வலி





‘‘சார்... நான் சொல்றதைக் கேளுங்க. என்னதான் நீங்க முறைப்படி வாட்டர் பைப் கனெக்ஷனுக்கு அப்ளிகேஷன் கொடுத்து பணம் கட்டினாலும் உங்களுக்கு கனெக்ஷன் கிடைக்காது. அதோ...  அந்த மூலைல நீல ஷர்ட் போட்டுனு உட்கார்ந்திருக்கார் பாருங்க... அவர்கிட்ட போய் தனியா ஆயிரம் ரூபாய் கொடுத்து விஷயத்தைச் சொல்லுங்க. பத்து நாள்ல வேலை ஆயிடும்!’’ - அலுவலக பியூன் சொல்ல, நீல ஷர்ட் நபரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சபேசன்.

வீடு திரும்பிய சபேசனின் முகத்தில் நிறைய வருத்தம் ஒட்டிக்
கொண்டிருந்தது.
‘‘ஏங்க... வேலை ஆகிறதுக்கு எக்ஸ்ட்ரா ஆயிரம் ரூபாய் லஞ்சமா கொடுக்கற மாதிரி ஆயிடுச்சேன்னு வருத்தப்படறீங்களா?’’ மனைவி
கேட்டார்.
‘‘நான் பணத்துக்காக வருத்தப்
படலை. நான் லஞ்சம் கொடுத்த அந்த ஆள், பத்து வருஷத்துக்கு முன்ன என்கிட்ட படிச்ச மாணவன். ஆனா, அதை அவன் கொஞ்சம் கூட காட்டிக்காம, லஞ்சப் பணத்தையும் கூசாம கை  நீட்டி வாங்கிக்கிட்டான். காலம் கெட்டுப் போச்சுன்னு பொதுவா நாம புலம்பித் தீக்கறோம். ஆனா, என்னாலேயே ஒரு நல்ல குடிமகனை உருவாக்க முடியலையேன்னு நினைக்கிறப்பதான்  மனசு வலிக்குது’’ என்றார் ஓய்வுபெற்ற ஆசிரியரான சபேசன்.