மைக்ரோசாஃப்ட் இனி ஏழைகளுக்கு இல்லையா?





‘விண்டோஸ் 8’ன் விளம்பரங்கள், தமிழ் சேனல்கள் வரை எட்டி விட்டன. இதுவரை தனது எந்தத் தயாரிப்புக்கும் செய்யாத அளவுக்கு இதற்கு மூர்க்கத்தனமாக மார்க்கெட்டிங் செய்கிறது  மைக்ரோசாஃப்ட். முதன்முதலில் வெளியிடப்பட்ட சோதனைப் பதிப்பிலிருந்தே 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாறுதல்களைக் கண்டிருக்கிறது விண்டோஸ் 8.

வெறும் கீ-போர்டு, மவுஸ் என்று மட்டும் இல்லாமல், டச் ஸ்கிரீன் மூலம் இயங்கும் டேப்லட் மற்றும் செல்போன்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஆகப்பெரும்  சிறப்புதான். ஆனால், ‘எப்போதும் போல ஸ்டார்ட் பட்டன் கிடையாது... மெனு கிடையாது... புரோக்ராம்கள் எல்லாம் டப்பா டப்பாவாக வரும்...’ என்று அறிமுகம் செய்யும்போதே டப்பா  டான்ஸ் ஆடிவிடுமோ என்ற பதட்டம் மைக்ரோசாஃப்ட் தரப்பில் வராமல் இல்லை. அதனால்தான் இத்தனை விளம்பரம்! (மைக்ரோசாஃப்டின் லோகோவே டப்பாவாக மாறிப் போனதுதான், மிகப்  பெரிய மாற்றம்!)

சாதாரணமானவர்களுக்கான கம்ப்யூட்டர், டப்பு பார்ட்டிகளுக்கான கம்ப்யூட்டர் என்று இன்றைய கம்ப்யூட்டர் உலகை இரண்டாகப் பிரிக்கலாம். இதில் ஆப்பிள் கம்ப்யூட்டர், வசதி  படைத்தவர்களுக்கானது என்ற விஷயம் குழந்தைக்குக்கூட தெரியும். ஆப்பிளில் ஆயிரம் நவீன வசதிகள் இருக்கலாம். மைக்ரோசாஃப்ட் கணினிகளில் அவை இல்லாமல் இருக்கலாம்.  ஆனால், ஆப்பிளுக்கு மாற்றாக ஏழைகளுக்கேற்ற கொய்யாக்காயாக இருந்து வந்தது மைக்ரோசாஃப்ட்தான். ஆனால், இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தின் மூலம், அப்படிப்பட்ட தனது  இமேஜை விட்டு சற்று வெளியேறியிருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

கிட்டத்தட்ட உலகத்தின் கம்ப்யூட்டர் பயன்பாட்டையே மாற்றி அமைக்கும் முயற்சி என்றும் இதைச் சொல்லலாம். ‘அய்யோ, இருந்த ஒரே ஏழைப் பங்காளனும் போய்விட்டானே’ என்று மார்  மீதும் அடித்துக் கொள்ளலாம். ஆப்பிள் போலவே இனி விண்டோஸிலும் கணினி, லேப்டாப், டேப்லெட், செல்போன் என்று எல்லாமே கிடைக்கும். அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தத்  தெரிந்திருந்தால் போதும்... மற்றவற்றை நாம் எளிதில் இயக்கலாம். செல்போனில் நாம் சேமித்து வைக்கும் போட்டோக்கள், தகவல்கள் கூட ‘ஸ்கை டிரைவ்’ என்ற ஆன்லைன் சேமிப்பகம்  மூலம் நம் கணினிக்கு வந்து சேர்ந்து விடும். நம் வீட்டுக் கம்ப்யூட்டரையே செல்போனாக்கி கையில் தூக்கிச் செல்வது போல, இனி அலாதியாக இருக்கப் போகிறது கம்ப்யூட்டர் அனுபவம்.

இந்த பாசிட்டிவ் மேட்டர் எல்லாம் ஓகே. இவற்றைத் தாண்டி, விண்டோஸ் 8-ல் உள்ள சில நெகட்டிவ் அம்சங்கள்தான் இன்று நம்மூர்க்காரர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதில்  முக்கியமானது செக்யூர் பூட்! கம்ப்யூட்டரை ஆன் செய்யும்போதே, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பதிவு செய்து கொள்ளாத மென்பொருட்களை வைரஸ் போல நீக்கிவிட்டு இயங்குதளத்தை  மட்டும் இயக்கும் பாதுகாப்பு செட்டப் இது. ஸோ, இணையத்தில் அநாமத்தாக கிடைக்கும் பெரும்பாலான இலவச மென்பொருட்களை இந்த செட்டப் தூக்கிக் கடாசி விடும்.

ஃப்ரீயாகக் கிடைக்கிறது என்பதற்காக பினாயிலில் காபி போட்டுக் குடித்து அதை செரிக்கவும் பழகிக் கொண்டவர்கள்தான் உலகம் முழுவதுமே கம்ப்யூட்டர் பிரியர்களாக இருக்கிறார்கள்.  அவர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்துமா என்று ஃபோரம்கள் காரமாக விவாதிக்கின்றன. ‘‘இத்தனை நாளாக தங்கள் இயங்கு தளத்தையே பலர் இலவசமாகப் பயன்படுத்தி வருவது தெரிந்தும்  அதைக் கண்டுகொள்ளாத ‘பெரிய மனுஷனாக’ நடந்துகொண்டது மைக்ரோசாஃப்ட். இப்போது என்னவோ மேல்தட்டு மக்களுக்கான ஆப்பிள் போல, இவர்களும் ஆயிரம் கண்டிஷன்  போடுகிறார்களே’’ என்று புலம்புகிறது ஒரு கூட்டம்.

‘‘அட, நம்ம மைக்ரோசாஃப்ட்டுப்பா... எழுநூறு கோடியில எவனாவது ஒருத்தன் விண்டோஸ் 8க்கும் செக்யூர் பூட் இல்லாத திருட்டுப் பதிப்பு வெளியிடுவான். பொறுத்திருங்க!’’ என்று  ரிலாக்ஸ் பண்ணுகிறது இன்னொரு கூட்டம்!
எவ்வளவோ பண்றோம்... இதப் பண்ண மாட்டோமா?
- கோகுலவாச நவநீதன்

இந்தியா மீது சைபர் தாக்குதல்!
‘இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம்’
- பெயரைக் கேட்டாலே பெரிய இடம் என்று பயம் வருகிறதா இல்லையா? ஆனால், அசால்ட்டாக இந்த அமைப்பின் அதிகாரபூர்வ வலைத்தளத்தை அபேஸ் பண்ணி விட்டார்கள்  அல்ஜீரியாவைச் சேர்ந்த சில ஆன்லைன் கொள்ளையர்கள். இது தவிர, இன்னும் 4 முக்கியமான இந்திய அரசின் வலைத்தளங்களைத் திருடியிருக்கும் இந்தக் கூட்டம், ‘சான்ஃபோர் 25’ என்று  அழைக்கப்படுகிறது. இதையும் நம் இந்திய அரசு துப்பறிந்து கண்டுபிடிக்கவில்லை. ‘நாங்கதாண்டா செஞ்சோம்’ என்று அந்தத் தளங்களில் அவர்களே பெயரெழுதி வைத்துப்  போயிருக்கிறார்கள். ‘‘இது அவமானம்... இதன் மூலம் இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியே கசிந்திருக்கலாம்’’ என்று புகார்கள் எழுந்த நிலையில், ‘‘இந்தத் தளங்களில் ரகசியங்களே  இல்லை’’ என்று மறுத்திருக்கிறார்கள் உயர்மட்ட அதிகாரிகள்.
ரொம்பப் பெருமையா இருக்கு!