களிமண் நகைகளில் கலக்கல் லாபம்!





நாம் அலட்சியமாகப் பார்க்கிற களிமண்தான்.... ஜெயசித்ராவின் கைவண்ணத்தில் ஒவ்வொரு பிடி களிமண்ணும், கலைநயமிக்க நகையாக உருவெடுக்கிறது. ‘‘களிமண் நகைன்னு சொன்னா  யாரும் யோசிப்பாங்க. அதையே ஸ்டைலா ‘டெரகோட்டா ஜுவல்லரி’ன்னு சொல்லி, கலர்ஃபுல்லா ஒரு அலங்காரம் பண்ணி, பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல விற்பனைக்கு வச்சா, அதோட  ரேஞ்சே வேற... இன்னும் சொல்லப் போனா, டெரகோட்டா ஜுவல்லரிதான் வேணும்னு தேடித் தேடி வாங்கறாங்க’’ என்கிற ஜெயசித்ரா, அடிப்படையில் கைவினைக் கலைஞர். தனது  கைத்திறனில் உருவாகும் பல பொருள்களில், களிமண் நகைகளுக்கே மவுசு அதிகம் என்பதைப் பெருமையாக சொல்கிறார்.

‘‘தங்கமும் வெள்ளியும் விற்கற விலைக்கு இன்னிக்கு அடிக்கடி அதையெல்லாம் வாங்க முடியறதில்லை. கவரிங் நகைகள் கொஞ்ச நாள்ல சுயரூபத்தைக் காட்டுது. டிரஸ்சுக்கு மேட்ச்சா,  அதே கலர்ல, அதே டிசைன்ல செயற்கை நகைகளைத் தேடிப் பிடிச்சுப் போட்டுக்கிறது அத்தனை சுலபமில்லை. பட்ஜெட்டுக்கு ஏத்தபடி, விரும்பின கலர், டிசைன்ல நகை வேணும்னு  நினைக்கிறவங்களுக்கு டெரகோட்டா நகைகள்தான் சரியான சாய்ஸ்.

களிமண்தான் மூலதனம். மண்பானை செய்யறவங்ககிட்ட களிமண் வாங்கிக்கலாம். அது தவிர ஃபேப்ரிக் கலர், குக்கரி மோல்டு (பேக்கரி தயாரிப்புக்கு உபயோகிக்கிற அதே மோல்டு), கறுப்பு  கயிறு அல்லது கியர் ஒயர், முத்து, மரத்தால் ஆன மணிகள்னு வெறும் ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். இதுல கழுத்துக்கான செயின், காதுக்கான தோடு, வளையல் அல்லது  பிரேஸ்லெட்னு 25 முழு செட் பண்ண முடியும். இன்னும் கிரியேட்டிவா வேணும்னா, ஆரம், கொலுசு, நெக்லஸ்னு என்ன வேணாலும் பண்ணலாம். நகைகளை செய்து முடிச்சதும் நல்லா  காய வச்சு, கலர் பண்ணி அப்படியேவும் உபயோகிக்கலாம். ஆனா இது கீழே விழுந்தா உடையும். பானை செய்யறவங்ககிட்டயே கொடுத்தா, அவங்க பானைகளை சுடற மாதிரி, இந்த  நகைகளையும் சுட்டுத் தருவாங்க. அப்புறம் கலர் பண்ணி உபயோகிச்சா உடையாது. 100 செட் நகைகளை சூடேத்திக் கொடுக்க 100 ரூபாய்தான் கேட்பாங்க.

கோல்டன் கலர், சில்வர் கலர் உள்பட எல்லாம் பண்ணலாம். அதனால பட்டுப் புடவை, டிசைனர் புடவைகளுக்கும் மேட்ச்சாகும். ஒரு செட் டெரகோட்டா நகையை 500 - 600 ரூபாய்  வரைக்கும் விற்கலாம். ஒரு நாளைக்கு 50 செட் பண்ணலாம். பார்க்க ஆடம்பரமா, காஸ்ட்லியா தெரியற இந்த நகைகள் செய்யறதுக்கு ரொம்ப சுலபம். லாபத்தையும் அள்ளிக் கொடுக்கும்...’’  என்கிறார் ஜெயசித்ரா.
களிமண்ணில் காசு பார்க்க நீங்க ரெடியா?
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்