இது ஆழ்வார்பேட்டை : பீட்சா





‘நிலம்’ புயல் கடந்தும் கடக்காத ஒரு நாளின் மாலை நேரத்தில் தெரியாத்தனமாக அந்தத் தெருப் பக்கம் போய்விட்டோம். ‘‘பேய் வரும்போது கதவெல்லாம் படபடன்னு அடிக்கும்...  தூரத்துல நாய் கத்தும்’’ என ‘சந்திரமுகி’யில் ரஜினி சொன்ன அத்தனை சிம்ப்டம்ஸோடும் வரவேற்றது டிமான்டி காலனி. சினிமாக்களில் வரும் பாழடைந்த பேய் பங்களா போல, காலம்  காலமாக சென்னையில் கிசுகிசுக்கப்படும் பாழடைந்த பேய் ‘தெரு’!

‘பேய் நம்பிக்கை’ என்றதும், சிட்டிக்கு வெளியே ஆந்திரா பார்டரில் ஒரு அமானுஷ்ய இடம் என்று கற்பனை செய்யாதீர்கள். நட்ட நடு சிட்டியில், ஆழ்வார்பேட்டை பார்க் ஷெரட்டன்  ஹோட்டலுக்கு எதிரே சிறு சந்தாகப் பிரிகிறது இந்த திகில் பிரதேசம்!

‘‘சிட்டின்னுதான் சார் பேரு... ஆனா, இந்த ஏரியாவுக்குள்ள யாரும் வர மாட்டாங்க. அல்லா வூடும் ஒரே மா(தி)ரி வெள்ளக்காரன் காலத்துல கட்டுனது. இத்த கட்டுன நேரம்... அந்தாளு  பொண்டாட்டிக்கு பைத்தியம் புட்சிட்சாம். பையன் வேற அல்பாயுசுல பூட்டானாம். பாவம், ஃபேமிலிய ஒரு ஆட்டு ஆட்டிட்ச்சினு நெனைக்கறேன். ஒடனே அந்தாளு துண்டக் காணோம் துணியக்  காணோம்னு இத்த உட்டுட்டு கோவளம் பக்கம் வூடு வாங்கினு பூட்டானாம். அப்புறம் எவன் எவனோ வந்து தங்கிப் பார்த்திருக்கான். கம்பெனிக்காரங்கல்லாம் லீசுக்கு எட்த்து  வேலக்காரங்களை தங்க வச்சிக்கிறாங்க. ம்ஹும்... எவனாலயும் தாக்குப் புடிக்க முடியல. எல்லாம் பேயி பயம். ஆறு மணிக்கு மேல இங்க ஈ, காக்கா வராது’’ என்று முதல் வாக்குமூலம்  கொடுத்த சின்னத்தம்பி, பக்கத்துத் தெரு ஃப்ளாட்ஸில் வாட்ச்மேன். இதேஏரியாவில் 15 வருடங்களாக வசிப்பவர். பேச்சின் இறு தியில் செய்கையால் நம்மை அருகில் அழைத்து, ‘‘அந்தப் பேய  நெறிய பேரு நேர்லயே பாத்துக்கிறானுங்க’’ என்று காற்றுக் குரலில் பேசி கதிகலங்க வைத்தார்.


அவர் சொன்னது போலவே எல்லா வீடுகளும் அடுக்கி வைத்தது போல ஒரே மாதிரியாக கட்டப்பட்டிருக்க, ஆள் அரவமில்லாமல் அனைத்தும் புதர் மண்டிக் கிடக்கின்றன.  பராமரிப்பில்லாததால் ஆலமரங்களும் அரச மரங்களும் சுவர்களில் முளைத்து தரை வரை வேர் விட்டிருக்கின்றன. ரியல் எஸ்டேட் தறிகெட்டு எகிறியிருக்கும் சென்னையின் காஸ்ட்லி  ஏரியாக்களில் ஒன்றான இங்கு இப்படி ஒரு இடமா என்று வாய் பிளக்க வைக்கிறது சுற்றுப்புறம்.

டிமான்டி என்ற போர்ச்சுகீசிய பணக்காரர்தான் இதைக் கட்டிய அந்த ‘வெள்ளக்காரன்’. அவருக்குப் பிறகு இது சாந்தோம் தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால்  சில வீடுகளை மட்டும் இடித்து, புது கட்டிடம் கட்டி, தேவாலயம் சம்பந்தப்பட்ட ஆட்களைத் தங்க வைத்திருக்கிறார்கள். மற்ற பகுதிகள் எல்லாம் அமேசான் காடுதான்.
அந்தத் தெருவில் பகலில் மட்டும் சாப்பாட்டுக்கடை போடும் பாக்கியத்திடம் பேசினோம்.

‘‘பேய் இருக்குன்றாங்க. முன்னாடி ஒரு தடவை கொலை நடந்திச்சி, தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்றாங்க. ஆனா, நான் எதையும் கண்ணால பார்த்ததில்ல. எதுக்கு வம்பு? ஆனா,  இங்க ஒடஞ்சி கிடக்கிற வீடுகள்ல கொஞ்சம் தெலுங்குக்காரங்க மட்டும் குடியிருக்காங்க’’ என்று அவர் சொல்லும்போதே, ‘அவன் வெளியூர்க்காரன்... உள்ளூர் மேட்டர் தெரிஞ்சா  கிழிஞ்சிறாது’ என மைண்ட் வாய்ஸ் கேட்டது.

சொந்தமாக லாரி வைத்து ஓட்டும் ராதாகிருஷ்ணன் தன் லாரியைப் பிரித்துப் போட்டு பழுது பார்ப்பது, இந்த ஏரியாவில்தான்.
‘‘பேய் நடமாட்டம் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன்னா, நான் நைட்டுல இங்க இருக்குறதில்ல. ராத்திரி இங்க வெளிச்சமே இருக்காது சார். பேய உடுங்க... இந்த தெருவ பாத்தீங்களா.  குப்பை கொட்டுறது, தண்ணி அடிக்கிறதுன்னு ஏரியாவே நாறிக்கெடக்குது. அப்புறம் எப்படி ஆளுங்க இருப்பாங்க? பில்டிங் எல்லாத்தையும் இடிச்சு சுத்தம் பண்ணினாத்தான் எல்லாம்  சரியாகும்!’’ என்றவரிடம், ‘‘பேய நேர்ல பார்த்தவங்க...’’ என்று பம்மினோம்.



தெருவின் மையத்தில் இருக்கும் மாநகராட்சி பூங்கா வாட்ச்மேன் நாகராஜனைக் கை காட்டினார் அவர்.
‘‘நான் இங்க அஞ்சு வருஷமா வேல செய்றேன். இந்த பார்க்குக்கு பக்கத்துல ஒரு மா மரத்துலதான் ஒண்ணரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் செத்துக் கிடந்தான். அவனா தூக்கு  மாட்டிக்கிட்டானா... இல்ல, பேய் அடிச்சுருச்சான்னு ஒரே களபரமா இருந்தது அப்போ. அந்த மேட்டர் நமக்குத் தெரியல... ஆனா, நான் பேயப் பாத்திருக்கேன். விடிகாலை மூணு, மூணரை  இருக்கும். வெள்ளச் சேலையில ஒரு உருவம்... அதுக்கு கால் விரலெல்லாம் பின்பக்கமா இருந்துச்சி. ‘அண்ணா’ன்னு கூப்பிட்டுச்சு. நான் பேய்க்கு பயப்படாத ஆளு. அதனால கெட்ட வார்த்த  போட்டு அத திட்டினேன். அடிச்சு சுடுகாட்டுல போட்ருவேன்னு மிரட்டினேன். அப்புறம் அது என் நெத்தியில நாமம் போட்டுட்டு போயிடுச்சு’’ என்று பெருமை பொங்க விவரித்தபோதே  நாகராஜன் வாயிலிருந்து நமக்கு நெடி அடித்தது.

இப்படி ஆளுக்கொரு கதையைக் கிளப்பிவிட்டு அநாவசியமாய் பீதியைக் கிளப்புவது தெரிந்தாலும், கிரவுண்ட் எத்தனை கோடி என்று கேட்கும் ஏரியாவில், இப்படியாவது கொஞ்சம் பசுமை  மிச்சமிருப்பது ஆறுதலாகத்தான் இருக்கிறது.
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்