தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?





உயிர்த் தண்ணீர் கிடைக்காமல் கருகிக் கிடக்கிறது காவிரி டெல்டா. கர்நாடக அரசியல்வாதிகளும், விவசாய சங்கங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து, அப்பட்டமாக ஒத்த குரலில் மிரட்டுகிறார்கள். தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சாட்டையைச் சுழற்றவேண்டிய மத்திய அரசு, அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.

மின்தடையால் தமிழகப் பொருளாதாரமே சிதைந்து விட்டது. தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன. பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி உழல்கிறார்கள். மக்கள் இருளில் தவிக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு மின்சாரம் அனுப்பி கருணை காட்டுகிறது மத்திய அரசு. டெல்லியில் உபரியாகும் மின்சாரத்தை நாம் கேட்டால் மட்டும் ‘பாதையில்லை... கம்பியில்லை...’ என்று கைவிரிக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது சிங்களத் துப்பாக்கி. கண்டிக்கச் சொல்லிப் போராடினால், கவலை தெரிவித்து கடிதம் அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறது மத்திய அரசு.  

- இப்படி தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடங்கி, இலங்கை ராணுவத்தினருக்கு போர்ப்பயிற்சி அளிப்பது வரை எல்லாவற்றிலும் தமிழகத்தின் உணர்வைப் புறந்தள்ளி, திட்டமிட்டு வஞ்சிக்கிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது.   


‘‘மாநிலங்களுக்கு இடையிலான 1956ம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்தின் 6, 6ஏ பிரிவுகளின்படி, அனைத்து சட்டபூர்வ அமைப்புகளின் தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது...’’ என்கிறார் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன்.
‘‘பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவை செல்லாது என்கிறது கர்நாடகம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிராகரிக்கிறது. ஆனால் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். 2007ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பை இதுவரை அரசிதழில் வெளியிடக்கூட மத்திய அரசு முயற்சிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் பொறுப்பு காலியாகவே இருக்கிறது. உச்ச நீதிமன்றம் உரத்த குரலில் கண்டித்தபிறகே மத்திய அரசின் உறக்கம் கலைகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 355வது விதிப்படி, ‘ஒரு மாநில அரசு, சட்டபூர்வ அமைப்புகளின் உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்தால், மத்திய அரசு ஒரு கட்டளைத் தாக்கீது அனுப்பி தீர்ப்பை நடைமுறைப்படுத்த உத்தரவிடலாம்’. அதையும் மறுக்கும் பட்சத்தில் 356 பிரிவைப் பயன்படுத்தி, அம்மாநில அரசைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்து தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம். இவ்வளவு உரிமைகள் இருந்தும் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது’’ என்கிறார் மணியரசன்.

‘‘காவிரியில் தண்ணீர் கேட்டால், ‘எங்களுக்குப் பற்றாக்குறை இருக்கிறது, தரமுடியாது’ என்கிறது கர்நாடகம். நமக்கு 3000 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், தினமும் 11 கோடி யூனிட் மின்சாரம் நெய்வேலியிலிருந்து கர்நாடகா செல்கிறது. நம்முடைய மண்ணைத் தோண்டி, அதில் கிடைக்கும் நிலக்கரியில் தயாராகும் மின்சாரத்தை நமக்குத் தேவை இருந்தபோதும் அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு உரிமையான தண்ணீரைத் தர மறுக்கிறார்கள்’’ என்கிறார்.

டெல்லி மாநில அரசு, மத்தியத் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்ட 1721 மெகாவாட் மின்சாரத்தை ‘தேவையில்லை’ என்று திருப்பி அளித்துவிட்டது. அதை தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய மின்சார ஆணையத்திடம் விண்ணப்பித்தது தமிழகம். ஆனால் ‘தமிழகத்தில் அதிகத் திறனை தாங்கும் வினியோக வசதி இல்லை’ என்று மறுத்துவிட்டது ஆணையம். ‘நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கே வழங்கலாம்; அதற்கு பதிலாக மத்திய மின்சார ஆணையத்திடம் உபரியாக உள்ள மின்சாரத்தை வலுவான விநியோக வசதி கொண்ட ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு வழங்கலாம்’ என்ற யோசனைக்கும் மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது.

‘‘காங்கிரஸ், பி.ஜே.பி, கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சியினர், அவர்கள் ஆள வாய்ப்புள்ள மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கிறார்கள். பிற மாநிலங்களை வஞ்சிக்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.



‘‘இந்த மூன்று கட்சிகளுக்குமே தமிழகத்தில் வாய்ப்பில்லை. ஆனால் கர்நாடகத்திலும், கேரளத்திலும் இருக்கிறது. அதனால், அம்மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை கோலார் தங்கவயலில் கொட்டப் போவதாக அறிவித்த உடனே அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து போராடத் தொடங்கிவிட்டன. இரண்டே நாட்களில், ‘அப்படி எந்தத் திட்டமும் இல்லை’ என்று அறிவிக்கிறது மத்திய அரசு. ஆனால் அந்தக் கழிவுகளை உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயற்சிக்கிறது. நாம் எதிரிநாடாகப் பாவிக்கிற பாகிஸ்தானில்கூட எல்லை கடந்துவரும் மீனவர்களை கைதுதான் செய்கிறார்கள். ஆனால் குட்டியூண்டு இலங்கை, துப்பாக்கியாலும், கொடூர ஆயுதங்களாலும் தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கிறது. கேட்பார் இல்லை.

கர்நாடகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை என்று சொல்வது மோசடி. தற்காப்பு அடிப்படையில் ஒரு அரசியல் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தமிழகத்தைப் பாதுகாக்க முடியும்’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் மத்திய அரசின் பாரபட்சத்தைக் குறை கூறுகிறார்.

‘‘மத்திய அரசு தனது வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 50 சதவீத வருவாயை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று நெடுங்காலமாகப் போராடி வருகிறோம். எந்தப் பயனும் இல்லை. 1 மாதத்துக்கு தமிழகத்துக்கு 65 ஆயிரம் கிலோலிட்டர் மண்ணெண்ணெய் தேவை. ஆனால், 39 ஆயிரம் கி.லிட்டர்தான் ஒதுக்கீடு செய்கிறார்கள். அரிசி, கோதுமையிலும் 50 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தங்களுக்கு சாதகமில்லாத மாநிலங்களை பல்வேறு வகையில் வஞ்சிக்க முயல்வது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானது’’ என்று குற்றம் சாட்டுகிறார் ராமகிருஷ்ணன்.

தமிழகம் தாகத்தில் தவிக்கிறது. மின்பற்றாக்குறையால் இருளில் தடுமாறுகிறது. இலங்கைக் கடற்படையால் வங்கக் கடல் சிவப்பாகிறது. மத்திய அரசு எல்லாவற்றையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
- வெ.நீலகண்டன்