கடல் First look





*  கௌதம் கார்த்திக், துளசி இருவருமே புதியவர்களாக இருந்தும், வழக்கம் போல எண்பது நாட்களுக்குள் ‘கடல்’ படத்தை முடித்துவிட்டார் மணிரத்னம். அந்தமான், ராமேஸ்வரம், மணப்பாடு என மூன்று இடங்களில்தான் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

*  கௌதமுக்கும், மணிரத்னத்திற்கும் அருமையான நட்புறவு நிலவியது. ‘கௌதம்’ என பாசக் குரலெடுத்தும், சமயங்களில் ‘வாடா, போடா’ என அந்நியோன்யமாகவும் ஹீரோவைக் கூப்பிடுவார். அந்தக் குரலுக்கு பவ்யத்தோடு ஆஜர் ஆகும் கௌதமை பார்க்கவே பாந்தம் என்கிறார்கள்.

*  ஷூட்டிங் முடிகிற வரைக்கும் கார்த்திக் அந்தப் பக்கமே தலை காட்டவில்லை. ‘ஒரு தடவை வந்துட்டு போங்களேன்’ என மணிரத்னம் அழைத்தும் கூட, ‘அய்யோ! எதுக்கு? நீங்களே நல்லா பார்த்துக்குவீங்க’ என மறுத்துவிட்டார்.

*  துளசியின் பாவனை, நடவடிக்கைகளில் அப்படியே அம்மா ராதாவின் சாயல். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே கௌதமோடு சகஜமாகப் பழகிவிட்டார். கௌதமை எப்போது பார்த்தாலும் ‘அப்பா போன் பண்ணாரா?’ என ஒரு வார்த்தையாவது கேட்டுவிடுவார் ராதா.

*  கௌதமின் அப்பாவாக நடிக்கிறார் பொன்வண்ணன். அரவிந்தசாமியின் ரீஎன்ட்ரீ படத்திற்கு பெரிய ப்ளஸ் என்கிறார்கள். ‘‘எவ்வளவு நாள் ஆச்சு... மனிதர் ‘டச்’ விட்டுப் போச்சுன்னு சொல்ல முடியாதபடி பண்ணுகிறாரே’’ என்றுதான் யூனிட்டில் பேச்சு. அர்ஜுனுக்கும் படத்தில் கௌரவமான இடம்.

*  பெங்களூருவில் டிகிரி முடித்த கையோடு மணப்பாடுக்கு பேக்கப் ஆகிவிட்டார் கௌதம். அப்பா மாதிரி இல்லாமல் ‘குட் ஸ்டூடன்ட்’ என்று பெயர் வாங்கியிருக்கிறார். உச்சரிக்கிற ஆங்கிலத்தில் அழகு கொட்டுமாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் பழகி, இப்போதுதான் தமிழ் சரளமாக வருகிறதாம் சாருக்கு.

*  ரஹ்மான் திடீரென்று இரண்டு நாள் பயணமாக மணப்பாடு வந்திருந்தது, இன்ப அதிர்ச்சி. குதித்து படகில் ஏறி, நடுக்கடல் வரைக்கும் சென்று மீனவர்களோடு உட்கார்ந்து, அவர்களின் உணவையே சாப்பிட்ட ரஹ்மானைப் பார்த்து கிராமத்துக்கே பெருவியப்பு.

*  ‘ஃபேஸ்புக்கில் ஒர்க்கிங் ஸ்டில்களை போட்டு விடாதே’ என்பது கௌதமுக்கு மணி சாரின் கண்டிப்பான உத்தரவு.

*  ஷூட்டிங் இடைவேளையில் கௌதம் கிடார் வாசிப்பாராம். ‘கடல்’ பாடல்களை அதே அழகோடு அவர் பாடி வாசிக்கக் கேட்பது உதவியாளர்களுக்கு பொழுதுபோக்கு.

*  டிசம்பர் 17ம் தேதி 7 பாடல்களும் வெளியாகிறது. ரஹ்மான், மணிரத்னம் ரசிகர்களுக்கு அன்றுதான் புது வருடம்.

*  கௌதமை சண்டைப் பயிற்சிக்கு கனல் கண்ணனிடமும், நடனத்திற்கு பிருந்தாவிடமும் அனுப்பி வைத்தாராம் மணிரத்னம். இப்போ சார் பக்கா ஹீரோ!
- நா.கதிர்வேலன்