டிசைனர் மொய் கவரில் பிஸியான லாபம்!





கல்யாணமோ, காதுகுத்தோ... பார்த்துப் பார்த்து அன்பளிப்பு வாங்கித் தருவது சிலரது வழக்கம்; ‘‘அதுக்கெல்லாம் பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. ஒரு கவர்ல பணத்தை வச்சுக் கொடுத்துட்டா, தேவையானதை அவங்களே வாங்கிக்கட்டும்’’ என்கிறவர்கள் இன்னொரு ரகம்.

நீங்கள் இரண்டாவது ரகமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்... அன்பளிப்பு கொடுக்கும்போது, உள்ளே இருக்கிற பொருளின் மதிப்பு தெரியாதபடி அதை அழகாக ‘கிஃப்ட் பேக்’ செய்து ஆடம்பரமாகத்தானே கொடுப்போம். பணமாகக் கொடுக்கும்போது மட்டும், கையில் கிடைத்த ஏதோ ஒரு கவரில் ஏன் போட்டுத் தர வேண்டும்?
ஒவ்வொரு விசேஷத்துக்கும் பொருத்தமாக, வித்தியாசமான மொய் கவர்கள் இப்போது பிரபலமாக ஆரம்பித்திருக்கின்றன. டிசைனர் மொய் கவர் தயாரிப்பதில் வருடம் முழுக்க பிசியாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மணிமேகலை.

‘‘வட இந்தியாவுல இந்தப் பழக்கம் ரொம்ப காலமாவே இருக்கு. நம்மூருக்கு இது புதுசு. பிறந்த குழந்தைக்கு பணம் கொடுக்கணும்னா, தொட்டில் அல்லது ஃபீடிங் பாட்டில் ஷேப்; குட்டிப் பசங்களுக்குன்னா கார்ட்டூன், பென்சில் பாக்ஸ், பேனா, ஐஸ்கிரீம், சாக்லெட் ஷேப்; கிரகப்பிரவேசத்துக்குன்னா வீடு வடிவத்துல... இன்னும் இப்படி உங்க கற்பனைக்கேத்தபடி எந்த ஷேப்லயும் இந்த கவர்களை பண்ணலாம். ஹேண்ட்மேட் பேப்பர், துணி, கலர் கலரான சார்ட் பேப்பர், கிஃப்ட் பேப்பர், சாட்டின் ரிப்பன், குந்தன் கல், கண்ணாடி, 3டி லைனர், ஜரிகை, விதம்விதமான பன்ச்சிங் மெஷின், பசை... இப்படி இதை செய்யத் தேவையான எல்லாப் பொருள்களுமே சுலபமா கிடைக்கும்.

எல்லா மாடல்களுக்கும் அளவு இருக்கும். அதை வச்சு அதைவிடப் பெரிசாகவோ, சின்னதாகவோ பண்ணிக்கலாம். ஒரு நாளைக்கு 15 முதல் 20 கவர்கள் பண்ணலாம். ஸ்டேஷனரி கடைகள், அன்பளிப்புப் பொருள்கள் விற்கிற கடைகள், கல்யாணப் பத்திரிகை, கல்யாணப் பரிசுகள் விற்கிற கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். மாடல் மற்றும் வேலைப்பாடுகளைப் பொறுத்து, ஒரு கவர் 15 ரூபாய்லேருந்து விற்கலாம். அதிகபட்சமா 50 ரூபாய், 75 ரூபாய்க்குக் கூட கவர்கள் உண்டு. வருஷத்துல எல்லா நாளும் வாய்ப்பு இருக்கிற பிசினஸ் இது’’ என்கிறார் மணிமேகலை. அட... மொய் கவரில் ஒளிந்திருக்கிறது உங்களுக்கான வருமானம்!
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்

முதலீடு:
ஆயிரம் ரூபாய்
லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: 400 ரூபாய் (ஒரே நாள் பயிற்சியில் 3 மாடல்கள். கற்றுக் கொள்ளத் தேவையான பொருள்களும் வழங்கப்படும்)
தொடர்புக்கு: 98846 12156