அம்மாவின் கைபேசி : சினிமா விமர்சனம்





‘வாழ்க்கையில் நாம் இழந்துவிட்ட நல்ல தருணங்களை மீட்டுத் தர முடியுமா... இந்த அவசர யுகத்தில் அக்கறையான அன்புக்கு மதிப்பு இருக்கிறதா... கிராமங்களின் அடிப்படை குடும்பச்  சூழ்நிலை எப்படியிருக்கிறது...’ எனக் கேள்விகளை எழுப்பி, அதற்கெல்லாம் விடை காண வருகிற முயற்சிதான் ‘அம்மாவின் கைப்பேசி’.

பக்காவான கமர்ஷியல் அம்சங்களை கருத்தில் வைக்காமல், குடும்பத்தை விட்டு ஓடிப் போக நேர்கிற மகனின் சூழ்நிலையைச் சொல்ல முயற்சித்த வகையிலும், அதைக் கையாண்ட  முறையிலும் நெகிழ வைத்ததற்காகவே தங்கர்பச்சானைப் பாராட்டலாம்.

அம்மாவின் அன்பு மழையில் நனையும் இளைய மகனின் பொறுப்பற்ற தனம், விளையாட்டுப்போக்கு, அக்கறையின்மை என நீளும் கதையில் எதிர்பாராத திருப்பமாக, அந்த அம்மாவாலேயே  விரட்டப்பட்டு வெளியேறுகிறான் மகன். ‘‘மனுஷனா வாடா... இந்தப் பசங்க மதிக்கிற மாதிரி வாடா’ என ஆவேசமாக அம்மா விரட்டிய மகன் திரும்பி வந்தானா, இழந்த கௌர வத்தை  மீட்டுக் கொடுத்தானா, அம்மாவின் மனசை ஆற்றுப்படுத்தினானா என்பதே க்ளைமாக்ஸ்!

கிராமத்துக் கதைக் களத்தில் அன்பையும், பிரியத்தையும், காதலையும், நட்பையும் அழுத்தமாகப் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் தங்கர்பச்சான். அச்சு அசல் கிராமத்துப் பையனாக  சாந்தனு... அம்மாவை ஏமாற்றி சுற்றி வரும் காட்சிகளிலும், மாமன் மகள் இனியாவிடம் மனதைக் கொடுக்கும் விதத்திலும் மனதைத் தொடுகிறார். ஆனாலும் நடிப்பில் இன்னும் போக  வேண்டிய தூரம் அதிகம். நடிப்பிற்கு வாய்ப்பிருக்கிற இடங்களிலும் தடுமாறுவது நன்றாகத் தெரிகிறது. மாமன் மகனை மனசிற்குள் வைத்து மருகிக்கொண்டு கடைசி வரை தவிக்கும் இனியா  அழகு. கொஞ்சம் காதலும் நிறைய மிரட்சியும் எட்டிப் பார்க்கும் இனியாவின் கண்கள் கவன ஈர்ப்பு பெறுகின்றன. சேர்ந்திருக்கும்போது உற்சாகமும், பிரிகிறபோது கண்ணில் சதா  சோகமுமாக, கொடுத்த ரோலுக்குப் படு பாந்தம். சாந்தனுவோடு காதல் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் ஆச்சர்ய தாராளமும் காட்டியிருக்கிறார். இருந்தாலும், இனியாவை படத்தில் தேட  வேண்டியிருக்கிறது.

தங்கர்பச்சான் ஒரு தனிக் கச்சேரியே நடத்துகிறார். மீனாளோடு அவர் சண்டை பிடிக்கிற காட்சிகளிலும், கூத்து வேஷம் கட்டி ஆடுகிற இடத்திலும் தங்கர் கொடுக்கிற மாடுலேஷன் பலே  ஜோர்! அம்மாவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் ரேவதி. மகனை நினைத்து நினைத்து உருகுவதும், புலம்புவதும், மகன் குரல் கேட்ட முதல் அலைபேசி அழைப்பில் ‘அண்ணாமலை’ என  அடிவயிற்றில் குரல் எழுப்பி கூவுகிற இடத்திலும், டிஸ்டிங்ஷன் தட்டி பாஸ் செய்கிறார். அதட்டி உருட்டும் பேச்சிலும், மகனை ஏற்றுக்கொள்ளாத மற்ற மகன்களைக் கண்டு  வயிற்றெரிச்சலில் பொங்கிப் புலம்புவதிலும் பின்னியெடுக்கிறார். ரோஹித் குல்கர்னியின் இசை இன்னும் கொஞ்சம் வித்தை காட்டியிருக்கலாம். பாடல்கள் எல்லாமே மினி இடைவேளை.
கிராமத்து வாசம் அறியாதவர்களின் மனக்கூட்டுக்குள் நுழைய சிரமப்பட்டாலும், ‘அம்மாவின் கைப்பேசி’ மனசிற்குள் பேசத்தான் செய்கிறது.
- குங்குமம் விமர்சனக் குழு