வடகிழக்கு வசந்தம்





மூன்று நாடுகளின் எல்லைக்கோடுகளை தன் மீது பரப்பிக் கொண்டு அமர்ந்திருக்கிறது அருணாசலப் பிரதேச மாநிலம். தெற்கே மியான்மர், மேற்கே பூடான், வடக்கிலும் கிழக்கிலும் சீனா.  பூடானுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட இந்தியாவில், வளைந்து நீண்டு குவிந்திருக்கிறது தவாங்.

தவாங்கின் ஜீவனோடு எப்போதும் மெல்லிய பதட்டம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. காரணம், சீனாவின் அத்துமீறல். தவாங் மீது சீனாவுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. 1962ல் தவாங்கை  குறிவைத்து இந்தியா மீது திடீரென போர் தொடுத்தது சீனா. இந்தப் போருக்கு வேறொரு பின்னணியும் உண்டு. 1959ல் சீனாவுக்கு அருகே அமைதியான நாடாக இயங்கிய திபெத் மீது போர்  தொடுத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சீனா. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான திபெத்தியர்களுக்கும், அந்நாட்டின் தலைவர் 14வது தலாய்லாமாவுக்கும் இந்தியா  அடைக்கலம் கொடுத்தது. இந்த எரிச்சலும், தவாங் மீதுள்ள காதலுமே சீனாவின் அத்துமீறலுக்குக் காரணம்.



எதிர்பாராத அந்தப் போரில் தவாங்கையும் பாம்டிலாவையும் கைப்பற்றிய சீனா, போர்நிறுத்தம் செய்த பின்னர் இப்பகுதிகளிலிருந்து வெளியேறிவிட்டது. ஆயினும், இன்றுவரை தவாங் மீது  சொந்தம் கொண்டாடுவதோடு, பல வழிகளில் குடைச்சலும் கொடுக்கிறது. அதனால், எந்நேரமும் எதுவும் நிகழலாம் என்ற பதட்டம். தவாங்கில் எங்கு நோக்கினும், ராணுவமும் ராணுவ  வாகனங்களுமே கண்ணில் படுகின்றன.

கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது தவாங். இரவு, பகல் எந்நேரமும் குளிர், ஊசியாக உடம்பைத் தைக்கிறது. தவாங்கில் தங்கும் விடுதிகள் நிறைய உண்டு.  அடையாள அட்டையும், அருணாசலில் தங்குவதற்கான பர்மிட்டும் இருந்தால்தான் அறை கிடைக்கும்.



புத்த மதத்தின் மகாயானப் பிரிவின் தலைநகரம் என்று தவாங்கை சொல்லலாம். உலகின் இரண்டாவது பெரிய புத்த விகாரையான ‘ஜெலுக்பா’ இங்குதான் இருக்கிறது. இருபுறமும்  அருவிகள் வெள்ளிக்கோடாக வீழ்கிற மிகப்பெரும் மலைச்சரிவை ஒட்டியிருக்கிறது ஜெலுக்பா. கண்படும் இடமெல்லாம் சமயத் தத்துவங்களை வண்ணங்களால் இழைத்து இழைத்து  வார்த்துள்ளார்கள். 17ம் நூற்றாண்டில் 5வது தலாய்லாமாவான மேராலாமா நிர்மாணித்த விகாரை இது. ஒவ்வொரு அங்குலத்திலும் அழகு மிளிர்கிறது. உள்ளே இருக்கும் மியூசியத்தில்  முற்கால ஆபரணங்கள், போர்க்கருவிகள் இடம்பெற்றுள்ளன. நடுநாயகமாக இருக்கும் பிரமாண்ட அறையில், 28 அடி உயரமுள்ள தங்கநிற புத்தர் அமைதியின் வடிவாக வீற்றிருக்கிறார்.  பக்கச் சுவர்களில் புத்த மகானின் பல்வேறு பரிமாணங்கள் வரையப்பட்டுள்ளன. மேற்புறங்களில் துணி ஓவியங்கள். ஐந்து நிமிடம் அந்த அமைதியை சுவாசித்தால், ஆன்மா புத்துணர்வு  பெறும். இங்குள்ள நூலகத்தில் புத்த சமயத்தின் பொக்கிஷங்களாக கருதப்படும் நூல்கள், ஓலைச்சுவடிகள் ஏராளம் உள்ளன. அருகில் புத்த தத்துவப் பள்ளி செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள புத்த மதத்தினருக்கு இதுதான் புனிதத்தலம். ஆண்டுதோறும் நடக்கும் பரிநிர்வாண நாள், மதுபூர்ணிமா நாட்களில் லட்சக்கணக்கான துறவிகள் இங்கு கூடுகிறார்கள்.  பிரதான அறையை ஒட்டி, பிரமாண்ட தர்மசக்கரங்கள் நிறுவப்பட்டுள்ளன. சக்கரத்தை இழுத்துச் சுற்றியபடி, புத்த மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். சீரான வேகத்தில் சுற்றும்  அச்சக்கரம் ஒவ்வொரு சுற்று முடிந்ததும் மணியைச் சுண்டி விடுகிறது. அந்த மணியொலி சூழலின் உன்னதத்தை மேன்மையுறச் செய்கிறது.



இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது போர் நினைவுச்சின்னம். வெளியில் பிரமாண்டமான சிலையில் அமைதியின் உருவாக புத்தர் சிரிக்கிறார்.  இதையொட்டி, களம்கண்ட பீரங்கி வண்டிகள் நிற்கின்றன. இந்திய-சீனப்போரில் உயிர்நீத்த அனைத்து வீரர்களின் பெயர்கள், அவர்கள் வகித்த பதவி, படைப்பிரிவின் பெயரைப்  பொறித்திருக்கிறார்கள். ஆங்காங்கே பாஷ்யம், வீராசாமி போன்று தமிழ்ப்பெயர்களும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க உணர்வு பொங்குகிறது. போர்முனை புகைப்படங்கள், வீரர்கள்  பயன்படுத்திய ஆயுதங்கள், உடைகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். மனம் நெகிழ்ந்து விடுகிறது.

இங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், ஒரு மலைமேல் இப்போரில் இந்திய படைக்கு தலைமை வகித்து வழிநடத்திய ஜஸ்வந்த்கர் நினைவிடம். அவர் போராடி உயிர்நீத்த இடத்திலேயே  அந்த நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய ஜவான்கள் இதை ஒரு கோயிலைப் போல பராமரித்து வணங்குகிறார்கள். அவர் வாங்கிய விருதுகள், ஆயுதங்களையும் காட்சிக்கு  வைத்துள்ளார்கள். அவர் பயன்படுத்திய பதுங்கு குழி, சீனத்தின் கொடுங்கோன்மைக்கு சான்றாக உள்ளது.


‘ஜெலுக்பா’ புத்த விகாரையை ஒட்டி எல்லைச்சாலை நீள்கிறது. இச்சாலை நெடுக ராணுவ செக்போஸ்ட்கள் உண்டு. ராணுவத்தின் அனுமதியைப் பெற்றே இச்சாலையில் தொடர்ந்து பயணிக்க  முடியும். கடினமான சாலை. ஏற்றமும், இறக்கமுமான பயணம் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். ஆயினும் அற்புதமான இயற்கைச்சூழல், களைப்பைப் போக்கி இதயத்தை இதமாக்குகிறது.   

மலைவழிச் சாலையில் தொடர்ந்து பயணித்தால் பிடிஎஸ்ஓ ஏரி, வரைந்து வைத்த ஓவியம் போல பரவிக்கிடக்கிறது. ஆனாலும் யாருமற்ற அமைதியில் அந்தச் சூழலில் லேசாக அச்சம்  படர்ந்து கிடக்கிறது. ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுமாடுகளும், காட்டுக் குதிரைகளும், ராணுவ கம்பீரமற்ற வேற்று மனிதர்களை விசித்திரமாகப் பார்க்கின்றன. ஏரியின்  கரையில் நின்று அழகை ரசிக்க மட்டுமே அனுமதி. இறங்க முடியாது.


இங்கிருந்து கொஞ்சதூரம் சென்றால் மாதுரி லேக். இதுதான் பிரதான எல்லை. இதற்கு மேல் செல்ல அனுமதியில்லை. ராணுவத்தின் முறையான அனுமதி பெற்றே இந்த ஏரிக்குச் செல்ல  முடியும். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யம் உண்டு. இதன் இயற்பெயர் ஷோநகா-செர். மாதுரி தீட்சித் நடித்த கோய்லா படத்தின் படப்பிடிப்பு இந்த ஏரியைச் சுற்றியே நடந்துள்ளது.  அதன்பிறகு இந்த ஏரி மாதுரி ஏரியாக பிரபலமாகி விட்டது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கி விட்டார்கள். ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி என்பதால் இது தேசிய விவகாரமாகி  விட்டது. இந்தப் பெயருக்கு உள்ளூர் மக்களும், புத்த துறவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசு இதுபற்றி ஆராய ஒரு குழு அமைத்தது. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி  மாதுரியின் பெயரே ஏரிக்கு நிலைத்துவிட்டது. உன்னதமான இடம். மனம் குளிரக் குளிர இதன் கரையில் நின்று இயற்கையை அனுபவிக்கலாம். நம் ராணுவத்தின் கட்டுக்கோப்பையும்,  சிரத்தை மிகுந்த அவர்களின் அன்றாட சேவைகளையும் தரிசிக்கலாம்.


பயணங்களால் நிரம்பியதுதான் வாழ்க்கை. அதில் சில தரிசனங்கள் மட்டும் கடைசி வரை மனதின் ஓரத் தில் தங்கி ஆன்மாவை குளிரூட்டிக்கொண்டே இருக்கும். வடகிழக்குப் பயணமும்  அப்படியானதுதான். விழிகள் மிதக்க, மிதக்க காட்சிகளை அள்ளிக்கொண்டு வரலாம். அப்படியொரு அனுபவத்தை நிச்சயம் நீங்கள் இழந்துவிடக்கூடாது.      

சென்னையில் இருந்து கவுகாத்திக்கு ரயில், விமான வசதி உண்டு. இட்டாநகர் சென்று, அங்கிருந்தும் தவாங் செல்லலாம். கவுகாத்தியில் இருந்து சாலை வழிப்பயணம் மிகச்சிறந்த அனுபவம்.  வாகனத் தேவைக்கு 09435189455 என்ற எண்ணில் டிரைவர் பெஸராத்தை அழைக்கலாம். மார்ச், ஏப்ரல் இதமான சீசன் காலம். ஸ்வெட்டர், மப்ளர், பிளாங்கெட் அவசியம். மேலும்  விபரங்களுக்கு பாம்டிலா மாவட்ட சுற்றுலா அலுவலரை 03782222049 என்ற எண்ணிலும், தவாங் மாவட்ட சுற்றுலா அலுவலரை 03794222359 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.