படமாக மாறிய ஹிதேந்திரன கதை!





‘‘அடையாறிலிருந்து ஆயிரம்விளக்கு போகிறவரை ஏகப்பட்ட சிக்னல்கள், எக்கச்சக்க டிராபிக் ஜாம்கள். ‘ச்சே... டிராபிக்ல மாட்டிக்கிட்டோமே! அந்த வண்டிய முந்தி போயிருக்கலாமே’ன்னு  எத்தனையோ எரிச்சல்களோட நாட்களை நகர்த்திக்கிட்டு இருக்கிறோம் நாம். என்னைக்காவது இன்னொரு கோணத்தில், பக்கத்தில போறவங்கள பார்த்திருக்கோமா? நினைச்சுப் பார்த்தா  வெறுமைதான் நிற்கும். அந்த வெறுமையைக் கலவையான உணர்வுகளால் நிரப்பும் படம்தான் ‘சென்னையில் ஒருநாள்’’’ - படம் பற்றி விவரிக்கும் ராதிகாவின் பேச்சில் விழுகிறது தத்துவ  சிக்னல்.

மலையாளத்தில் வசூலையும் வரவேற்பையும் குவித்த ‘டிராபிக்’ படமே தமிழில் ‘சென்னையில் ஒருநாளாக’ உருவாகி வருகிறது. மலையாள இயக்குனர் சாகித் காதர் இயக்குகிறார். ராதிகா  தவிர, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, சேரன், பார்வதி என ஏகத்துக்கும் நட்சத்திர பட்டாளங்கள்.



‘‘இத்தனை பேரு இருக்காங்களே... படத்தில் யார்தான் ஹீரோ?’’
‘‘கதைதான். இறந்து போன துக்கத்தின் ஈரம்கூட காயாதபோதே, மகனோட இதயத்தை இன்னொரு உயிரை காப்பாற்றுவதற்காக கொடுத்தாங்களே ஹிதேந்திரனின் பெற்றோர்கள். அந்த  நெகிழ்வான நிகழ்வை அத்தனை சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. அவனுடைய இதயத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற சம்பவத்தை அடிப்படையா  கொண்டதுதான் கதை. அந்த உண்மை சம்பவம் நடந்தது நம்ம சென்னையில்தான் என்றாலும், இதைப் படமாக எடுத்தது மலையாள இயக்குனர்தான்.



‘மலையாளத்துல ‘டிராபிக்’னு ஒரு படம் வந்திருக்கு. ரொம்ப பிரமாதமா இருக்கு... பாரேன்’னு ஒருநாள் என் கணவர் சரத் சொன்னார். ஒரு படம் நல்லாயிருக்குன்னு யாராவது சொன்னா,  சாதாரணமான எதிர்பார்ப்போடதானே பார்ப்போம். அப்படித்தான் நானும் பார்த்தேன். ஆனா பார்த்து முடிச்ச பிறகுதான் அது அசாதாரணமான படம்னு தோணிச்சு. இதை தமிழ்ல எடுக்கணும்னு  ஆசைப்பட்டேன். இதோ இப்போ அது நடந்துக்கிட்டு இருக்கு. ‘டிராபிக்’கை தயாரித்த லிஸ்டினும் என்னோட ஐ பிக்சர்ஸும் இணைந்து படத்தை தயாரிச்சிருக்கோம்...’’
‘‘கதாபாத்திரங்கள்?’’

‘‘சரத்குமார் சார் போலீஸ் ஆபீஸரா வர்றார். பிரகாஷ்ராஜ் நடிகராகவும், அவரோட மனைவியா நானும் நடிச்சிருக்கோம். சேரன் சார் டிரைவரா நடிச்சிருக்கார். இத்தனை பேருக்கு மத்தியில்,  சென்னையில் பரபரப்பாக இருக்கும் போக்குவரத்து நெரிசலும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக படத்தில் அமைஞ்சிருக்கு. ஒரே நாளில் நடந்து முடிகிற கதையில, திரைக்கதையோட  வேகம் ‘நிலம்’ புயல் மாதிரி, படம் பார்க்கிறவங்க மனசை தாக்கும். சமீபத்தில் இப்படியொரு ஸ்பீடான திரைக்கதையை நான் எந்தப் படத்திலும் பார்த்ததில்ல. இயக்குனர் சாகித் காதர்தான்  அதுக்குக் காரணம்.



14 கிலோ மீட்டர் தூரத்தை 13 நிமிடத்தில் கடக்கும் காட்சிகளில் லப்டப் எகிறிடும். சென்னை, கொச்சின் போன்ற இடங்களில் ஷூட் பண்ணியிருக்கோம். பரபரப்பும், விறுவிறுப்பும்  மட்டுமில்லாம, விழிப்புணர்வு ஊட்டும் காட்சிகளும் இருக்கு.’’
‘‘அப்படியென்ன விஷயத்தை படம் விதைக்குது?’’


‘‘ஆசையோ, கோபமோ, அன்போ வெறுப்போ, துயரமோ, துரோகமோ... எந்த உணர்வானாலும் முக்கியமான நேரத்தில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள், வாழ்வில் பல  அதிரடியான திருப்பங்களை நிகழ்த்திட்டு போயிடும். அதேமாதிரி துயரத்தின் விளிம்பில இருக்கற ஒருத்தர் எடுக்கும் முடிவு, இன்னொருத்தருக்கு வரமா மாறும் அதிசயத்தை இந்தப் படம்  பேசுது. இதன் மூலம் ‘உறுப்பு தானம்’ என்னும் உயர்வான விஷயம் இந்த சமூகத்தில் பரவும்ங்கறது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை. சும்மா அறிவுரை சொல்ற மாதிரி இல்லாம,  போகிற போக்கில் படம் பார்க்கிறவங்க மனசில ஒரு கல்வெட்டு மாதிரி சில செய்திகளை பதிச்சிப் போகும்னா எப்படி இருக்கும்னு பார்த்துக்குங்க...’’
- அமலன்