நீர்ப்பறவை





கடலோரக் காதல் கதை! தமிழகக் கடல் எல்லையில் இரையாகும் மீனவர்களின் வலியை, வாழ்க்கைத் துயரத்தை இளம் பருவக் காதலோடு பின்னி இருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.

அந்த மீனவ கிராமத்தில் குடியும் நெடியுமாகத் திரிபவர் விஷ்ணு. அதே ஊருக்கு ஜெப ஊழியம் செய்ய வருகிறார் சுனைனா. சாராயத்திலிருந்து விடுபட வேண்டி, விஷ்ணுவின் தலையில் கை வைத்து சுனைனா ஜெபிக்க, தொடங்குகிறது காதலின் துல்லியம். குடியிலிருந்து விடுபடும் விஷ்ணுவுக்குள் வருகிறது பொறுப்புகள். காதலும் கல்யாணத்தில் முடிகிறது. இல்லறத்தில் இன்ப அலை வீசும் வேளையில், கடலுக்குள் போன விஷ்ணு காணாமல் போகிறார். அவர் என்ன ஆனார் என விரியும் கதையில், காதலுடன் கூடிய கடல் அரசியலே கிளைமாக்ஸ்.

அருளப்பசாமியாக வரும் விஷ்ணு, குடித்துவிட்டு அசல் ‘நீர்’ப்பறவையாக கண் சிவக்க தள்ளாடி நடந்தாலும், ஆக்டிங்கில் செம ஸ்டெடி! போதையில் நடுங்கும் கைகளைக் காட்டி அம்மாவிடமே பணம் கறக்கும் பரிதாபத்தில் வெளுத்துக் கட்டுகிறார். மனைவியை விட்டு கடலுக்குப் போகும் காட்சியில் விஷ்ணுவும் சுனைனாவும் காட்டுகிற இறுக்கம், நெருக்கம், கிறக்கம், தவிப்பு எல்லாமே சூடு பறக்கும் காதல் ஒத்தடக் காட்சிகள்.

‘‘சாத்தானே! அப்பாலே போ...’’ என்று விளக்குமாற்றை நீட்டி விஷ்ணுவை சுனைனா விரட்டியடிக்கும் காட்சியிலிருந்து படத்தில் சுவாரஸ் யம் தொற்றிக்கொள்கிறது. முதலில் துரத்துவதில் ஆகட்டும்... மீண்டும் காதலில் துவளுவதில் ஆகட்டும்... சுனைனாவிடம் முதல்தர நடிப்பு.

விஷ்ணுவின் அம்மாவாக மீண்டும் ஒரு விருதுக்கு கர்ச்சீப் போட்டு வைக்கிறார் சரண்யா. ‘‘டேய், குடிச்சா வல்லு வதக்குன்னு சாப்பிட்டாதானே கறி வைக்கும். கொஞ்சமா குடிடா...’’ என்று மகனுக்கே காசு கொடுத்து குடிக்கச் சொல்லுவது, இதை கண்டிக்கும் கணவரிடம், ‘‘குடிக்கிறதை திடீர்னு நிறுத்தினா உயிருக்கே ஆபத்தாம். கொஞ்சம் கொஞ்சமாதான் நிறுத்தணுங்க’’ என்று மருத்துவம் பேசுவது படு இயல்பு.

வயதான சுனைனாவாக, நந்திதா தாஸ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘‘என்னோட கணவனை சுட்டது அவங்கதான், ஆனா கொன்னது நான்தான்’’, ‘‘உடம்பு கரைக்கு வந்துட்டாலும் உசுரு கடலுக்குள்ளதானே இருக்கு’’ என நீதிமன்றத்தில் உருகும்போது உருக்குகிறார். ‘‘உன் கணவரை சுட்டுக் கொன்றதை அரசாங்கத்துக்கு ஏன் தெரியப்படுத்தல?’’ என்று கேட்கும்போது ‘‘தெரியப்படுத்திருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்பீங்க?’’ என்று நந்திதா கேட்கும் எதிர் கேள்வி உக்கிரம். தினம் தினம் கடலில் வதைபட்டு செய்தியாகும் தமிழக மீனவக் குடும்பங்களின் வலி அதில் தெறிக்கிறது.
படகு செய்து தரும் இஸ்லாமியத் தோழராக வரும் சமுத்திரகனியின் அலட்டல் இல்லாத நடிப்புக்கு ஒரு சல்யூட். டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு இந்திய மீனவர்கள் பற்றி பேசும் கடல் அரசியல் நெத்தியடி. அருமையான உடல் மொழியும் இயல்பான நடிப்புமாக கை தட்டல் பெறுகிறார் ‘பூ’ ராமு. பாதிரியாராக வட்டார மொழியில் களை கட்டுகிறார் அழகம் பெருமாள். தம்பிராமையா, பிளாக் பாண்டி வரும் காட்சிகளில் கலகலப்பு. ஆரம்பத்தில் ஸ்லோமோஷனாக காட்சிகள் நகர்வதைத் தவிர்த்திருக்கலாம்.

கடற்புறப் படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் தொட்டிருப்பது பெரிய உயரம். அதற்காகவே சாருக்கு ஒரு மீன் விருந்து வைங்கப்பா! ரகுநந்தன் இசையில் வைரமுத்து வரிகளில் ‘மீனுக்கு...’, ‘பற பற..’, ‘தேவன் மகளே..’ பாடல்கள் இதம். ‘நீர்ப்பறவை’ அழகாக உயரப் பறந்திருக்கிறது.
- குங்குமம்