கொல வெறி ரெடி!





‘‘நிச்சயமா ஒருத்தனைக் காதல் மாத்தும். இங்கே எல்லாமே காதல்தான்! மண் மேல, மனுஷன் மேல, மரம், செடி, கொடிகள் மேல வைக்கிற அன்பு அத்தனையும் காதல்தான். நான் படிச்சு  வந்தது பாலுமகேந்திரா பள்ளி. அவர் சொன்னதும், கேட்டதும் எனக்குப் பாடமா ஆகி வந்திருக்கு. அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே எனக்கு தரிசனமா கிடைச்சிருக்கு.  ‘எதிர்நீச்சல்’, காமெடியும் காதலும் இணைந்து வர்ற கதை. எல்லாத்தையும் சிரிக்கச் சிரிக்க சொன்னா ஏத்துக்கிற மனசு நம்மோடது. சொல்ல எவ்வளவோ இருக்கு. அதுவும் பாலுசார்கிட்டே  இருந்து வந்ததால், எக்கச்சக்கமாவே இருக்கு!’’ - மூச்சு விடாமல் வார்ப்பாகப் பேசுகிறார் டைரக்டர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார். பாலுமகேந்திரா, வெற்றி மாறனின் கலை வாரிசு.

‘‘எப்படியிருக்கும் எதிர்நீச்சல்?’’
‘‘இந்தத் தலைப்பைப் பார்த்தா முதலில் நெகட்டிவ் மாதிரித் தெரியும். ஆனாலும் பின்னணியில் இதற்கு பாஸிட்டிவ் தன்மை இருக்கு. இதில் வருகிற நாயகனை மாதிரி நாமே பத்தில் ரெண்டு  பேரை பார்த்திருப்போம். ஏன், நாமே அந்த மாதிரியும் இருக்கலாம். காமெடி என்னைப் பொறுத்தவரைக்கும் சுலபமில்லை. இந்தப் படத்துல நுட்பமும் சினிமா மொழியும் அமைஞ்சிருக்கு.  எதுக்கும் தீர்வு சொல்றது என் வேலையில்லை. ‘இப்படி இருக்கு, இன்னவிதமா நடந்திருக்கு’ன்னு தீர்வை, பார்க்கிற ரசிகன் கையில் கொடுத்திடுறதுதான் உத்தமம். தீர்ப்பு சொல்றதுக்கு நாம  நீதிபதி கிடையாது. அந்தந்த சூழ்நிலையில் வாழ்ந்து பார்க்கிறவர்களின் மனநிலை நமக்குத் தெரியாது.


இதில் ரெண்டு கேரக்டர்களின் வாழ்க்கை அருமையா வந்திருக்கு என்பதில் எனக்கு நிச்சயமா நம்பிக்கை இருக்கு. கேக்கறவங்களுக்கு இது தற்பெருமையாத் தெரியும். இருந்தாலும்  சொல்றேன்னா, அவ்வளவு அர்த்தபூர்வமா வந்திருக்கு. இந்தக் கதை பெரிய யுத்தமெல்லாம் கிடையாது. நாம வாழ்ந்துகிட்டு இருக்கிற வாழ்க்கையை விலகியிருந்து பார்க்கிற பார்வை...  அவ்வளவுதான். உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனுஷன்தான் இந்தக் கதைக்கு வேணும். பார்க்கிற ரசிகன் அவனையே கொஞ்சம் பார்த்துக்கிற மாதிரியான படம். அதுக்குத்தான்  இதுல சிவகார்த்திகேயன் ஹீரோ!’’

‘‘சிவகார்த்திகேயன் தேறிட்டாரா?’’
‘‘சும்மாவே அவரிடம் காமெடி சென்ஸ் அதிகம். நாம ஒண்ணு நினைச்சா, அதைப் பல மடங்கு பெருசா வெளியே கொண்டு வர்றார். சும்மா ஷூட்டிங்னு பதற்றமா இல்லாம, ஷெட்யூல்  அழகா போய்க்கிட்டு இருக்கிறதுதான் இதற்கு சாட்சி. பொறுப்புன்னு வந்திட்டா அவருடைய இயல்பு வேறயா இருக்கு. ஒரு விஷயத்தை சின்னச் சின்னதா மெருகேற்றுவது அவருக்கு கை  வந்த கலை. அவர் மேல சுமையெல்லாம் தூக்கி வைக்கலை. ஆனா, தூக்கி வச்சாலும் தாங்குவார் போல!’’


‘‘தனுஷ் சொந்தப்படம்... ரொம்ப ஆசையா தயாரிக்கிற முதல் படம்... எப்படி அவரைக் கவர்ந்தீங்க?’’
‘‘வெற்றிமாறன் சார் அவர்கிட்டே இந்தக் கதையின் சின்ன அவுட்லைனை சொல்லியிருக்கார். என்னைக் கூப்பிட்டார் தனுஷ். ‘ஒரு 40 நிமிஷத்தில் கதையைச் சொல்றீங்களா’ன்னு கேட்டார்.  நானே அப்படிச் சொல்லத்தான் ரெடியா இருந்தேன். சொல்லிட்டு வந்தேன். ‘சடசட’ன்னு வேலைகள் ஆரம்பிச்சது. வேல்ராஜ் கேமராமேன், அனிருத், சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த்... தனுஷ்  பாடல்களையும் அவரே எழுதி, பாடியும் கொடுத்திட்டார். இதுக்கும் மேலே அடுத்த கட்டத்திற்கு நாமேதான் போகணும். போய்க்கிட்டு இருக்கேன். தனுஷ் கொடுத்திருக்கிற சுதந்திரம்தான்  எனக்கு பயத்தையும், அதே சமயம் உற்சாகத்தையும் தருது. ஒருநாள் கூட ஷூட்டிங் நடக்கிற பக்கம் வந்ததில்லை. ‘என்ன நடக்குது இங்கே’ன்னு ஒரு பார்வை பார்த்தது கிடையாது.  இப்படிப்பட்டவருக்கு எப்படி படம் கொடுக்கணும்..! அதான் தீயா இறங்கி வேலை செய்யறேன்...’’

‘‘சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் ஜோடி எப்படி?’’
‘‘ப்ரியா ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ல அசத்திட்டு இங்க வந்திருக்காங்க. அருமையான பொண்ணு. கலகலன்னு பழகற சுபாவம். அடிக்கடி ஓடிப்போய் கேரவனுக்குள் பதுங்கிக்கிற ஆள் இல்லை.  சிவகார்த்திக்குத்தான் பயங்கர வெட்கம். ஆரம்பத்தில் ப்ரியா பக்கத்தில் போனாலே கூச்சப்பட்டார். இப்போ இல்லை... சரியா வந்திருச்சு! அவங்களுக்கு ஆட்டம் பாட்டம் எல்லாம்  வச்சிருக்கேன். ரெண்டு பேரையும் ஜோடியா பார்க்க நல்லாயிருக்கு. வெள்ளந்தியா பேசுற அழகு சிவகார்த்திக்கு இருக்கு. அழகா அதை ரசிக்கிறாங்க ப்ரியா. கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எல்லாமே  இருக்கு. சொல்லறத புரிஞ்சிக்கங்க...’’

‘‘தனுஷ் - அனிருத் பாட்டு எப்படி வந்திருக்கு?’’
‘‘இரண்டு பேரின் காம்பினேஷன் சூப்பர். கதையைக் கேட்டுட்டு தனுஷ் விறுவிறுன்னு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பிச்சிட்டார். ஒரு பாடலை அவரே பாடவும் செய்தார். நிச்சயம் பெரிய  அளவுக்கு போகும் அந்தப் பாட்டு. தனுஷ், அனிருத் ரெண்டு பேரும் விளையாட்டுப் பிள்ளைகள் மாதிரி சிரிச்சுக்கிட்டே வேலை செய்யறதை பார்த்துக்கிட்டே இருக்கலாம்.


‘சத்தியமா நீ எனக்கு தேவையில்லை பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்லை’ன்னு தொடங்குகிற பாட்டு. வெளி வந்ததும் ஊரு, உலகமே உச்சரிக்கிற பாட்டா இருக்கும். அடுத்த  ‘கொலவெறி’ன்னு சொல்லலாம். அதை விடுங்க... அவரே எழுதின பாட்டுகளும் அருமையா இருக்கு.

‘பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன்
கையைக் கட்டி நிக்குதே’ன்னு எழுதினார்.
அப்புறம், ‘நிஜமெல்லாம் மறந்து போச்சே பெண்ணே உன்னாலே’ன்னு ஒரு பாட்டு. சாதாரணமான வரிகள் மாதிரிதான் இருக்கும். அதுதான் விசேஷம். சாதாரணமானவங்க பாட்டுல ஒரு  உண்மை இருக்கும் இல்லையா? அது இருக்கு. எனக்கு அனிருத் இன்றி ஓரணுவும் அசையாது. இதுதான் புதுமொழி’’ என சிரிக்கிறார் துரை செந்தில்குமார்.
- நா.கதிர்வேலன்