அதிகார யுத்தம்!





‘அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம்’ என்ற நம்பிக்கையில் பாரதிய ஜனதாவில் இப்போதே பிரதமர் பதவிக்கு வெட்டு குத்து நடக்கிறது. திரைமறைவில் இத்தனை நாட்கள் நடந்து  கொண்டிருந்த யுத்தம் இப்போது வெளியில் வரக் காரணம், இரண்டு சம்பவங்கள்!

சம்பவம் 1: பி.ஜே.பி. தேசிய செயற்குழுவிலிருந்து மகேஷ் ஜெத்மலானி ராஜினாமா செய்தார். ‘ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நிதின் கட்காரி பி.ஜே.பி.யின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து  ராஜினாமா செய்ய வேண்டும். அவர் தலைவராக இருந்தால், தன்னால் பதவியில் நீடிக்க முடியாது’ என்று சொன்னார் மகேஷ். அவரது அப்பாவும், மூத்த வழக்கறிஞருமான  ராம்ஜெத்மலானியும் கட்காரிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார்.

சம்பவம் 2: ‘‘கட்காரியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்குப் பின்னணியில் நரேந்திர மோடி இருக்கிறார். அவருக்கு எதிரான ஊழல் புகார்களும், நரேந்திர  மோடியை பிரதமராக்கும் பிரசாரமும் குஜராத்திலிருந்தே கிளம்பின’’ என்று தனது வலைத்தளத்தில் எழுதினார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீனியர் தலைவர் மோகன் வைத்யா.


‘‘இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து இல்லை’’ என மறுநாளே மறுப்பு வந்துவிட்டாலும், உண்மைகளை மறைக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்லப்பிள்ளை நிதின்  கட்காரி. அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவசரமாக ஆராய்ந்து, ‘அவர் தனது பதவியைப் பயன்படுத்தி ஊழல் எதுவும் செய்யவில்லை’ என குருமூர்த்தி தீர்ப்பு சொல்லிவிட்டார்.  கட்காரியின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லை. அவருக்கு இன்னொருமுறை பதவி நீட்டிப்பு தந்து, மேலும் 4 ஆண்டுகள் தலைவராக வைத்திருக்க  ஆர்.எஸ்.எஸ். ஆசைப்படுகிறது. ஆனால், கட்சியின் சீனியர் தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக சந்தேகம் வலுத்திருக்கிறது.

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற மூத்த தலைவர்கள் சந்திப்பின்போதே, கட்காரியின் எதிர்காலம் கேள்விக்கு ஆளானது. ‘கட்காரிக்கு இரண்டாவது முறை தலைவர் பதவி தரப்படாது  என்று உறுதிமொழி தந்தால்தான் கூட்டத்தில் கலந்துகொள்வேன்’ என அத்வானி முரண்டு பிடித்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் தலையிட்டு, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி,  ராஜ்நாத்சிங் போன்றவர்களை கூட்டத்தில் பங்கேற்க வைத்தார். வேறு வழியின்றி, ‘‘எனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை’’ என அத்வானி சொல்ல வேண்டியதாயிற்று.

‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நியமிக்கும் தலைவர்கள் அவ்வளவு திறமையாக செயல்படுவதில்லை’ என பி.ஜே.பி மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். குஜராத்தில் தேர்தல் நடக்கும் நேரத்தில்  இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய உற்சாகத்தைத் தந்திருக்கிறது.
- அகஸ்டஸ்