எடை





வாழ்க்கையில் முதன்முதலாக வீட்டுக்குக் காய்கறிகள் வாங்க மார்க்கெட் கிளம்பினார் கந்தநாதன். இன்று தனது வியாபாரத் திறமையைப் பார்த்து மனைவி சுபலட்சுமி வாயடைத்துப் போக  வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக் கொண்டார்.

அழுத்தி, கிள்ளி, ஒடித்து, முகர்ந்து பார்த்து கவனமாகத் தேர்வு செய்தார். எடை சரியாகவும் விலை குறைவாகவும் கறாராகப் பேசி வாங்கினார்.

சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்தவர், ‘‘சுபா, இந்தா பிடி! எவ்வளவு சீப்பா அள்ளிட்டு வந்திருக்கேன் பார்’’ எனப் பெருமையாகச் சொல்லிவிட்டு திண்ணைப் பக்கம் நகர்ந்தார்.
சற்று நேரத்தில் வீட்டுக்குள் சரவெடி!

‘‘கத்திரிக்கா, வீட்டு வாசல்ல வண்டிக்காரன்கிட்டயே கிலோ பத்து ரூபா. நீங்க பதிமூணு ரூபா குடுத்துட்டு, பாதி சொத்தையும் பாதி முத்தலுமா வாங்கியிருக்கீங்க. எடையும் முக்கா  கிலோதான் இருக்கும் போலிருக்கு. எல்லா காய்கறியும் எடையில பாதியக் காணோம். சரியா எடை பாத்து நல்ல பொருளாப் பார்த்து வாங்க துப்பில்ல... வாய் மட்டும் வண்டித்தடமாட்டம்  நீளுது...’’

ஒருவழியாக சுபலட்சுமியின் ஆலாபனை முடிந்ததும், கமுக்கமாக கடை சாவிகளை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டினார் ரேஷன் கடைக்கார கந்தநாதன்.