குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி


ஏன்
மனிதர்களை விட
கடவுள்கள் மேலானவர்கள்?
காரணங்கள் கீழே...


*  மின்சாரத் தட்டுப்பாட்டையும் கரன்ட் கட் பற்றியும் முன்பே உணர்ந்திருப்பதால்தான் அவர்கள் யாருமே தேவலோகம், சொர்க்கம், எமலோகம் என எங்கேயும் வேக்காடை சமாளிக்க சட்டை  அணிவதில்லை.

*  பெட்ரோல், டீசல் விலை ஏறி எல்லா மனிதர்களும் திண்டாடுவார்கள் என்பதை அறிந்ததால்தான் எல்லா கடவுள்களும் பெட்ரோல், டீசல், செலவு வைக்காத வாகனங்களான எலி, எருமை,  மயில், மாடு என தேர்ந்தெடுத்தனர்.

*  ஹெல்மெட் கட்டாயமாகும் என்று முன்பே கணித்துத்தான், அதையே டிசைனாக கிரீடமாக்கி அணிந்திருக்கிறார்கள்.

*  ஒரு கையை செல்போனுக்கும் இன்னொரு கையை லேப்டாப்புக்கும் எழுதிக் கொடுத்துவிட்டால் மத்ததெல்லாம் எப்படி? அதனால்தான் எல்லாக் கடவுள்களும் ஸ்பேராக நிறைய எக்ஸ்ட்ரா  கைகள் வைத்திருக்கின்றனர்.
*  போகப் போக, நாட்டில் நாற்காலி சண்டைகள் நாறும் என்று தெரிந்தே அவர்கள் பெரும்பாலும் தாமரைப் பூக்களில் டவல் போட்டு இடம் பிடித்து அமர்ந்திருக்கின்றனர்.

அலுவலகத்தில் ஆழ்ந்த வேலையில் இருந்தேன், மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. ‘‘உங்க மகள் ஜட்டி போட்டு விடச் சொல்லி அடம் பிடிக்கிறா. அழுகாச்சி நிறுத்த முடியல...  உடனே வாங்களேன்!’’

என்னடா இது... 2 வயசு பொண்ணு ஜட்டி போட மாட்டேன்னு அடம் பிடிக்கும்... அது சாதாரணம்! ஆனா, போட்டுவிடச் சொல்லி அடம் பிடிக்குதுன்னா ஆச்சரியம்தான். ஆனா, ஆதீனம்  கனவில் சிவன் வந்ததையும், ‘ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாசத்தில் கரன்ட்டை சரி செய்வேன்’ என அம்மா சொன்னதையுமே நம்பிய சராசரி ஜீவனான நான், சொந்த மனைவிய நம்ப  மாட்டேனா? உடனே கிளம்பினேன். வீட்டுக்குப் போய் பார்த்தா, தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பெரிய சைஸ் கரடி பொம்மைக்கு ஜட்டி போடச் சொல்லி அடம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க  இளவரசி.

உண்மையில் குழந்தைகள் உருவத்தில்தான் சிறியவர்கள்; ஆனா, உள்ளத்தில் மிகமிகப் பெரியவர்கள்.

கஷ்டம் வரும்போது கடவுளை நினைச்சவங்கள விட, கடன் வாங்க நண்பனை நினைச்சவங்கதான் அதிகம். ஆனா, நண்பன் கடன் கொடுத்து கஷ்டம் தீர்க்கறப்ப, நண்பனுக்கு நன்றி  சொன்னவங்கள விட கடவுளுக்கு நன்றி சொன்னவங்கதான் அதிகம். ஒண்ணும் பிரச்னையில்ல, கடவுளும் நண்பனும் வேற வேறயா என்ன?!

மாயன் காலண்டர்படி வர்ற டிசம்பர் மாசம் 21ம் தேதி உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க. ஆனா, நம்புங்க மக்களே... அன்னைக்கு நிச்சயம் உலகம் அழியாது. அதை எப்படி இவ்வளவு  உறுதியா சொல்றேன்னா, அதுக்கும் சில லாஜிக்ஸ் இருக்கு.

முதல்ல சூப்பர்ஸ்டார் நடிச்சு எல்லோரும் ஆவலா எதிர்பார்க்கிற ‘கோச்சடையான்’ இந்த வருஷத்துக்குள்ள ரிலீஸ் ஆகணும். அப்புறம் தமிழ் சினிமாவுல பல தற்கால கதாநாயகிகள் 18  வயசைத் தாண்டணும். 2016ல் பாமக ஆட்சியோ, சரத்குமாரின் காமராஜர் ஆட்சியோ அமையணும். விஜய் அடித்து வந்த படங்களுக்கு மத்தியில் ரொம்ப நாளைக்கப்புறம் விஜய் நடித்து வந்த  ‘துப்பாக்கி’ மாதிரி இன்னும் நாலைஞ்சு படங்கள் வரணும். எல்லாத்துக்கும் மேல மின்வெட்டு 8 மணி நேரத்துல இருந்து 18 மணி நேரம் ஆகியிருக்கே தவிர, இன்னமும் 24 மணி  நேரமாகலை. இதெல்லாம் நடந்தா வேணா உலகம் அழியும். ஆக தைரியமா இருங்க மக்களே, நிச்சயம் இந்த டிசம்பர் 21ல் உலகம் அழியாது.

சமூக இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் சூப்பர்ஸ்டாரைப் பற்றிய சூப்பர்மேன் ஜோக்குகள்தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்குப் பிறகு அதிவேகமாய் பரவுகிறது. ஆனால், அவர்  வாழ்க்கையில் உண்மையில் நடந்த 4 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

*  ரஜினி சாருக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது நடந்த சம்பவம்: குழந்தை ரஜினி தவழ்ந்து இமயமலை வரை போய்த் திரும்பாமல், அடிக்கடி சீனா போய் விட்டதால், சீனா பாதுகாப்புக்கு  பெருஞ்சுவர் கட்டியதாம்.

*  ரஜினி சாருக்கு 27 வயதானபோது: ஏதேனும் ஆலமரமோ ஹைவேஸ் புளியமரமோ விழுந்து கிடந்தால், அதை எடுத்து காது குடையும் பழக்கம் ரஜினிக்கு இருந்திருக்கிறது.

*  ரஜினி சாரின் 38வது வயதில்:
வானத்தில் கடவுள்களுக்கும் அரக்கர்களுக்கும் சண்டை வந்தபோது ஒரு கடவுள் சொன்ன டயலாக்... ‘‘போங்கடா, ரஜினியே எங்க பக்கம்!’’

சமீபத்திய சம்பவம்:
போன வருஷம் அமெரிக்கா போயிருந்தப்ப ரஜினி கொட்டாவி விட்டாராம், கேத்ரீனா புயல் வந்துச்சாம்.

என்னய்யா நம்மாளுங்க லாஜிக்?

லக்ஷ்மி வெடி வெடிக்கலைன்னா கத்துறானுங்க; புஸ்வாணம் வெடிச்சா கத்துறானுங்க. ஸ்வீட் கடையில லட்டு உடைஞ்சிருந்தா வேற லட்டு கேக்கறாங்க; ஆனா அதே கடையில பூந்தி  வாங்கிட்டுப் போறாய்ங்க. திருட்டு டி.வி.டி கூடாதுங்கறாங்க; ஆனா, ஃபாரின் டி.வி.டியில இருந்து திருடித்தான் இவங்க படத்தையே எடுக்கறாங்க. வூட்டுக்குள்ள குண்டா சோறும் அண்டா  குழம்பும் திம்பாங்க; ஆனா, கல்யாணப் பந்தின்னா, எல்லா ஐட்டத்திலேயும் பாதிக்கு பாதி மிச்சம் வைக்கிறாங்க.

பிஸியா திரிஞ்சா ‘சீன் போடாதே’ங்கறாங்க; எங்கேயும் போகாட்டா சோம்பேறிங்கறாங்க. கொஞ்சம் ஃபேஷனா வேஷம் போட்டா, ‘வாழ்வப் பாருடா’ங்கறாங்க; தலையே சீவாம ஃப்ரீயா  விட்டா, ‘வழுக்கையப் பாருடா’ங்கறாங்க. பேசாமலே இருந்தா களிமண்ணுன்னு கிண்டலடிக்கிறாங்க. அறிவுத்திறன் பத்தி அறிவாளித்தனமா பேசினா, ‘ஓவரா பேசுறே... ஒக்காரு’ன்றாங்க.