வழக்காறுகளை தோண்டும் தோட்டக்காரன்





‘‘எழுதி உலகத்தை ஜெயிக்கவெல்லாம் எழுத வரலே... உள்ளுக்குள்ள இருக்கிற வலியை எழுத்தைக் கொண்டு ஆத்திக்கிறேன்... அவ்வளவுதான்! இன்னைக்கும் வலிக்க வலிக்க  அடிச்சுக்கிட்டிருக்கிற மேல்தட்டு மக்களை எதுத்துக் கேக்கமுடியாம, ‘நீ குட்டிச்சுவராப் போயிருவே’ன்னு மனசுக்குள்ளயே திட்டிட்டு அமைதியாப் போறான் பாருங்க... அந்தமாதிரி எழுதிட்டுப்  போறேன்...’’ - உணர்வுபூர்வமாகப் பேசுகிறார் பாப்லோ அறிவுக்குயில் என்கிற அறிவழகன். தலித் விடுதலையையும், விளிம்பு நிலை மக்களின் வழக்காறுகளையும், மறைந்துபோன கலாசாரக்  கூறுகளையும், மனித முரண்பாடுகளையும் உள்ளீடாகக் கொண்டு எழுதும் இவர், அரியலூரை ஒட்டியுள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். தோட்டத் தொழிலாளி. ‘கிளுக்கி’,  ‘வெயில் மேயும் தெருவில்’, ‘குதிரில் உறங்கும் இருள்’, ‘பாப்லோ அறிவுக்குயில் சிறுகதைகள்’ ஆகியவை, காத்திரமான தலித் இலக்கியப் படைப்பாளியாக அறிவுக்குயிலை  அடையாளப்படுத்தும் நூல்கள்.

‘‘எல்லா நாடுகள்லயும் பிறக்குற குழந்தை ஆணாவோ, பெண்ணாவோ, திருநங்கையாவோதான் இருக்கு. ஆனா இங்கே மட்டும்தான், பிறக்கும்போதே குழந்தைகள் மேல ஜாதி அடையாளம்  ஒட்டியிருக்கு. குறிப்பா, தலித் குழந்தைக்கு பள்ளிக்கூடமே பலிபீடமாயிடுது. ‘நீயெல்லாம் ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வர்றே’ன்னு ஆசிரியரே அந்நியப்படுத்தலை தொடங்கி வைக்கிறார். எங்க  அப்பா இந்த விஷயத்துல கொஞ்சம் புரட்சி செஞ்சவர். முரட்டுத்தனமான ஆளு. இந்த சுத்துவட்டாரத்துலயே ராணுவத்துக்குப் போன முதல் மனுஷன். வீதியில நாற்காலியைப் போட்டு,  கால்மேல கால் போட்டுக்கிட்டு சிகரெட் புடிச்சபடி தெனாவட்டா உக்காந்திருப்பார். அது ஒரு எதிர்ப்புணர்வு. எதிர்ப்பு இல்லாத இடத்திலதான் ஆதிக்க வர்க்கம் வேலையக் காமிக்கும். தாத்தா  சுவாமிநாதன் தவில் கலைஞர். அம்மானை பாடினார்னா நேரம் போறது தெரியாம கேக்கலாம். நிறைய கதை சொல்லுவார். அவரோட கதைகள்தான் என்னையும் கதைசொல்லியா  மாத்தியிருக்கணும். அம்மா பேரு நாகரத்தினம். நல்ல வசதியான குடும்பத்தில பிறந்தவங்க. நான் மூணாவது வரைக்கும் வெண்மான்கொண்டான்ல படிச்சேன். அதுக்குப்பிறகு டேராடூனுக்கு  எங்களை அழைச்சுக்கிட்டுப் போயிட்டார் அப்பா. அப்புறம் அங்கிருந்து பூனாவுக்குப் போனோம். தொடர்ந்த இடம் பெயரல் பால்யத்தோட கொண்டாட்டங்களை சிதைச்சிருச்சு.



ஒண்ணும் பெரிய வித்தியாசமில்லை. தமிழ்நாட்டுல ஜாதிப்பிரச்னைன்னா, வடநாட்டுல இனப்பிரச்னை. எந்த பயலும் என்னை விளையாடச் சேத்துக்க மாட்டான். அங்கேயும் தனிமைதான்.  ‘மதராசி குத்தா ஆஹையா’ன்னு திட்டுவான். அங்கேயும் தனிச்சே வாழவேண்டி யிருந்துச்சு. அப்புறம் அப்பாவை அசாமுக்கு மாத்திட்டாங்க. அம்மாவோட ஊரான உட்கோட்டைக்கு  வந்துட்டோம். இதுக்கிடையில இரண்டு தங்கைகளும் பிறந்துட்டாங்க.

7ம் வகுப்பு படிக்கும்போது, எதிர்பாராத சோகம்... பணிக்காலம் முடிச்சு ஊருக்கு வந்த அப்பா, அரசு சிமென்ட் ஆலையில டிரைவரா வேலைக்குச் சேந்தார். திடீர்னு ஒருநாள் இன்னொரு  பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டார். அதுவரைக்கும் வரப்பக்கூட மிதிச்சுப் பாக்காத அம்மா, களையெடுக்கவும், கதிரறுக்கவும் போய் எங்களுக்கு கஞ்சி ஊத்தவேண்டிய நிலை.  அப்பா எங்க படிப்புச் செலவை மட்டும் ஏத்துக்கிட்டாரு.

என் வாசிப்பு தொடங்கினது, உட்கோட்டையில ஆசிரியையா இருந்த எங்க பெரியம்மா வீட்டில தான். நிறைய வாசிப்பாங்க. ஷெல்ப் நிறைய புத்தகம் வச்சிருப்பாங்க. சிறுவர் கதைகள்  தொடங்கி, நவீன தலித் இலக்கியம் வரைக்கும் இருக்கும். அந்த அறைதான் என் உலகம். பிளஸ் 2 முடிச்சபிறகு, தமிழ் படிக்கணும்னு ஆசை. ‘தமிழ் படிச்சா வீட்டுல உக்காந்து பேப்பர்தான்  படிக்கலாம். ஒரு வேலையும் கிடைக்காது. கெமிஸ்ட்ரி படிடா’ன்னாரு அப்பா. தமிழ்தான் படிப்பேன்னு நின்னேன். ‘நான் சொல்றதைக் கேக்கலன்னா படிப்புக்குப் பணம் தரமாட்டேன்’னு  மிரட்டுனார். வேற வழியில்லாம கெமிஸ்ட்ரி சேந்தேன்.

கல்லூரி வேறுமாதிரியான உலகம். இடதுசாரி இயக்கங்களோட தொடர்பு கிடைச்சுச்சு. வாசிப்பு உலகமும் விரியத் தொடங்குச்சு. பூர்ணசந்திரன்னு ஒரு பேராசிரியர். அவர்தான் என்  வாசிப்பையும், எழுத்தையும், களத்தையும் நேர்ப்படுத்துனவர். என் தோழன் அருள், நவீன இலக்கியங்களை அறிமுகப்படுத்துனான். ஜாதீய அடக்குமுறை, தீண்டாமைக்கு எதிரா நானும்  கவிதைகள் எழுதத் தொடங்குனேன்.

கவிதை குடியிருக்கிற மனதுல காதல் வர்றது இயல்புதானே..? புயல் மாதிரி வந்துச்சு ஒரு காதல். ஆறேழு மாதம் அதிவேகமா நகர்ந்த காதல், ஒரே வருடத்தில உச்சத்துக்குப் போயிடுச்சு.  திடீர்னு ஒருநாள் வீட்டுக்கு வந்து நின்னா... எல்லாரும் சேந்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்போ நான் முதல் வருட மாணவன். கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் கல்லூரிக்குப்  போனோம். ஆனா, எனக்கு படிப்பு ஒட்டலே. நான் விரும்பாத ஒரு பாடம்... வயசுக்கு மீறிய திருமணச் சுமை... எல்லாம் சேந்து அழுத்தத் தொடங்குச்சு. அப்பாவை பழிவாங்குறதா நினைச்சு,  தேர்வெழுதாம விட்டுட்டேன். பரிபூரணமான புரிதலுக்கும், காதலுக்கும் பக்குவம் அவசியம். பதினேழு, பதினெட்டு வயசுல வர்ற காதல் வெறும் இனக்கவர்ச்சி. வாழ்க்கையை முடக்கிப்  போட்டுடும். அதை அனுபவபூர்வமா உணர்ந்தேன். லட்சியமெல்லாம் கருகிப் போயிட்ட மாதிரி இருந்துச்சு. ‘பூ வாங்கக்கூட சம்பாதிக்க மாட்டேங்கிற, எல்லாத்துக்கும் அப்பாகிட்ட போய்  நிக்குறே, வெட்கமா இருக்கு... வா தனியாப் போயிடலாம்’னு கூப்பிட்டா. வைராக்கியத்துல 50 ரூபாய்க்கு ஒரு வீடு பாத்துக்கிட்டு கிளம்பிட்டேன். ஒரு செராமிக் பைப் கம்பெனியில  வேலைக்குச் சேந்தேன். கருத்து வேறுபாடும், மன இறுக்கமும் அதிகரிச்சுக்கிட்டே போச்சு.. ஒரு கட்டத்துல, வேறொரு வாழ்க்கையை தேர்வு பண்ணிக்க வேண்டிய நெருக்கடி அந்தப்  பெண்ணுக்கு!

இனி வாழ ஒண்ணுமே இல்லைங்கிற விரக்தி... செத்துடலாமான்னு கூட தோணுச்சு. ஆனா கொஞ்ச நாள்லயே தெளிவடைஞ்சுட்டேன். வேதனையையும் கோபத்தையும் எழுத்தால  தணிச்சுக்கிட்டேன். உரைநடையும், சிறுகதையும் பழகினேன். நிறைய தலித்திய நாவல்கள் வாசிச்சேன். நவீன படைப்பாளிகளை உள்வாங்குனேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எழுத்தால  அதிர வச்ச பாப்லோ நெருடா என்னை ரொம்பவே பாதிச்சார். என் சமூகத்தின் நிறம் கறுப்பு. அதுவே விடுதலைக்கான நிறமும். கறுப்பின் பிம்பமா இருக்கிற குயிலை பெயரோட இணைச்சு,  பாப்லோ அறிவுக்குயில்னு பேரை வச்சுக்கிட்டு எழுதத் தொடங்குனேன். என் கொள்கைக்கு உடன்பட்ட எல்லா இதழ்கள்லயும் படைப்புகள் வரத் தொடங்குச்சு. சாப்பாடு வேணுமே..?  பாண்டிச்சேரியில ஒரு ஓட்டல்ல வெயிட்டரா கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். நினைவுகளோட அழுத்தத்தால திரும்பவும் ஊருக்கு வந்து, எல்ஐசி ஏஜென்டா இருந்தேன். என் குணத்துக்கு  வசதிப்பட்ட வேலை. இனி எழுத்தைத் தவிர வாழ்க்கையில வேறெந்த இலக்கும் இல்லை.



அரியலூர் அரசுக்கல்லூரியில பணிபுரிஞ்ச பேராசிரியர் அ.மார்க்ஸை சந்திச்சபிறகு, என் எழுத்தும் வாழ்க்கையும் மாறுச்சு. உணர்வுகளால நிறைஞ்சு கிடந்த என் படைப்புகளை செதுக்கி,  ஒழுங்குபடுத்தினவர் அவர்தான். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தன் உலக இலக்கியமே செஞ்சாலும்கூட, அதை அங்கீகரிச்சு வெளியிடுறது சாத்தியமில்லை. அதனாலேயே அறிவுலகத்துல  தலித்களோட பங்களிப்பு குறுகிப் போயிருக்கு. இதை உணர்ந்த அ.மார்க்ஸ் ‘விளிம்பு டிரஸ்ட்’னு ஒரு டிரஸ்ட்டை ஆரம்பிச்சு தலித் இலக்கியங்களை வெளியிட முடிவு செஞ்சார். முதல்  வெளியீடா அவர் தேர்வு செஞ்சது என்னோட சிறுகதைகளை. அங்கிருந்துதான் என்னோட ‘கிளுக்கி’ வெளிவந்துச்சு.

இனிமே குடும்ப வாழ்க்கையே தேவையில்லைன்னு முடிவோட இருந்தேன். கீழக்கொளத்தூர் தொடக்கப்பள்ளியில ஆசிரியையா இருந்த செல்லம் டீச்சர் என்னை இளக வச்சுட்டாங்க. வாசிப்பு,  ரசனை, சிந்தனை எல்லாம் ரெண்டு பேரையும் ஒரே நேர்க்கோட்டில இணைச்சுச்சு. அவங்களும் மணமுறிவு பெற்றவங்க. ஒரு கட்டத்துல திருமணத்துல இணைஞ்சோம். அதுக்குப் பிறகு  எல்ஐசி வேலையையும் விட்டுட்டேன்.

இப்போ வாழ்க்கை வேறு வடிவம் எடுத்திடுச்சு. யாராவது தோட்ட வேலைக்குக் கூப்பிட்டா போறதுண்டு. மற்றபடி வீடும், என் தோட்டமும், என் நாய்களும், என் கோழிகளும்தான் உலகம்.  எங்க தனிமையைப் போக்குறது இந்த குழந்தைகள்தான். தென்னை, மா, பலா, சப்போட்டான்னு ஒரு பழத்தோட்டம் போட்டிருக்கேன். பள்ளிக்கூட வயசுல அம்மா என்னை அரவணைச்ச மாதிரி  இப்போ செல்லம் டீச்சர். தாயோட சிறகுக்குள்ள இருக்கிற கோழிக்குஞ்சு மாதிரி இருக்கு மனசு. தினமும் வாசிக்கிறேன். எப்பவாவது எழுதுறேன். என்னைக்காவது வேலைக்குப் போறேன்.  வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு... கடைசி காலத்துக்குள்ள உருப்படியா எதையாவது எழுதி விட்டுட்டுப் போவேன். எனக்கு மட்டுமில்ல, செல்லம் டீச்சருக்கும் அதுதான் லட்சியம்!
- வெ.நீலகண்டன்
படங்கள்:ஜா.குணசேகரன்