நெஞ்சுக்குள்ளே சக்திஸ்ரீ!





‘‘ஹாய்... ஈவினிங் சிக்ஸ்... ஓ.கே?’’ புன்னகையுடன் அலைபேசியில் பேசினார் சக்திஸ்ரீ கோபாலன். எம் டி.வியின் அன்பிளக்டு நிகழ்ச்சியில் ஒரேயொரு பாடல். மணிரத்னத்தின் ‘கடல்’  படத்திலிருந்து, ‘நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்’ என்று இவர் அதைப் பாட, புகழின் உச்சிக்கு ஹெலிகாப்டரில் போய் இறங்கிவிட்ட எஃபெக்ட்!

‘‘ஹாய் சார்... கொஞ்சம் பிஸி!’’ நேர்த்தியுடன் வந்து அமரும் சக்தியின் அடுத்த புது வருஷம் முழுவதும் தமிழ்நாட்டுக்குத்தான். கேரளக் கரையோரத்திலிருந்து வந்தாலும், இனிக்க இனிக்க  தமிழ்.

‘‘ரெயின்போ மட்டும் இருக்கிறது ஒரு டைம். அழுத்தமா ரெயின் கொட்டுறது இன்னொரு டைம். நான் இப்போ அடுத்த கட்டத்தில் இருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டியில் பி.ஆர்க்  படிச்சிருக்கேன். இப்பகூட அந்த வேலைகளில்தான் இருக்கேன். சின்ன வயசிலிருந்தே இசை, பாட்டுன்னா பிடிக்கும். எம்.எஸ் அம்மா, நித்யஸ்ரீன்னு நின்னு நின்னு ரசிச்ச இடங்கள் நிறைய.
விஜய் ஆண்டனி மியூசிக்கில் ‘நான்’ படத்தில், ‘மக்காயாலா மக்காயாலா’ கூட என்னதுதான். ரஹ்மான் சார் இசையில் நிறைய வாய்ஸ் கொடுத்திருக்கேன். ரொம்ப உற்சாகம் கொடுப்பார்.  அவர் இவ்வளவு பெரிய லெஜண்ட்னு பயம் வந்து, நடுக்கம் வராதபடிக்கு இருப்பார். அதுதான் அவர்கிட்ட விசேஷம். இப்படித்தான் ஒருநாள், ‘கடல் படத்துல உன் குரலை பயன்படுத்தலாம்னு  இருக்கேன். இன்னும் நாலைஞ்சு நாளில் ‘எம்’ டி.விக்கு ஒரு படப்பிடிப்பு இருக்கும். ரெடியாயிரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். நல்ல இருட்டில் நடந்து போயிட்டிருக்கும்போது திடீர்னு  தெருவிளக்கு கண் விழிச்சா, அந்த வெளிச்சத்துக்கு நன்றி சொல்ற மாதிரி நம்மை அறியாம கும்பிட்டுக்குவோமே... அப்படி மனசுக்குள்ளே புதுசா ஒரு சந்தோஷம்!
ரஹ்மானே பக்கத்தில் உக்கார்ந்து அக்கார்டியன் வாசிச்சார். ஆண்டவன் பக்கத்தில் இருந்தது மாதிரி தைரியம். முடிச்சதும்‘வெரிகுட்’ சொன்னார் ரஹ்மான். அதிலேயே எல்லாம்  அடங்கிப்போயிருந்தது. இப்ப எல்லோரும் பாராட்டுறாங்க. இளைஞர்கள் ட்விட்டர், பேஸ்புக், நேரில்னு கொண்டாடுறாங்க. எனக்கு எல்லோருடைய அன்பும் ஆசீர்வாதமும் வேணும்.  ஒவ்வொரு மனசும் உணர முடியாத ஒரு ரகசியம். அதை இசைங்கிற கருவியால் கடவுள்தான் திறக்கிறார். அப்படிப் பார்த்தால் நாம எல்லோருமே கடவுளுக்கு பக்கத்தில் இருக்கோம்.  அனைவருக்கும் நன்றி’’ - கை கூப்புகிறார் சக்தி.
உச்சம் தொடுவதற்கான அத்தனை அடையாளங்களும் இருக்கின்றன அவரிடம்!
- நா.கதிர்வேலன்