சிக்கனம்




அந்தப் பிரபல உரக் கம்பெனியின் ‘காஸ்ட் கன்ட்ரோலர்’... அதாவது, சிக்கன நடவடிக்கை அதிகாரி பதவி காலியானது. வெளியிலிருந்து புதிதாக ஆள் எடுப்பதைவிட, நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கே புரொமோஷன் தரலாம் என முடிவெடுத்தார்கள்.

அதற்கான பயிற்சி மற்றும் தேர்வு முகாம் நடந்து கொண்டிருந்தது. பத்து ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்தார்கள். இறுதியில் அந்தப் பயிற்சியை சரியாக உள்வாங்கி, தன் திறனை நிரூபிக்கிறவருக்கே பதவி. பயிற்சி வகுப்புக்கு இடையே உணவு இடைவேளையின்போது கம்பெனி கேன்டீனில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு சிக்கன நடவடிக்கை அதிகாரியாக விக்னேஷை தேர்ந்தெடுப்பதாக உடனடி அறிவிப்பு செய்தனர் உயர் அதிகாரிகள்.

‘‘பயிற்சிக்குப் பின் டெஸ்ட் எதுவும் வைக்காமல் எந்த அடிப்படையில் விக்னேஷை தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று மற்றவர்கள் கேட்டனர்.
தலைமை அதிகாரி பதில் சொன்னார்...

‘‘கேன்டீனில் உணவு முடித்து நீங்க எல்லாரும் கை கழுவப் போனீங்க. அங்க ஒரு பைப்புல தண்ணீர் வீணாகிட்டு இருந்தது. எல்லோரும் கை கழுவிட்டு போயிட்டே இருந்தீங்க... விக்னேஷ் மட்டும்தான் அதைப் பொறுப்பா அடைச்சிட்டு போனார். தண்ணீரை வீணடிக்காம இருக்கிறதும் ஒரு சிக்கன நடவடிக்கைதான். இது உங்களுக்குப் புரியலை; விக்னேஷுக்குப் புரிஞ்சதால அவருக்கு இந்தப் பதவி! புரிஞ்சுதா?’’
புரிந்ததற்கு அடையாளமாக அனைவரும் மௌனமாக வெளி
யேறினர்.