நோய்கள் தீர்க்கும் தோட்டம்





புடி (சுளுக்கு) தடவுகிற அருணாச்சல தாத்தாவை எப்போதும் சைக்கிளோடுதான் பார்க்க முடியும். தலைசாய்ந்த டைனமோவைக் கொண்ட, கிரீச் கிரீச் என சத்தம் எழுப்புகிற அந்த ஹெர்குலிஸ் சைக்கிள் அவருக்கு பல வருட சொந்தம். சத்தத்தை வைத்தே ‘இது அருணாச்சல தாத்தாவின் சைக்கிள்’ என்பதை உணர முடியும். பாதி துருபிடித்திருக்கிற அந்த சைக்கிளில்தான் பயணங்களின் காதலன் மாதிரி, எப்போதும் எங்காவது போய்க்கொண்டே இருப்பார் தாத்தா. அக்கம் பக்கத்து ஊர்களில் அவரது தேவை அதிகமாக இருந்ததால் அவரும் அவர் சைக்கிளும் பிஸி. அவருக்காக அந்த சைக்கிள் கிட்டத்தட்ட குட்டை சைக்கிள் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் அருணாச்சல தாத்தாவுக்கு அது உயரம்தான்.

எண்ணெய் படிந்த தோல் பை ஒன்று சைக்கிளில் தொங்கும். அதில் தாத்தாவின் தொழிலுக்கான எண்ணெய்கள் அடங்கிய நான்கைந்து பாட்டில்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான எண்ணெய். குடிப்பதற்கென்று தனி; தடவுவதற்கு தனி. நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், புன்னைக்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சில மூலிகைகளை (என்ன மூலிகை என்பது ரகசியமாம்!) ஒரு சட்டியில் போட்டு கொதிக்க வைப்பார்கள். பத்து லிட்டர் போட்டால், அது சுண்டக் காய்ந்து மூன்று லிட்டரில் வந்து நிற்கும். வர்ம புடிக்கு இதை ஐந்தாறு சொட்டு குடிக்கக் கொடுப்பார்கள். இரவில்தான் குடிக்க வேண்டும். கசப்பாக இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு ஒரே முழுங்கில் விட்டுவிட வேண்டும். கசப்புக்கு கொஞ்சமாக அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம். மற்றபடி எதையும் தொடக்கூடாது. இரவு குடித்தால் மறுநாள் விழிக்கும்வரை தண்ணீர் குடிக்கக் கூடாது.

இவ்வளவு விஷயங்களை தாத்தா எங்கு போய் கற்றார் என்பது தெரியாது. சிறுசு முதல் பெருசு வரை யாரையுமே ‘அய்யா’ என்று அழைக்கும் அருணாச்சல தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கலாம்.
‘‘என்ன, தூரமா போறேரு. ஒம்மெ பார்க்கலாம்னுலா வாரென்...’’
‘‘அப்டியாய்யா?’’
‘‘சின்னப் பயலுக்கு நாலு நாளா காய்ச்செலு. ஊசிபோட்டும் கேக்கலெ. புடி கெடக்கான்னு பாக்கணுமெ?’’
‘‘இன்னா போங்க. வாரேன்’’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறுவார். பையன் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ‘‘கொஞ்சம் தண்ணி தாங்கம்மா’’ என்பார். கை, கால்களை கழுவிக்கொண்டு, காய்ச்சலோடு படுத்திருக்கும் பையன் மீது கை வைத்து சூடு பார்ப்பார். காய்ச்சல்காரனின் நாடி பார்ப்பார். பிறகு ஏதோ நினைத்தவராக, ‘‘எங்க போய் விழுந்தீரு?’’ என்பார். காய்ச்சல்காரன் முழிப்பான்.

‘‘முதுகுல புடி கெடக்கு’’ என்று சொல்லிவிட்டு பையனை கல்லில் உட்காரச் சொல்லுவார். தன் தோல் பையில் இருக்கும் எண்ணெய் பாட்டிலில் விளக்கெண்ணெயை எடுப்பார். கையில் ஊற்றி, புடி கிடக்கும் இடத்தில் தேய்ப்பார். சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடும்போது காய்ச்சல்காரன் துடிப்பான். ‘‘வலிக்கோய்யா. பூப்போல தடவிருதேன்’’ என்றபடியே தடவுவார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் வேகவேகமாக அழுத்தித் தேய்த்து விட்டு, கைகளை லேசாக ஆட்டச் சொல்வார். பிறகு பேச்சுக் கொடுத்துக் கொண்டே எழுந்து நிற்பார். அவனது இரண்டு பாதங்களையும் மிதித்துக்கொண்டு இரண்டு கைகளையும் மேலே லாவகமாக ஒரு இழு. ‘டொப்’ என்று ஒரு சத்தம். புடி போயே போச்சு! சிறிது நேரத்தில் காய்ச்சலும் போய்விடும். ஆனால் வலி இருக்கும். பிறகு அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு சைக்கிளை உருட்டுவார்.

பெரும்பாலும் காசுக்காக இதைச் செய்வதில்லை. அவருக்கு சொத்து பத்தும் அதிகம். இருந்தாலும், ‘‘எதையும் சும்மா செஞ்சா, அதுக்கு மதிப்பு இருக்காதுல்லா... அதனால கொடுத்ததை வாங்கிக்கிடுதாரு’’ என்று சொல்லப்பட்டு வந்தது. பக்கத்தூர் கொடைக்குச் சென்றுவிட்டு கும்மிருட்டில் நானும் நண்பன் முத்துசாமியும் சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். ரயில்வே கேட் அருகே வரும்போது மரத்தில் மோதி விழுந்ததில், முத்துசாமிக்கு கால் சுளுக்கிக் கொண்டது. ஒரு காலில் எழுந்தவன் அடுத்த பாதத்தை தரையில் வைத்து அழுத்த முடியவில்லை. வலி. சுளுக்காகத்தான் இருக்குமென நினைத்து அருணாச்சலத் தாத்தா வீட்டுக்கு அவனோடு சைக்கிளை அழுத்தினேன். தாத்தாவின் மூன்றாவது மகன் குமரன் எங்களோடு படிப்பவன்.

அறுபது வாட்ஸ் பல்ப் ஒன்று மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்தது வீட்டு வாசலில். ‘தூங்கிக் கொண்டிருப்பவர்களை எப்படி உசுப்ப’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் நாய் குலைத்து எங்கள் வரவை காட்டிக்கொடுத்தது. ‘‘யாருய்யா?’’ என்று வந்தார் தாத்தா. முத்துசாமியைப் பார்த்ததும், அவன் அப்பா பெயரைச் சொல்லி, ‘‘அவரு மவன்தானெ’’ என்றார். அவனுக்கு பகீர் என்றது. ‘ஆமா’ என்று தலையாட்டிய பிறகு நடந்ததை விளக்கினேன். பிறகு வழக்கம் போல, புடி தடவிவிட்டு காலை உதறச் சொன்னார். ‘‘நாளைக்கு வரை வலி இருக்கும், பாத்துக்கிடுங்கெ’’ என்று அவர் சொன்னதும் நண்பன் சொன்னான், ‘‘அப்பாக்கு தெரியாண்டாம்!’’ ‘‘நான் ஒங்கப்பாட்டெ சொல்லலெ. ஆனா, கால் வலி காமிச்சுக் கொடுக்காதா?’’ என்றார். ‘‘கண்ணுல படாமெ சமாளிச்சிருவென்’’ என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது எதிரில் நின்றிருந்தார் முத்துசாமியின் அப்பா. விழுந்த அடியை அவனும், ஏச்சை நானும் வாங்கிக்கொண்டு திரும்பியதில் அவனுக்கு கால் வலி காணாமல் போயிருந்தது.

ஆண்களுக்கு என்றில்லை... பெண்களுக்கும் அவர்தான் புடி தடவி வந்தார். எருக்கெடங்கிற்கு கூடையில் சாணம் கொண்டு போன பெரியாச்சி, தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் காலும் கையும் ஒரு பக்கம் அப்படியே நின்றுவிட்டது. தூக்கிவந்து வீட்டில் போட்டிருந்தார்கள். காலையும் கையையும் அசைக்க முடியவில்லை. ‘‘இது வலிப்புதாம்னு நெனக்கென். இனுமெ சங்கடம்தாம்’’ என்று பயங்காட்டிப் போனார்கள் பலரும். கேள்விப்பட்டு வந்தார் அருணாச்சல தாத்தா.

கண்கள் ஏங்கி ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியாச்சி. நாடி பிடித்துப் பார்த்தவர், சைக்கிளில் இருந்த எண்ணெயைக் கொண்டு வந்து தேய்த்தார். ‘‘சாயந்தரமும் தேய்ச்சு விடுங்கம்மா. கொஞ்சம் வலிக்கும்னு சொல்வாவோ. கண்டுக்கிடாதிங்கெ. நாளெக்கு வாரென்’’ என்று எண்ணெயை கொடுத்துவிட்டுப் போனார். மறுநாள் வந்தவர், பெரியாச்சியை எழுப்பி உட்கார வைத்தார். முடியவில்லை அவளால். அம்மாவும் சித்தியும் பிடித்துக்கொண்டார்கள். எண்ணெய் தேய்த்து, காலை அங்குமிங்கும் ஆட்டியபடி ஒரு இழு. ‘சடக்’ என்று சத்தம். கையையும் அப்படியே இழுத்துவிட்டதும், ஆச்சிக்கு வலி. படுத்தாள். வலி முடிந்து எழுந்தபோது அவளால் கை, காலை ஆட்ட முடிந்திருந்தது. ‘‘அருணாச்சலம் கைய வச்சு, எது நடக்காம இருந்திருக்கு’’ என்று பாட ஆரம்பித்துவிட்டாள் பெரியாச்சி.



இப்படி ராசிக்காரரான அருணாச்சல தாத்தா, பாம்புக்கடிக்கும் பத்தியம் பார்த்து வந்தார். பாபநாசத்துக்கு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் இடதுபுறமாக இருக்கிறது தாத்தாவின் விவசாயத் தோட்டம். கரும்பு, நெல், கொய்யா, நெல்லி மற்றும் மூலிகைச் செடிகள் வளர்ந்து நிற்கும் தோட்டத்துக்குள் சுகமாகக் கட்டப்பட்டிருக்கிறது அவரது வீடு. தோட்டம் என்று சொல்லப்பட்டாலும் எப்போதும், வாசல் திறந்தே கிடக்கிற ஒரே இடம் இதுவாகத்தான் இருக்கும். எப்போதும் யார் வேண்டுமானாலும் உதவி கேட்டு வரலாம். ஆத்திர, அவசரத்துக்கு இவரை விட்டால் யார் இருக்கிறார்?

மேலத்தெரு மாரியண்ணன் கடைசி பஸ்சில் தென்காசி போவதற்காக, புளியமரத் தெருவில் இரவு வரும்போது பாம்பு கடித்து விழுந்து விட்டான். பேச்சு மூச்சு இல்லை. உடன் வந்தவர்கள் சைக்கிளில் தூக்கி வைத்துக்கொண்டு அருணாச்சல தாத்தாவை தேடி வந்துவிட்டார்கள். ஆனால், தாத்தா இல்லை. அவர் வர நேரமாகலாம். அதுவரை தாங்குவானா மாரியண்ணன்? வீட்டில் இருந்த ஆச்சி, அவனது முகத்தைப் பாத்தாள். வீட்டுக்குள் ஓடியவள், கொஞ்சம் பச்சிலைகளைக் கொண்டு வந்து அவனது வாயில் கசக்கிப் பிழிந்தாள். சாறு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போகப் போக, சிறிது நேரத்தில் கண் விழித்த மாரியண்ணன் எழுந்து உட்கார்ந்து அழுதான். செத்துப் பிழைத்தவனின் கண்ணீர்! அந்தக் கண்ணீரின் அடர்த்தியில், ஒரு உயிர் பெருங்கடனோடு ஆச்சியின் ஆன்மாவில் விழுந்துகிடப்பதை யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

தாத்தா வீட்டில் எல்லாருமே ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து வைத்திருப்பவர்களாக இருந்தார்கள். நுங்கில் வண்டி செய்து ஓட்டுகிற அவரது மகள் வயிற்றுப் பேரன் கூட, விஷக்கடிக்குப் பச்சிலை தருபவனாக இருக்கலாம். பழக்கங்கள் தரும் அனுபவம், கற்றதை விட அதிகம். எப்போதும் சைக்கிளுடன் அலையும் தாத்தா, இப்போது இல்லை. எங்களுடன் படித்த குமரன் வெளிமாநிலம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாகச் சொன்னார்கள். எப்போதும் திறந்தே கிடக்கும் தோட்டம், காம்பவுண்ட் சுவருக்குள் பத்திரப்பட்டிருக்கிறது. அவரது வீடிருக்கும் தோட்டத்தை பஸ்ஸில் கடக்கும்போதெல்லாம் முதுகில் புடி பிடித்து, வலியோடு அவர் முன் அமர்ந்திருப்பதாகவே உணர்கிறேன்.
(வாசம் வீசும்...)