நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்






விடுமுறை தினத்தில் சந்தித்துக்கொள்ளும் நான்கு நண்பர்கள் கிரிக்கெட் விளையாடச் செல்கிறார்கள். போங்கு ஆட்டமும் அழுகுணி ரன்னுமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ‘கேட்ச்சை’ கோட்டை விட்டு கீழே சாய்கிறார் விஜய் சேதுபதி. விழுந்த வேகத்தில் தலையில் அடிபட்டு மூளையில் சில ஃபைல்கள் எரேஸ் ஆகின்றன.

‘காதலித்த பெண்ணுடன் அடுத்த நாளே நிச்சயதார்த்தம், அதற்கு மறுநாள் கல்யாணம்’ என்ற நிலையில், சேதுபதிக்கு இப்படி ஒரு மறதி நோய். இந்த சீரியஸ் களத்தை முழுக்க காமெடி ட்ரீட்மென்ட்டாக சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் டைரக்டர் பாலாஜி தரணிதரன். ‘‘என்னாச்சு...’’ எனத் தொடங்கும் ஒரு வரி வசனம்தான் படத்தின் ஹீரோ. படத்தில் இது எத்தனை இடங்களில் வருகிறது என்று போட்டியே கூட வைக்கலாம். ஆனாலும் ஒரு இடத்தில்கூட போரடிக்காத வகையில் திரைக்கதையில் காமெடி கதம்பம் கட்டியிருப்பதற்கு வாழ்த்துக்கள்!

‘‘என்னாச்சு... கிரிக்கெட் விளையாடப் போனோம்... நீதான அடிச்ச? பந்து மேல போச்சு... நான் கேட்ச் பிடிக்கப் போனேன்...’’ என்று ஒரே டயலாக்கை ரெக்கார்டு தேயத் தேயச் சொல்லும் விஜய் சேதுபதி, முகத்தில் எந்தவித ரீயாக்ஷனும் காட்டாமல் நம்மை குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறார். கல்யாண மண்டபத்தில் அதீத மேக்கப்பில் மணமகளாக நிற்பது தனது காதலி என்பது ஞாபகத்தில் இல்லாமலேயே, அவரைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் ‘‘ப்பா... யாருடா இது... பேய் மாதிரி இருக்கு’’ என்று சொல்லும்போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது.

சொன்னதையே சொல்லும் சேதுபதியிடமிருந்து எஸ்கேப்பாக இரண்டு நர்ஸ்களிடம் நடக்கும் போட்டி, கல்யாண மண்டபத்தில் சாக்லெட் வாங்கித் தின்ற பிறகும் காட்டிக் கொடுக்கும் குழந்தை, ‘‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்...’’ என ஆம்பள டாக்டரிடம் பழமொழி பேசி சொதப்பும் நண்பன், விஜய் சேதுபதியின் பிரச்னை தெரியாமல் பேச்சு கொடுத்து மாட்டிக்கொள்ளும் சலூன் நண்பர், அடிக்கடி கட்டிப் பிடித்து பாசம் பிழிந்துகொள்ளும் அண்ணன்... இப்படி படத்தில் அத்தனை கேரக்டர்களும் தியேட்டரை விட்டு வந்த பிறகும் நம் நெஞ்சில் நிறைவதுதான் படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி!

படத்தைத் தாண்டிப் போகாமல் நம்மை கட்டிப் போடும் எளிய ஒளிப்பதிவுக்காக பிரேம்குமாருக்கு சபாஷ்! பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் என மூன்று நண்பர்களாக புதுமுகங்கள் தருவது பாந்தமான நடிப்பு. கிளைமாக்ஸுக்கு முந்தைய சீனில்தான் கதாநாயகியையே நம் கண்ணில் காட்டி சரித்திரம் படைக்கிறார்கள். தமிழ் சினிமா மாறிவிட்டது என வெளிப்படையாகவே தெரிகிறது. பக்கத்திலேயே இருந்தும் சேதுபதியின் நடவடிக்கையில் எந்த வித சந்தேகமும் வராமல் மணமகள் மலர்ச்சியாக நிற்பது எப்படி, காட்சிப் பொருளாகும் மணமக்களை கல்யாணக் கூட்டம் எப்படி கவனிக்காமல் போனது, ஏதோ பொல்லாத குற்றத்தை மறைப்பது போல நண்பர்கள் ஏன் தடுமாறுகிறார்கள்... இப்படி வரிசையாக முளைத்துக் கொண்டு வரும் சந்தேகங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்றாலும் இது படிக்கத் தூண்டும் புத்தகம்தான்.
- குங்குமம் விமர்சனக் குழு