துயரங்களின் சாட்சி!





வலி, துயரம், ஆபத்து, ஆவேசம், தீவிரம், அவலம்... அமிர்தராஜ் ஸ்டீபனின் கேமரா இவற்றைத்தான் தேடியலைகிறது. ஒவ்வொரு புகைப்படமும் அழிவின் சுவடுகளையும், வாழ்க்கை மீதான அச்சத்தையும் மனதில் விதைக்கின்றது. தேசத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கும் கூடங்குளம் போராட்டக் களத்தை உலகத்தின் விழிகளுக்கு கொண்டு சென்றவர் இவர்தான். கம்ப்யூட்டர் எஞ்சினியரான அமிர்தராஜ், புகைப்படக்கலை மீதான ஈர்ப்பால் அதையே பிரதானமாக்கிக் கொண்டவர். பிலிப்பைன்சின் அட்டினோ டே மணிலா பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பெற்று ஜர்னலிசம் படித்துவரும் இவரின் புகைப்படங்கள் பல்வேறு சர்வதேசக் கண்காட்சி களில் இடம் பெற்றுள்ளன.

கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி நீண்ட புகைப்படத் தொகுப்பை உருவாக்கி, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கும் அமிர்தராஜின் குடும்பத்தில் ஒரு சுவாரஸ்ய முரண்பாடு. இவரது அப்பா ஸ்டீபன், அணுசக்தித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தீவிர ஆதரவாளர். ‘‘நாலு வருஷத்துக்கு முன்னால் கர்நாடகாவில உள்ள கைகா அணுமின் நிலையத்துல டிரிடியம் லீக்காகி 52 பேர் பாதிக்கப்பட்டாங்க. அப்போதான் முதன்முதல்ல அணுஉலைகள் பற்றி எதிர்மறையான செய்திகளைக் கேள்விப்பட்டேன். செர்னோபில் உள்பட உலகத்தில நடந்த பல்வேறு அணுஉலை விபத்துகளைப் பத்தி விவாதங்களைக் கேட்டதும், கூடங்குளம் பத்தி பயம் அதிகமாயிடுச்சு. காரணம், என் ஊர்ல இருந்து 20 கிலோமீட்டர் தூரம்தான் கூடங்குளத்துக்கு. 2010ல கம்போடியாவில நடந்த அங்கோர் போட்டோ ஃபெஸ்டிவலுக்கு செலக்ட் ஆனேன். எங்களுக்கு பயிற்சி கொடுத்த, ‘மேக்னம்’ அமைப்போட முன்னணி போட்டோகிராபர் அன்ட்வான் டிகாட்டோ, ‘உங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயத்தை புகைப்படம் எடுத்தா அதுல உயிர் இருக்காது. உங்களை நேரடியா பாதிக்கிற பிரச்னையை டாகுமென்ட் பண்ணுங்க. அதுதான் போட்டோகிராபியோட வெற்றி...’ன்னு சொன்னார். அந்த வார்த்தைதான் என்னை கூடங்குளம் நோக்கித் தள்ளுச்சு.



எந்த சார்பும் இல்லாத நடுநிலையான போட்டோகிராபராதான் அங்கே போனேன். வாழ்வாதாரமும், சந்ததியும் பாதிக்கக்கூடாதுன்னு தங்களையே வருத்திக்கிட்டு அறவழியில போராடுற அந்த மக்களோட தீவிரம் என்னை உலுக்குச்சு. நிறைய கேள்விகளோட கிராமம் கிராமமா சுத்தி மக்களைச் சந்திச்சுப் பேசுனேன். போராட்டத்தில முன்வரிசையில நின்ன ஒரு சிறுமி, ‘அணுக்கதிர்வீச்சால் புற்றுநோய் வரும்’னு போட்டிருந்த அவளோட அறிவியல் புத்தகத்தை எடுத்துக் காண்பிச்சு, ‘இப்படிச் சொல்ற அரசே ஏன் அணுஉலைக்கு ஆதரவா இருக்கு..?’ன்னு கேட்டா. அதுக்கு என்கிட்ட எந்த பதிலும் இல்லை. போராளிகளோட உறுதியும், உக்கிரமும், என்னையும் அவங்க பக்கம் இழுத்துச்சு. ஆபத்தான பல தருணங்களைக் கடந்து, நடந்த எல்லாத்தையும் பதிவு பண்ணினேன். எடுத்த படங்களை உடனுக்குடன் பேஸ்புக்லயும் போட்டேன்.

கூடங்குளம் போராட்டத்தைப் பற்றி முழுமையா ஒரு தொகுப்பை உருவாக்குற முயற்சியில இறங்கியிருக்கேன். அதையே கோர்ஸ்ல ப்ராஜெக்ட்டா சப்மிட் பண்ற திட்டமும் இருக்கு. அணுஉலைகள் பத்தி மணிக்கணக்கா நானும் என் அப்பாவும் விவாதிக்கிறோம். ஒரு கட்டத்துல அம்மா வந்து ரெண்டு பேரையும் சமாதானப்படுத்துறாங்க. ரெண்டு பேரும் அவங்கவங்க நிலையில நிக்குறோம். அப்பாவுக்கு என்னைப் பத்தி நிறைய கவலைகள் இருக்கு. மக்கள் நடத்தின தொடர் போராட்டங்களால பிலிப்பைன்ஸ்ல இருந்த 12 அணு உலைகளையும் மூடிட்டாங்க. அதேபோல கூடங்குளம் மக்களோட போராட்டமும் நிச்சயம் ஜெயிக்கும். அந்த சந்தோஷத்தையும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துவேன்...’’ கண்கள் விரிய, நம்பிக்கையோடு சொல்லிச் சிரிக்கிறார் அமிர்தராஜ்.
- வெ.நீலகண்டன்
படம்: தமிழ்வாணன்
விமர்சனக் குழு