நியூஸ் வே




‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை முடித்துவிட்டதால் கார்த்திக்கு கொஞ்சம் லீவு. தாய்மை அடைந்திருக்கிற மனைவியை அழைத்துக்கொண்டு சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும், சொந்த  ஊருக்கும், மாமனார் வீட்டுக்கும் ஒரு குட்டி ட்ரிப் அடித்திருக்கிறார். மனைவிக்கு பூரிப்போ பூரிப்பு.

‘பாய்ஸ்’ படத்தோடு சோபிக்காமல் தெலுங்கு பக்கம் போன சித்தார்த், ‘180’ மூலம் மீண்டும் வந்தார். அதுவும் கைகொடுக்காத வருத்தத்தில் இருந்தவர், இப்போது வரிந்து கட்டிக்கொண்டு  களத்தில் இறங்கியுள்ளார். ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே காதல்’ என்ற படத்தைத் தயாரித்து நடிக்கிறார். தவிர, ‘தேசிய நெடுஞ்சாலை’ படத்திலும்  நடிக்கிறார்.

வாய்ஸ்:
‘‘அடுத்தவர்களுக்குக் குழி தோண்டுபவர்கள், தங்களுக்கு பெரிய கிணறே காத்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்!’’
- சோனியா காந்தி

‘‘நான் டெங்கு கொசுவைவிட ஆபத்தானவன்! கடித்தால் தாங்க மாட்டீர்கள்...’’
- பா.ஜ.க மற்றும் காங்கிரஸ்காரர்களின் ஊழல் பற்றி அரவிந்த் கெஜ்ரிவால்

‘‘கெஜ்ரிவாலுக்கும் நிதின் கட்கரிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாபா ராம்தேவின் யோகா முகாமுக்குச் சென்று நிவாரணம் தேடிக்கொள்ள வேண்டும்!’’
- லாலு பிரசாத் யாதவ்

ஃபேஷன் ஷோக்களில் ஆர்வமாகக் கலந்துகொள்பவர் நடிகை கங்கனா ரணாவத். கெவின் மிகுல் என்பவர் டிசைன் செய்த இந்த கவுனை அணிந்துகொண்டு சமீபத்தில் கங்கனா வலம் வந்தது  சர்ச்சையாகி விட்டது. இனி கவனத்துடன் இருக்க முடிவு செய்திருக்கிறார் அவர்.

சைலன்ஸ்:

அவார்டு வாங்கிய நகைச்சுவை குணச்சித்திரம் கொஞ்சம் ‘ஒரு மாதிரி’. கூட நடிக்கிறவர்களிடம் போடுகிற கடலை தாங்க முடியவில்லையாம். அவருக்கு என்னாச்சு என பலரும்  கவலைப்படுகிறார்கள். வேலையைத்தான் பார்க்கணும்... ஆளைப் பார்க்கலாமா தம்பி?

‘ஐ காட்’ நடிகரின் வீட்டுப்பக்கம் நிறைய சண்டை சச்சரவுகள் நடக்கிறதாம். டபுள் காதல் தோல்வியால் நொந்துபோயிருக்கும் அந்த நடிகை, அடிக்கடி வீட்டுக்கு வந்துவிடுகிறாராம். அவரைத்  தவிர்க்க தாய்க்குலம் ரொம்பவும் கஷ்டப்படுகிறாராம். பிரியாணி போட்டு கட்டுபடி ஆகாத காரணத்தால் சீக்கிரம் நடிகருக்கு கால்கட்டு போட முடிவாகிவிட்டது.

முதல்முறையாக இந்தியா வந்துபோயிருக்கிறார் மரியா ஷரபோவா. இந்த டென்னிஸ் தேவதை தரையிறங்கியது டெல்லியில். ஆசையாக தோசையை ரசித்துச் சாப்பிட்ட மரியா, ஆக்ராவுக்குப்  போய் தாஜ்மகாலைப் பார்க்க முடியாத ஏக்கத்துடன் டெல்லியில் ஷாப்பிங் செய்தார். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிரஸ் அயிட்டங்களை வாங்கிக் குவித்தவரிடம் வழக்கமான கேள்வியைக்  கேட்டார்கள் நம் நிருபர்கள்... ‘‘பாலிவுட்ல நடிப்பீங்களா?’’

‘‘எனக்கு இந்தியா வரவே டைம் இல்லை. அதோடு, என் விருப்பங்களும் ஆர்வங்களும் வேறு!’’ என சிம்பிளாகச் சொல்லிவிட்டார் மரியா.

மூத்த கர்நாடக இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் பற்றி ஆவணப்படம் எடுத்துள்ளார் அம்ஷன்குமார். 90 வயதாகும் மணக்கால் ரங்கராஜன் குரலில் எவ்வித நடுக்கமும் இல்லை.  பழைய இசைப் பாரம்பரியம் எப்படி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்த ஆவணப்படம்.

எழுத்தாளர் ஜெயமோகன் ஊர் சுற்றுவதில் மிகுந்த விருப்பமுள்ளவர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நண்பர்கள் குழுவுடன் எங்காவது புதிய இடத்துக்குக் கிளம்பி விடுவார். திரும்பியதும்,  அந்தப் பயண அனுபவங்களை தன் இணையதளத்தில் எழுதவும் செய்வார்.
கவிஞர் மதன் கார்க்கி தன் மகனுக்கு ‘ஹைக்கூ’ எனப் பெயரிட்டு இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின் மகள் பெயர் ‘பூந்தென்றல்’. இவர்களது நண்பர்கள் வட்டாரமே இப்போது  கவிதையாக தமிழ்ப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறது.

மைக் மோகனும், அர்ஜுனும் இணைபிரியாத நண்பர்கள். இயற்கை உணவை விரும்பிச் சாப்பிடும் இவர்களை குடும்பத்தோடு நல்ல ரெஸ்டாரன்ட்டுகளில் இரவு 10 மணிக்கு மேல்  பார்க்கலாம்.