ராசி





‘இது ஒரு சொஜ்ஜி, பஜ்ஜி கேஸ்...’
- பெண் பார்க்க வந்தவனைப் பார்த்தவுடனே மிருதுளா இந்த முடிவுக்குத்தான் வந்தாள். கறுப்பாக, குள்ளமாக, சற்றே பருமனாக, முன் வழுக்கையுடன்... தமிழ் சினிமாவில் பார்க்கும் அத்தனை நகைச்சுவை நடிகர்களையும் மிக்ஸ் செய்தது போன்ற தோற்றம். இவன் எதற்காக தன்னைப் பெண் பார்க்க வந்தான் என்றே அவளுக்குப் புரியவில்லை. காபி கொடுத்தபோது மனசாட்சியே இல்லாமல் தன் அழகிய முகத்தைப் பார்த்து அவன் சிரித்ததும், அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.  
‘‘பையனை பிடிச்சிருக்காம்மா?’’ - அப்பா கேட்டார்.
‘‘இவன் எல்லாம் ஒரு மாப்பிள்ளைன்னு எப்படிப்பா முடிவு பண்ணீங்க?’’ - மிருதுளா கண்ணீருடன் கேட்டாள்.
‘‘ஸாரிம்மா, உனக்கு செவ்வாய் தோஷம்... அதனால மாப்பிள்ளை கிடைக்க கஷ்டமா இருக்கு!’’  
அதற்குள் அந்த மாப்பிள்ளை, இவர்கள் பேசிக்கொண்டிருந்த அறைக்கே வந்துவிட்டான்.
‘‘தங்கச்சி, கவலைப்படாதேம்மா! நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க பெண் பார்க்க வரல. என்னுடைய ராசி என்னன்னா, நான் பார்க்கப் போற பொண்ணுக்கு உடனே வேற நல்ல மாப்பிள்ளை கிடைச்சு, கல்யாணம்
நல்லபடியா முடிஞ்சுடும். அதனாலதான் உன்னையும் பெண் பார்க்க வந்தேன். உனக்கும் கூடிய சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். நான் போயிட்டு வர்றேம்மா!’’
சிரித்தபடி சொல்லிவிட்டுக் கிளம்பினான் அவன்.