விஜய்யும் அஜித்தும் சேர்ந்து நடிக்க மாட்டாங்க!





‘நீதானே என் பொன் வசந்தம்’ என்று தன் படத்தைப் பார்த்து தானே பாடுவார் போலிருக்கிறது. அத்தனை சின்சியராகப் படப்பணிகளில் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறார் கௌதம்மேனன். டப்பிங் வேலைகளில் பரபரத்த அவரிடம், நமக்கான கொஞ்சம் நேரத்தை ஒதுக்கினோம். பேச ஆரம்பித்துவிட்டால் அவசரம் போய் அர்த்தமும் ஆழமும் வந்தமர்கிறது உரையாடலில்.

‘‘வருண், நித்யான்னு ரெண்டு பேரோட காதலில் சில தருணங்கள்தான் இந்தப் படம். அவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்களா, இல்லையாங்கிறதுதான் கிளைமாக்ஸ். இடைப்பட்ட அவங்க நிஜ வாழ்க்கையை ஒரு கேமராவ வச்சி ஷூட் பண்ணினா எப்படியிருக்கும்? அதுதான் படம். பிரமாதமான ஸ்டோரி, வித்தியாசமான திரைக்கதைன்னெல்லாம் நான் சொல்லமாட்டேன். அப்ரோச் புதுசா இருக்கும்.

இன்னிக்கு இருக்கிற இளைஞர்களில் ஒருத்தன் ஜீவா. 2000த்துல நாமெல்லாம் எப்படி இருந்திருப்போம்... அப்படி ஒரு கேரக்டர். ஸ்கூல், காலேஜ், காலேஜ் முடிச்சதும் ஒரு வேலை. அந்த வேலையில இருக்கும்போதும், அதுக்கு முன்னாடியும் ஜீவாவோட டிராவலாகிற ஒரு பொண்ணு. அதுதான் சமந்தா. முழுக்க முழுக்க லவ் ஸ்டோரிதான். எல்லாருக்குமே லவ் பிடிக்கும். நாமே இப்படி லவ் பண்ணியிருப்போம். பண்ணலைன்னாலும் லவ்வைப் பார்க்கறதுக்குப் பிடிக்கும். எல்லாத்தை விடவும் ராஜா சாரோட இசை, கதையை எங்கேயோ கொண்டு போயிடுச்சு!

ஜீவா - சமந்தா கெமிஸ்ட்ரி ரொம்ப பியூட்டிஃபுல்லா அமைஞ்சிருக்கு. ரெண்டு பேருமே போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. எக்ஸ்பிரஷன்ஸ்ல மிரட்டியிருக்காங்க சமந்தா. எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேலையும் இல்லாம அழகான ஒரு படமா இது இருக்கும். எந்த வயசுக்காரங்களுக்கும் படத்தைப் பார்க்கும்போது ஒரு யூத் எனர்ஜி கிடைக்கும்’’ என்னும் கௌதமிடம் இளையராஜா பற்றிப் பேச்செடுத்தால் பேக்ரவுண்டில் வயலின் கேட்கும் அளவுக்கு ஒரு புத்துணர்வு!

‘‘எல்லா டைரக்டர்களுக்குமே அவரோட வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கும். இந்த புராஜெக்ட்ல அவர் கமிட் ஆகறதுக்கு முன்னாடி, எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. நம்மளோட வொர்க் பண்ணுவாரா, அவர்கிட்ட சொல்ல முடியுமான்னு நிறைய கேள்விகள் இருந்துச்சு. ஆனா ரொம்ப ஃபிரண்ட்லியா இருக்கார். நான் எங்கயாவது இருந்தா, ‘என்ன கௌதம்... என்னோட வொர்க்கை பார்க்கணும்னு உனக்கு ஆர்வம் இல்லையா’ன்னு போன் போட்டு கேட்பார். ‘இதோ வந்திடுறேன்’னு ஓடுவேன்.

பின்னணி இசைன்னு வரும்போது ஒரு சீனை தூக்கி நிறுத்தணும்னு அவசரப்பட்டு அவர் ஸ்கோர் பண்ண நினைக்கிறதில்லை. கரெக்டான இடத்துல மட்டும்தான் மியூசிக் போடுவார். ஒரு பஞ்ச் சீன் இருக்குன்னா ஆடியன்ஸ் அதை என்ஜாய் பண்ண இடம் கொடுத்துட்டு, அப்புறம்தான் மியூசிக் போடுறார். எங்களுக்குள்ள ஒரு அழகான நட்பு போய்க்கிட்டிருக்கு...’’
‘‘ஹாரிஸை விட்டுட்டீங்க... இனி தொடர்ந்து ராஜாதானா?’’

‘‘கௌதமோட இனி வொர்க் பண்ணமாட்டேன்னு ஹாரிஸ்தான் சொன்னார். நான் அப்படிச் சொல்லல. சொல்லவும் மாட்டேன். சூழ்நிலை கூடிவந்து அமைஞ்சா, கண்டிப்பா அவரை நான் கூப்பிடுவேன். தொடர்ந்து ராஜா சார்னும் இப்போதைக்கு சொல்லமுடியாது. அடுத்த படத்தோட ஸ்கிரிப்ட் வொர்க் இப்போதான் தொடங்கியிருக்கு. சூர்யா நடிக்கிறார். மற்ற விஷயங்களெல்லம் இன்னும் முடிவாகல!’’
‘‘காதல் போரடிக்கலையா? அதை விட்டுட்டு எப்போ வரப்போறீங்க?’’



‘‘காதல் என்னைக்குமே போரடிக்காத விஷயம்தான். இருந்தாலும் சூர்யாவை வச்சு அடுத்து பண்ணப் போற படம் முழுக்க முமுக்க ஆக்ஷன்தான். ஷங்கர் சார் ஸ்டைல்ல சர்வதேசத் தரத்திற்கு பிரமாண்டமான படமா இருக்கும். ‘கௌதம் மேனன் ஸ்டைல் இதுதான். அவரால இப்படித்தான் பண்ண முடியும்’னு ஒரு தோற்றம் இருக்குல்ல... அந்த பிம்பத்தை உடைக்கிற மாதிரியான ஒரு படமா அது இருக்கும். சூர்யா படத்தை முடிச்சிட்டு 2014ல அஜித் படத்தை டைரக்ட் பண்ணுவேன்!’’

‘‘விஜய்யோட பண்றதா இருந்த ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’ ஏன் இல்லாமப் போச்சு?’’
‘‘ஆறு மாசம் உட்கார்ந்து பக்காவா கதை ரெடி பண்ணி, எல்லாம் ஓகே ஆகி, அடுத்த வாரமே ஷூட்டிங் போற மாதிரி இருந்தது. லொகேஷன்கூட முடிவாகிடுச்சு, ரஹ்மான் சார், லண்டன்ல டெக்னீஷியன்ஸ் எல்லாம் கூட ரெடி... ஷூட்டிங் கிளம்பற நேரத்துல விஜய், ‘எனக்குக் கதை பிடிக்கலை’ன்னு சொல்லிட்டார். இத்தனைக்கும் அவரோட படம் பண்றது ஏற்கனவே ரெண்டு தடவை மிஸ் ஆகியிருந்ததால, கஷ்டப்பட்டு இந்தக் கதை பண்ணியிருந்தேன். என்ன நினைச்சாரோ தெரியல. ‘என்ன காரணம் சார்?’னு கேட்டப்போ, ‘இல்லேண்ணா... சொல்லத் தெரியல. எனக்கு செட் ஆகல’ன்னு சொல்லிட்டார். ஹீரோ வேணாம்னு சொன்ன பிறகு என்ன செய்ய முடியும்?

வேறொரு கதை சொல்றேன்னு கூட கேட்டுப் பார்த்தேன். ‘இல்ல, நான் விஜய் படத்துக்குப் போறேன்’னு சொல்லிட்டார். அதுக்கு மேல நான் ஃபோர்ஸ் பண்ண முடியாதுல்ல. அப்புறம் நான்தான் டைரக்டர் விஜய்க்கு போன் பண்ணி, ‘ரெடியா இருங்க... விஜய் உங்களுக்கு போன் பண்ணுவார்’னு சொன்னேன். அவ்வளவுதான் நடந்துச்சு...’’

‘‘விஜய்யை டைரக்ட் பண்ணணும்னு இப்பவும் நினைக்கிறீங்களா?’’
‘‘கண்டிப்பா! ஏங்க, அவரு பெரிய ஹீரோங்க. ‘காக்க காக்க’ கதையைக் கூட அவருக்குத்தான் முதல்ல சொன்னேன். அப்பவும் வொர்க் அவுட் ஆகல. அடுத்து ஒரு சந்தர்ப்பம் வந்தா, நிச்சயம் அவரை வச்சு டைரக்ட் பண்ணுவேன். அஜித்-விஜய் ரெண்டு பேரையும் இணைத்துக்கூட படம் பண்ண ஆசைதான். ஆனா, அவங்க ரெடியா இருக்க மாட்டாங்க. அவங்க சேர்ந்து நடிச்சா இண்டஸ்ட்ரிக்குத்தானே லாஸ்!’’

‘‘தயாரிப்பாளர் கௌதம் மேனன்..?’’
‘‘அவரோட கால் லைட்டா மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கு. இன்னும் முழுசா மேல வரல, மிதக்கல. கீழேதான் இருக்கேன். ‘வெப்பம்’, ‘நடுநிசி நாய்கள்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இந்தி ரீமேக்னு மூணு படம் தயாரிச்சேன். எதுவுமே சக்ஸஸ் இல்ல. ஆனா, மூணு படங்களும் லைப்ரரில இருக்கு. இன்னும் இருபது வருஷம் கழிச்சு பேசும். இதுவரை தயாரிப்பாளரா நான் ஜெயிக்கலையேங்கிற என்னோட வருத்தத்தை இப்போ தயாரிச்சிக்கிட்டு இருக்குற ‘தங்கமீன்கள்’, ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ - இந்த ரெண்டு படங்களும் நிச்சயம் போக்கும்!’’
- அமலன்

‘‘ஷூட்டிங் கிளம்பற நேரத்துல விஜய், ‘எனக்குக் கதை பிடிக்கலை’ன்னு சொல்லிட்டார். ‘என்ன காரணம் சார்?’னு கேட்டப்போ, ‘இல்லேண்ணா... எனக்கு சொல்லத் தெரியல. எனக்கு செட்ஆகல’ன்னு சொல்லிட்டார்.’’