பிளஸ் 2 கணிதம்... சென்டம் வாங்க டிப்ஸ்!





டைம் டேபிள் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் தயாராகி விட்டார்கள் பிளஸ் 2 மாணவ, மாணவிகள். நிறுத்தி நிதானமாக ஒரு முறை புத்தகத்தைப் புரட்டியாகி விட்டது. இது ஃபைனல் ரவுண்டு. இது முடியும்போது செய்முறைத் தேர்வு. தொடர்ந்து தேர்வுக் களம். மொத்தமாக மதிப்பெண்களை அள்ள வேண்டும் என்பதுதான் புத்தகமும் கையுமாகத் திரியும் ஒவ்வொருவரின் ஆசையும். அந்த ஆசையை நிறைவேற்ற அனுபவ ஆசிரியர்களின் அறிவுரைகளும், ஏற்கனவே சாதித்தவர்களின் சக்ஸஸ் ஃபார்முலாக்களும் இங்கே அணிவகுக்கின்றன.

முதலில் கணிதம்...


‘‘பொதுவா ‘சென்டம்’ எண்ணிக்கையில டாப்ல இருக்கறது கணக்குதான். மத்த பாடங்கள்ல ‘சென்டம்’ வாங்கறது எப்படின்னு யோசிக்கணும். ஆனா இதுல ‘சென்ட’த்தை தடுக்கிற விஷயங்களை கண்டுபிடிச்சு கிளியர் பண்ணிட்டா போதும்’’ என்கிற சுந்தர்ராஜன், சென்னை எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர்.
‘சென்டம்’ வாங்குவதைத் தடுக்கும் காரணிகளாக அவர் லிஸ்ட் போடும் மூன்று விஷயங்களையும், அவற்றை வெல்வதற்கான டிப்ஸ்களையும் பார்க்கலாம்.

கணிதத்தில் முழு மதிப்பெண்களைத் தடுக்கும் பிரதான எதிரி, ஒரு மார்க் கேள்விகள்தான். விடை கொடுக்கப்பட்டு டிக் செய்யச் சொல்லியும் மார்க் போகிறது என்றால், அவசரமும் கவனக்குறைவுமே காரணம். அவசரத்தையும் கவனக்குறைவையும் தடுக்க, கேள்வித்தாளை கையில் வாங்கியதும் 40 கேள்விகளையும் ஒருமுறை நிதானமாகப் படித்துவிட வேண்டும். ஆனால் விடையளிப்பதை கடைசியாக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் சில வினாக்களில், ‘விடை இதுவா... அதுவா...’ என்கிற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. அதில் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். 10 மார்க் கேள்விகளுக்கு முதலில் விடையளிக்கலாம்.

பெரிய கேள்விகளில் (6, 10 மதிப்பெண்) ஃபார்முலா, ஸ்டெப்ஸ், விடை மூன்றும் சரியாக இருந்தால்தான் முழு மதிப்பெண் கிடைக்கும். இதில் ஏதாவது ஒன்றை மிஸ் பண்ணினாலும் அதற்கான மார்க் கட். எனவே, இவற்றைப் போடும்போது மேற்படி விஷயங்களில் கவனம் இருக்க வேண்டும். தேர்வை எழுதி முடித்த பிறகும் மீண்டும் ஒருமுறை செக் பண்ணிக்கொள்வது சிறந்தது.

6 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகளில் கட்டாயம் பதிலளிக்க வேண்டிய இரு கேள்விகள் இருக்கும். நிறைய பேரின் ‘சென்டம்’ கனவுகளை கடந்த காலங்களில் காலி செய்திருக்கின்றன இந்தக் கேள்விகள். இவை, ‘பகுமுறை வடிவியல்’ (Analytical geometry) , ‘நிகழ்தகவு’ (Probability) பாடங்களிலிருந்தே அடிக்கடி கேட்கப்படுகின்றன. இந்த இரு பாடங்களையும் முழுதாக வாசித்துவிடுவது நல்லது.

‘‘ஒரு மார்க் கேள்விகளைப் பொறுத்தவரை வேற வழியே இல்லை. ரெண்டு வால்யூமும் சேர்த்து பாடப்புத்தகத்துல உள்ள (புக் பேக்) கேள்விகளே 375. அதோட பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிடும் ‘கம் புக்’கில் உள்ள 200 கேள்விகளும் சேர்த்து சுமார் 600 கேள்விகளைப் பார்த்தே ஆகணும். பெரிய கேள்விகள்ல ஃபார்முலா, ஸ்டெப்ஸ் மனசுக்குள்ள இருந்தா விடை தன்னால வரும்’’ என்கிறார் சுந்தர்ராஜன்.

மாணவர்களிடம் விசாரித்த வரையில் மொத்தமுள்ள பத்து பாடங்களில் ‘வகை நுண்கணிதம்’   (Differential calculus) மட்டும் கொஞ்சம் கஷ்டம் என்கிறார்கள். ஒரு மதிப்பெண் கேள்விகள் நாற்பதில் 33 கேள்விகளுக்குக் குறையாமல் ‘புக் பேக்’கில் இருந்தும் மீதி 7 கேள்விகள் ‘கம் புக்’கில் இருந்தும் கேட்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
‘‘முழுக்க படித்தாக வேண்டிய ஒரு மார்க் கேள்விகளுக்கு எப்படித் தயாராவது?’’

‘‘பாடம் முடிய முடிய ஒரு மார்க் கேள்விகளைத் தனியா ஒரு பேப்பர்ல எழுதி வச்சிருக்கோம். ‘கம் புக்’ மாதிரியே அதுவும் தொகுப்பா கையில இருக்கு. ஏற்கனவே ஒரு முறை படிச்சு பரீட்சையும் எழுதியிருக்கறதால, இப்ப திருப்ப ஈசியா இருக்கு. சரியாப் படிக்காதவங்க இப்ப முதல்ல இருந்து ஆரம்பிச்சு ஒரு நாளைக்கு பத்து கேள்விகள் வீதம் படிச்சாக்கூட தேர்வுல 40க்கு 40 வாங்கலாம். பழைய ஐந்து வருட கேள்வித்தாள்களை வாங்கி, அடிக்கடி கேட்கப்படுற கேள்விகளைக் குறிச்சுக்கலாம். இது போக நாலு நாலு பாடமா படிச்சு டெஸ்ட் எழுதிப் பார்க்கறதும் நல்ல பலனைத் தருது. நாங்க அப்படித்தான் பண்ணிட்டிருக்கோம்’’ என்கிறார்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 எழுதக் காத்திருக்கும் கார்த்திக் மற்றும் ராம்ஜி. வகுப்புத் தேர்வில் 198 வரை வாங்கிவிட்ட இருவரும், சென்டம் வாங்குவதில் நூற்றுக்கு நூறு உறுதியாக இருக்கிறார்கள்.



40 மதிப்பெண்கள் தயார். மீதமுள்ள 160 மதிப்பெண்களுக்கு? மொத்தமுள்ள பத்து பாடங்களிலிருந்து முப்பது கேள்விகள் கேட்கப்படுகின்றன. எது ஈசி, எதை சாய்ஸில் விடலாம், முக்கியமான பாடங்கள் எவை, திரும்பத் திரும்ப வரும் கேள்விகள் எவை? ஆவலுடன் காத்திருங்கள்... அடுத்த வாரம் பார்க்கலாம்!
தொகுப்பு: அய்யனார் ராஜன்
படங்கள்: தமிழ்வாணன், கிருஷ்ணமூர்த்தி


சீக்ரெட் ஆஃப் சென்டம்!

கடந்த ஆண்டு கணிதத்தில் சென்டம் வாங்கி, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கிறார் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பவித்ரா. ‘‘ஃபார்முலாக்களை ஒரு பேப்பர்ல எழுதி ரூம் சுவர்ல ஒட்டி வச்சு, நேரம் கிடைக்கறப்பல்லாம் சொல்லிச் சொல்லிப் பார்ப்பேன். பழைய கேள்வித்தாள்களை வாங்கி, முக்கியமான கேள்விகள்ல கூடுதல் கவனம் செலுத்துனேன். என்னைப் பொறுத்தவரை நைட் பத்து மணிக்கு மேல படிச்சாதான் மனசுல பதியும்’’ என வெற்றி ரகசியம் சொல்கிறார் அவர்.



கேள்விகள் எப்படி வரும்?

இரு தொகுதிகளாக இருக்கும் கணிதப் புத்தகத்தில் மொத்தம் பத்து பாடங்கள். அவற்றிலிருந்து 200 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
    கேள்விகள்     எண்ணிக்கை    மொத்த மதிப்பெண்
    ஒரு மதிப்பெண்       40     40ஜ்1=40
    ஆறு மதிப்பெண்    10 (15 கொடுக்கப்பட்டிருக்கும்)    10ஜ்6=60
    பத்து மதிப்பெண்    10 (15 கொடுக்கப்பட்டிருக்கும்)    10ஜ்10=100
குறிப்பு: 6 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகளில் கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் முறையே கேள்வி எண் 55, 70.