போடா போடி விமர்சனம்




‘இந்தியா, பாகிஸ்தானாக இருக்கும் இரண்டு காதலர்கள் இல்லறத்தில் இணைந்தால் அவர்களின் வாழ்க்கை ஆடு புலி ஆட்டமா, ஆனந்தத் தோட்டமா’ என ஒற்றை வரியை வைத்துக்கொண்டு  ‘போடா போடி’ விளையாட்டு விளையாடியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் சிவன்.

சின்னச் சின்ன தில்லாலங்கடி வேலைகள் செய்யும் சிம்புவும், சல்சா நடனம் ஆடி சாதிக்கும் வெறியில் இருக்கும் வரலட்சுமி சரத்குமாரும் சந்திக்கின்றனர். இதயம் நுழையும் காதலெல்லாம்  இல்லை. முறுக்கல், முட்டல், மோதலோடு அவர்களின் காதல் நிலைபெறவும் இல்லை; துவளவும் இல்லை. இருவரின் பிடிவாத வேதாளமும் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏற, அதற்கு  முடிவு சொல்வது க்ளைமாக்ஸ்.


சிம்புவுக்கு இது ஊதித் தள்ளக்கூடிய கேரக்டர். அதனாலேயே அலட்டிக் கொள்ளாமல் வருகிறார். ஒரு ஹாய், ஒரு ஹலோ சொல்லி முடிப்பதற்குள்ளேயே முளைக்கும் காதல் பொதுவாக  சந்திக்கும் எல்லா விஷயங்களும் இதில் நடக்கிறது.

நடனம், நண்பர்கள் என ஆழ்ந்து போய்விடும் வரூவைப் பார்த்து சிம்பு பொருமுவதும், எரிச்சல் ஆவதும் படு இயல்பு. சல்சா நடனத்தில் கட்டிப் பிடித்து ஆடும்போது சிம்புவுக்கு அனல்  கிளம்புவது படத்தின் சுவாரஸ்ய இடம். வரூவின் கையைப் பிடித்துக் கொண்டு ஏங்கும் சிம்பு, அடிக்கும் சில கமென்டுகளுக்குத்தான் தியேட்டரில் விசில். வரவர நடிப்பில் சிம்புவிற்கு  இயல்புத்தனம் மிளிர்கிறது. ஆனாலும் எப்பொழுது பார்த்தாலும் சிம்புவும் வரூவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது, முதல் பாதியின் நீளத்தைக் கூட செமத்தியாக சோதிக்கிறது.

சுபம் போடும் வரை காதலைச் சொல்லாமல் கலங்க அடிக்கும் கான்செப்ட்டிலிருந்து டோட்டல் கான்ட்ராஸ்ட் கதை. இளமையும், புதுமையும் கைகோர்த்து நின்றாலும், முன்பாதியில் கவனம்  செலுத்தியிருந்தால் பின் பாதிக்கு நாமே ஆசைப்பட்டு எதிர்பார்த்திருக்க முடியும். படத்தில் சல்சாவும், சிம்புவின் ஜல்ஜாவும் இருப்பதுதான் ஒரே ஆறுதல். ‘‘இந்தப் பொண்ணுங்க கல்யாணம்  ஆகிற வரைக்கும்தான் இப்படி இருப்பாங்க. ஒரு குழந்தை பெத்துட்டா சொய்ங்னு ஆகிடுவாங்க’’ என தலையை விடிவி கணேஷ் தொங்கவிடும்போது ஆண்களின் கைதட்டல் அதிர்கிறது.  அதைத் தொடராமல் பார்த்துக் கொள்வதில் அவரே தீவிரமாக இருக்கிறார்.

சிம்புவின் சேட்டையும், சில்மிஷமும் நடந்து கொண்டிருக்கும்போது, பிரசவ வேதனை என பெண்களின் புகழ்பாடுவது படத்தில் திடீரென வருகிற திருப்பம். ‘குழந்தைக்கு நீ அம்மான்னா நான்  அப்பா’ என பேசி கண்ணில் நீர் திரளும்போது வித்தியாச சிம்பு, சொந்தக்குரலில் படு ‘துணிச்சலாக’ பேசியிருக்கிறார் வரூ. சிம்புவிற்கு கொடுக்கிற அழுத்த முத்தங்களில் ஸ்கோர் செய்வதும்  அவரே. நளினமாக நடனமாடத் தெரிந்த அவர், அதோடு தன் உடலையும் அக்கறையாக கன்ட்ரோலில் வைக்க கொஞ்சம் எக்சர்சைஸும் செய்ய வேண்டியது அவசியம்.
லண்டனின் அழகு, டங்கன் டெல்ஃபோர்ட்டின் ஒளிப்பதிவில் கச்சிதம். தரண்குமாரின் பாடல்கள் திகட்டத் திகட்ட ஏழு. ஆனால் என்னவோ மனதைத் தொடாததுதான் உண்மை. முதல் பாடலில்  சிம்பு போடும் கெட்டப்கள் வேறு கிறுகிறுக்க வைக்கிறது நம்மை. ஆரம்பத்தில் சந்தானம் ஒரு காட்சியில் வந்து போனதும் நிமிர்ந்து உட்காருகிறோம். அதற்குப்பிறகு அவர் ஆளையே  காணோம்.
சிம்புவுக்கு சரி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விக்னேஷ் சிவன்!
- குங்குமம் விமர்சனக் குழு