துப்பாக்கி விமர்சனம்





தமிழ் சினிமாவில் தீவிரவாதிகளை வேரறுக்கும் கேங்கில் விஜய்காந்த், அர்ஜுனுக்கு அடுத்தபடியாக விஜய்க்கும் ஒரு அட்மிஷன் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.  அப்புறமென்ன... விஜய்க்கு இது ஆக்ஷன் படம்தான்.மிலிட்டரியிலிருந்து விடு முறைக்கு ஊருக்கு வரும் விஜய், காஜலை பெண் பார்க்கச் செல்கிறார். தீவிரவாதிகள் திட்டமிட்டு பாம்  வைத்துவிட, தொடர் குண்டுவெடிப்புக்கு பிளான் செய்யப்பட்டதை அறிகிறார் விஜய். ஜவானாகவும், சீக்ரெட் ஏஜென்டாகவும் இருக்கிற அவரே லீவ் நாட்களில் அந்தப் பிளானை  முறியடிக்கிறார். வில்லன் டென்ஷனாகி விஜய்யைத் தேட, விஜய் வில்லனைத் தேட... அதிரடி ஆக்ஷனில் படபடத்து ஆரம்பிக்கிறது படம். அப்புறம் என்ன, துப்பாக்கியிலிருந்து தோட்டாவாகச்  சீறும் விஜய் தீவிரவாதிகளை முறியடித்து, தேசத்தைக் காப்பதே கதை.

தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, இதற்கு மூளையாகச் செயல்படும் தலைமை என கதை பழைய பிராபர்ட்டியாக இருந்தாலும், ‘ஸ்லீப்பர் செல்’ என்ற பெயரில் அடையாளமின்றிக் காத்திருந்து  அட்டாக் செய்யும் பயங்கரவாதத்தை இதில் லைனாகப் பிடித்திருக்கிறார் முருகதாஸ். வில்லனும், ஹீரோவும் எதிர் எதிரே நின்று நரம்பு புடைக்க கத்துவதும், ரத்தம் தெறிக்கும்  ரணகளமுமாக இல்லாமல் படத்தை ஸ்டைலாக கொடுத்திருப்பதால் அவருக்கு ஒரு பூங்கொத்து.

விஜய்யின் ஆக்ஷன் ப்ளஸ் ரொமான்ஸில் முன்பை விட பக்குவம் பளிச்சிடுகிறது. படத்தில் ஒரே ஒரு பஞ்ச் டயலாக் கூட கிடையாது. அதைவிடவும் ஆச்சர்யம்... ஒரு குத்துப்பாட்டு கூட  கிடையாது. வில்லன்களை அவர்களின் கையாலேயே சுட வைத்து சாகடிக்கும் காட்சியில் ஆர்ப்பாட்டமின்றி அதகளப்படுத்துகிறார் விஜய். காஜலிடம் லந்தடித்து ரசிக்க வைப்பதும் வேடிக்கை.

காஜல் படம் மொத்தமும் காமெடி பீஸாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அப்பாவின் கன்னத்தில் அறை விடுவது, பார்த்த மாத்திரத்தில் ‘அவ சரியான மேட்டர்’ என அடையாளம் சொல்வது  என்று ரொம்பவே ‘அடக்க ஒடுக்கம்’ காட்டுகிறார். உடம்பு அவர் கட்டுப்பாட்டை விட்டு போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. காஜலிடம் வழக்கமான சார்மிங் மிஸ்ஸிங் -  எச்சரிக்கை அம்மணி!

ராணுவத்தில் தான் சீக்ரெட் ஏஜென்ட் என்பதை வீட்டுக்குக்கூட சொல்லாமல் மறைக்கும் விஜய், நண்பனே என்றாலும் சத்யனிடம் கொட்டுவது ஏனோ? பன்னிரெண்டு தீவிரவாதிகள்  கொல்லப்படும்போது சிட்டி போலீஸே சும்மா இருப்பதும், எல்லாவற்றையும் கமிஷனர் மாதிரி விஜய்யும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யனும் சேர்ந்தே டீல் பண்ணுவதும் காதுல பூ. ஒன் மேன்  ஆர்மியாக சர்வசாதாரணமாக செயல்படும் லாஜிக் ஓட்டையில் லாரி மண் கொட்டலாம். ஆச்சர்யம், வில்லன் வித்யுத் ஜம்வாலுக்கு டைரக்டர் கொடுத்திருக்கிற இடம். காட்டுத்தனமாக  கத்தாமல், 12 பேரை போட்டுத் தள்ளிய விவகாரத்தில் துப்பறிவது நல்ல ட்விஸ்ட். அதிரடியான சண்டைக்காட்சிகளில் ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் நுணுக்கம் தெரிகிறது. சாரி ஹாரிஸ்! அவரின்  இசையில் ‘கூகுள்... கூகுள்...’ மட்டுமே முணுமுணுக்கும் ரகம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு வேண்டிய அளவிற்கு இருக்கிறது.

லாஜிக்கோடு வரும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், வெறும் மசாலாவாக ஆக்கி விடாமல் கடைசியில் தேசம் காக்கும் வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதில்  டைரக்டரின் சாமர்த்தியம் வெளிப்படுகிறது. வித்தியாச விஜய். ஆனாலும் படத்தின் ஹீரோ ஏ.ஆர்.முருகதாஸ்தான்!
- குங்குமம் விமர்சனக் குழு