமி

நமது வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அணுகுவதற்கு எப்போதும் மூன்று பாதைகள் இருக்கின்றன. முதலாவது, நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை கடவுளால் அருளப்பட்ட  வாசகங்களாகக் கருதி வாசிப்பது. இரண்டாவது, தீவிர மத எதிர்ப்பின் அடிப்படையில் அவற்றை முற்றாக மறுப்பது. மூன்றாவதாக, அவற்றை இலக்கியப் பிரதிகளாகக் கொண்டு, அவை  வெளிப்படுத்தும் உட்பொருளோடும் மறைபொருளோடும் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் பின்னணியில் மற்ற பிரதிகளோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்வது. ‘திராவிட மொழிகளின்  ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதி, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சரித்திரத்தையே உருவாக்கிய கால்டுவெல் எழுதிய இந்த நூல் மூன்றாவது வழிமுறையைப் பின்பற்றுகிறது.

நமது வேதங்களின்மீது இருக்கும் புனிதத் திரையை விலக்கி, அவை மனிதர்களுக்கும் இயற்கைக்குமான போராட்டத்தின் விளைவுகள் என்பதை முன் வைக்கிறது. மேலும் இந்து மதத்தை  காலமாற்றத்தால் விளைந்த பல்வேறு பரிமாணங்களுடன் ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்த நூலின் மொழி நடை, 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒரு  சுவாரசியமான ஆவணம்.
(விலை: ரூ.95/-, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி. சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600098. தொலைபேசி: 044-26251968.)

எனக்குப் பிடித்த கவிதை
புகார் காண்டம்
மீள முடியாத ஆழத்துக்குள்ளிருந்து
உன்னைப் பற்றி யோசிக்கிறேன்
கரையில் நீ காத்திருக்கிறாய்
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக
- ரமேஷ் பிரேதன்

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம் தரை தட்டி நிற்கும் கப்பலை மீட்கும் பணியை இரண்டாவது நாளாக பார்வையிட்டார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் - செய்தி அவரது யோசனைகள் கப்பலை மீட்கும் பணியில் எந்த அளவு உதவின என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்!