ஏணி





‘‘யாரு... நடராஜனா? வாங்க... வாங்க... மோர் சாப்பிடுறீங்களா?’’ என்ற ராமசாமி, தனது தள்ளுவண்டியின் மோர்பானையில் இருந்து ஒரு டம்ளர் மொண்டு நீட்டினார்.
நடராஜன் அவர் நண்பர். சென்னையில் மகனோடு இருப்பவர், இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார்.

‘‘என்ன ராமசாமி! உன் மகனும் சென்னையில சாஃப்ட்வேர் எஞ்சினியரா, மாசம் அறுபதாயிரம் ரூபா சம்பாதிக்கிறான்... நீ இன்னும் மோர் வண்டி தள்ளிட்டிருக்கே... உன் மகன் ஒண்ணும்  கண்டுக்கறதில்லையா?’’ - கவலையோடு கேட்டார் நடராஜன்.

ராமசாமி முகத்தில் எந்த வாட்டமும் இல்லை.
‘‘நடராஜா! என் மகனை நான் கஷ்டப்பட்டு படிக்க வச்சதுக்கு பலன் இல்லாம இல்லை. மாசம் ஒண்ணாம் தேதி ஆனா, சுளையா பத்தாயிரம் ரூபாயை பேங்க்ல என் பேர்ல அவன்  போட்டுருவான். அதுவே பல லட்சம் சேர்ந்திருக்கு. ஆனா, இந்த மோர் வண்டி வியாபாரம் பண்ணித்தான் அவனைப் படிக்க வச்சேன். இதுதான் எங்களை ஏத்திவிட்ட ஏணி... இதை எட்டி  உதைக்கக் கூடாதே! அதுமட்டுமில்லாம, சுறுசுறுப்பா இந்த வியாபாரத்தைப் பண்ணுறதாலே என் உடம்புல தெம்பும் ஆரோக்கியமும் நிலைச்சிருக்கு. அதனாலதான் இதை விடல!’’
ராமசாமி சொன்ன வார்த்தைகள் நடராஜனுக்கு நியாயமாகப்பட்டது.