நிழல்கள் நடந்த பாதை



அடித்தால் கிடைக்கும் அடி


‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிடும். அடி வாங்குகிறவர்களை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த வழிமுறை வேறு எதுவும் கிடையாது. கைதியை நன்றாகப் பின்னி எடுத்து விட்டு, பிறகு பிரியாணி வாங்கித் தரும் போலீஸ்காரனின் உத்திதான் இது. அடியும் அன்பும் நமது கலாசாரத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. பிள்ளையை பெற்றோர் அடிப்பது, மனைவியை கணவன் அடிப்பது, தொழிலாளியை முதலாளி அடிப்பதெல்லாம் நமது சமூகத்தில் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
அடிப்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டுமல்ல... அது ஒரு உரிமையாகவும் இருக்கிறது! கணவன்-மனைவி பந்தத்தின் ஆழமான விஷயங்களில் ஒன்றாக அடிப்பதும், அடி வாங்குவதும் திகழ்கிறது. ‘புருஷன் கையால் அடி வாங்குவது ஒரு சுகம்’ என்று சொல்லும் பெண்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், நான் சந்தித்ததில்லை. நமது சமூகத்தில் ‘சாடிஸம்’, ‘மஸோக்கிஸம்’ எல்லாம் ஒன்றோடொன்று குழம்பி, நமது குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவை மாறிவிட்டன.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது... ‘அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’. அதாவது, ‘ரத்த பந்தத்தாலோ, அன்பினாலோ சாதிக்க முடியாத காரியத்தை வன்முறையால் சாதித்துக் கொள்ளலாம்’ என்கிற ‘உயரிய’ கருத்துதான் இவ்வளவு எளிமையாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தத்துவம் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை பரவலாக காலங்காலமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அடியை ஒரு விசேஷ உரிமையாக, நியாயமாகக் கருதும் இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளில் அதிர்ச்சிகளைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகள் உரிமை சம்பந்தமான பிரச்னைகளில் மேற்கு நாடுகள் காட்டும் அக்கறையும் விழிப்புணர்வும் இந்தியர்களின் மனோபாவத்திற்கு சம்பந்தமே இல்லாதது.

இந்தியக் கலாசாரத்தில் குழந்தைகள், பெற்றோரின் சொத்தாகவும் தனிப்பட்ட சிவில் உரிமைகள் எதுவும் இல்லாதவர் களாகவும் கருதப்படுகிறார்கள். ஆனால் மேற்கத்திய கலாசாரம், குழந்தைகளை எல்லாவித சட்டபூர்வ உரிமைகளும் பாதுகாப்பும் கொண்ட தனி மனிதர்களாகக் கருதுகிறது. உண்மையில் இது சட்டபூர்வமான வித்தியாசம் அல்ல. இரண்டு கலாசாரங்களுக்கு இடையிலான மோதல்.
குழந்தைகளை இந்தியர்கள் நடத்துவது தொடர்பாக நார்வே நாடு மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

நார்வேயில் வசிக்கும் இந்தியத் தம்பதியான அனுருப் பட்டாச்சார்யா - சாகரிகா ஆகியோர் தங்கள் குழந்தைகளான அபிக்யான் (3), ஐஸ்வர்யா (1) ஆகியோருக்கு ஸ்பூன் இல்லாமல் கையால் உணவு ஊட்டியதாகவும், போதுமான பராமரிப்பு செய்யவில்லை என்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு மே மாதம் பெற்றோரிடமிருந்து இந்த இரண்டு குழந்தைகளையும் பிரித்து காப்பகத்தில் சேர்த்தனர்.

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், இந்தியாவில் உள்ள அனுருப்பின் சகோதரர் அருண்பாஷ் பட்டாச்சார்யாவின் பொறுப்பில் குழந்தையை வளர்க்க நார்வே நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரலில் அந்தக் குழந்தைகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் தங்கள் பையனை அடித்த வழக்கில் மீண்டும் ஒரு இந்தியத் தம்பதியர் நார்வேயில் தண்டனை பெற்றுள்ளனர்.  
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களது 7 வயது மூத்த மகன் சாய் ஸ்ரீராம். பள்ளியிலிருந்து பொருள்களை எடுத்து வந்ததற்காகவும், டிரவுசரில் சிறுநீர் போனதற்காகவும் பெற்றோர் தன்னை கடுமையாகக் கண்டித்து அடித்ததாகவும், இந்தியாவிற்கு அனுப்பி விடுவதாக அச்சுறுத்தியதாகவும் வகுப்பு ஆசிரியையிடம் அவன் கூறியுள்ளான். நார்வே நாட்டுச் சட்டப்படி குழந்தைகளை அடிப்பது கடுமையான குற்றம்.

நார்வே நாட்டு சிறார் நலப் பிரிவு அதிகாரிகள் ஸ்ரீராமை தங்களது பொறுப்பில் கொண்டு சென்றனர். ஒரு மாதம் அவர்களிடம் இருந்தான். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அவனுக்கு ஹைபர் ஆக்டிவ் பிரச்னை இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரிடம் கொண்டுவந்து விட்டனர்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் குடும்பத்தோடு சந்திரசேகர் இந்தியா வந்தார். ஆனால், இந்த மாதம் சந்திரசேகர் தனது பணி நிமித்தமாக, தனது மனைவியோடு நார்வே திரும்பினார். கோர்ட்டில் வந்து ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, பின்னர் கைது செய்துவிட்டனர். சந்திரசேகருக்கு 20 மாத சிறைத் தண்டனையும், அனுபமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியிருக்கிறது ஆஸ்லோ நீதிமன்றம். தற்போது சாய் ஸ்ரீராமுக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு மனநல மையத்தில் கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் உரிமைகள் பற்றி எந்தக் கேள்வியும் இல்லாத நமது நாட்டில் இந்த இரண்டு வழக்குகளுமே பெரும் திகைப்பை ஏற்படுத்துவதில் ஆச்சரியமில்லை. இந்த வழக்கும் தண்டனையும் நமக்கு மிகையாகத் தோன்றலாம். ஆனால், நாம் நம் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பது குறித்து முக்கியமான கேள்விகளை இவை எழுப்புகின்றன.

குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக நமது பெரும்பாலான பெற்றோருக்கு எந்தக் கல்வியும் இல்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டோமோ, அதேபோலத்தான் பலரும் தங்கள் குழந்தைகளையும் வளர்க்கிறார்கள். பெற்றோருடைய ஆளுமைக் கோளாறுகள், மன அழுத்தங்கள், பொருளாதார-சமூகப் பிரச்னைகள், விருப்பு வெறுப்புகள் அனைத்திற்கும் வடிகாலாகவும் பலி ஆடுகளாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள்.

ஒழுக்கமும் தண்டனையும் நமது சமூகத்தில் பிரிக்க முடியாததாக இருக்கிறது. ‘அடிப்பதும் வதைப்பதும் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறை’ என்று நமது மனோபாவத்தில் ஊறிப்போயிருக்கிறது. இந்த மனோபாவம்தான் பெற்றோர்கள் மட்டுமல்ல... ஆசிரியர்களும் குழந்தைகளிடம் பெரும் வன்முறையைச் செலுத்துவதற்குக் காரணமாக உள்ளது. உண்மையில் நமது குழந்தைகள் வீடுகளிலும் பள்ளியறைகளிலும் எந்நேரமும் ஏதேனும் ஒரு வன்முறைக்கு ஆளாகும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இப்படி அடிவாங்கி வளரும் குழந்தைகள் மனதால் படிப்படியாகச் சிதைக்கப்படுகிறார்கள். வளர்ந்து பெரியவர்களாகும்போது சமூகத்திற்கும் சக மனிதர்களுக்கும் ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். அல்லது தனக்குத் தானே பெரும் துன்பமாக மாறிவிடுகிறார்கள். குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாப்பது, அவர்களது அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பதில் சந்தேகமில்லை.

நார்வேயில் கொடுப்பது போன்ற தண்டனைகளை இந்தியாவில் கொடுக்க ஆரம்பித்தால் இந்தியாவில் பெரும்பாலான பெற்றோர்கள் ஜெயிலில்தான் இருக்க வேண்டியிருக்கும். நாம் நமது குழந்தைகளை மனிதர்களாக நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு, மனிதர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கொலைகாரக் காதல் காரைக்காலில் தன்னைக் காதலிக்க மறுத்த ஒரு பெண்மீது ஆசிட் ஊற்றிய தெய்வீகக் காதலனைத் தொடர்ந்து, காரைக்குடியில் இன்னொரு தெய்வீகக் காதலன் இதே காரணத்திற்காக ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்கிறான். மாதத்திற்கு நாலு செய்தியாவது இப்படி வருகிறது. பெரும்பாலும் மனநோயாளிகளைக் கொண்ட ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். காதலையும் காமத்தையும் தவிர வாழ்க்கையில் வேறு சாகசங்களோ, உண்மையோ இல்லை என்று நம்பவைக்கும் நமது ஊடகங்களுக்கு இதில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. லட்சியங்களோ, நம்பிக்கைகளோ, கலாசார உணர்வோ, தார்மீக நெறிகளோ, சக மனிதர்கள்பால் நேசமோ இல்லாமல், காதல் என்ற உணர்ச்சியின்பால் மட்டும் வாழக் கற்றுக்கொடுக்கப்படும் தலைமுறையினருக்கு கொலைகளையும் தற்கொலைகளையும் தவிர வேறு திசை இல்லை.


பல பெண்கள் இதுபோன்ற பைத்தியங்களின் காதலை மறுப்பதால் வன்முறைக்கு ஆளாகிறார்கள்; அல்லது அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டு அதைவிட பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.
12.12.2012
இது போன்ற அபூர்வமான தேதிகள் வரும்போது மக்களிடம் அது குறித்து ஒரு அதீத உற்சாகமும் பேச்சும் உருவாகிவிடுகிறது. அபூர்வமாக வரும் சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு, அந்த விசேஷமான நாளில் வாழ நேர்ந்தது குறித்துப் பேருவகை அடைகிறார்கள். ஊடகங்கள் இப்படி நமக்குப் பல விசேஷங்களை தினமும் உருவாக்கி வருகின்றன. இதையெல்லாம் நமக்குச் சொல்லித் தர யாருமில்லாத ஒரு காலம் இருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் அபூர்வத்தின் அளவுகோலாக அவனது மனமும் அனுபவமும் நினைவுகளும்தான் இருந்தன.
12.12.2012 ரஜினி பிறந்த நாள் என்பதால் தமிழர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.
(இன்னும் நடக்கலாம்...)

எனக்குப் பிடித்த கவிதை

வெளியே
ஒரே புழுக்கமாய் இருக்கிறது
என் மீது எதையும் ஏற்றாதே
உனது வார்த்தைகளும் போரடிக்கிறது
நகருக்கு வெளியே கூட்டிப் போ என்னை
சுவரில் சாய்த்து வைத்த
சைக்கிள் சொல்லிற்று
இப்போது அதை அழைத்து
வெளியே போய்க்கொண்டிருக்கிறேன்.
- அப்பாஸ்

நான் படித்த புத்தகம்

சொற்கள் ழாக் ப்ரெவெர்
கவிஞர்களின் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் கவிதை மொழியையே மாற்றி அமைக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள். பிரெஞ்சு கவிஞரான ழாக் ப்ரெவெர் அப்படிப்பட்ட ஒரு கவிஞர்தான். தமிழில் ழாக் ப்ரெவெரின் கவிதைகள் வெளிவந்தபோது இளம் கவிஞர்களிடையே அது ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது. பளிங்கு போன்ற ஒளிரும் சொற்களால் வாழ்வின் ஆழம் காணமுடியாத உணர்ச்சிகளை, அதன் இருண்ட பக்கங்களை எழுதிச்செல்லும் அவரது கவிதைமொழி பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இருண்மையும் வெறுமையும் சூழ்ந்த வறண்ட மொழியோடு போராடிக் கொண்டிருந்த பல இளம் கவிஞர்களுக்கு கவிதையின் புதிய வெளிச்சத்தை அது காட்டியது. மிக எளிமையாகத் தோன்றும் சொற்களினூடே ஒரு மிக நீண்ட தூரத்தை இந்தக் கவிதைகள் வெகு சுலபமாகக் கடந்து செல்கின்றன.
இலையுதிர் காலம்
நிழற்சாலையொன்றின் மத்தியில்
துவண்டு விழுகிறது குதிரை
அதன்மேல் விழுகின்றன இலைகள்
நடுங்குகிறது நம் காதல்
சூரியனும்கூட.
(விலை ரூ.110/-, வெளியீடு: க்ரியா பதிப்பகம், புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை-600041.)

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முந்திரி, உலர் திராட்சை தீர்ந்து போனதால் லட்டு தயாரிக்கும் பணி தடைபட்டது. இதைக் கண்டித்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - செய்திஇந்த நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளுக்காக ஒரு நாள் மக்கள் புரட்சி வெடித்தே தீரும்.