பாபனாசம் அசோக்ரமணி





பாரம்பரியம் மிக்க சங்கீதக் குடும்பத்தில் பிறந்து, நல்ல கர்நாடக இசையைத் தரமாகக் கற்று, சம்பிரதாயமாகப் பாடினால், திரை இசை மட்டுமல்ல... வேறு எதுவாக இருந்தாலும் பாட முடியும் என்பதற்கு உதாரணம் நித்யஸ்ரீ மகாதேவன். அவர் கச்சேரி கேட்கும் ரசிகர்கள், காதால் கேட்பதெல்லாம் மட்டும் இல்லாமல் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ கனவா? நனவா? இப்படி ஒரு குரலா? என்ற திகைப்போடு இசையில் மூழ்கிப் போவது உண்மைதான்.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபைக்காக நித்யஸ்ரீ கச்சேரி. மந்தாரி ராகத்தில் ‘எந்துகிடு சபலமு’ கீர்த்தனையை நித்யஸ்ரீ பாட, ராகவேந்த்ர ராவ் வயலினில் கூடவே பாடுவது போலத் தொடர்ந்தார். பட்டணம் சுப்ரமணிய ஐயரின் இந்தப் பாட்டைத் தவிர, தியாகராஜர் மட்டும்தான் இந்த ராகத்தில் கீர்த்தனை தந்திருக்கிறார். ‘எந்நாளும் இந்த பாக்யம்’ என்று முகாரி ராகத்தில் பாபனாசம் சிவன் எழுதிய பாடலை நித்யஸ்ரீ பாவமாகப் பாட, பத்ரி சதீஷ்குமார் மிருதங்கத்தில் நாதமயமாக முழங்கினார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய ‘விஜயாம்பிகே’ பாடலை நித்யஸ்ரீ பாடியது ரொம்பப் பொருத்தம். அம்பிகையே ஸங்கீதத்தின் சாரம். ‘ஓம்காரத்திலிருந்து வெளிப்படும் ராகத்தை ரசிக்கக் கூடியவள்’ என்று வரும் இந்தக் கீர்த்தனையை விஜயநாகரி ராகத்தில் அமைத்திருக்கிறார் முத்தையா பாகவதர். இந்த ராகம் தர்மவதி ராகத்தின் ஜந்யம்.

பக்கத்திலிருந்த ரசிகர் ஒருவர் மற்றொரு வித்வானிடம், ‘‘நித்யஸ்ரீ அழகா பாட்டைப் பாடறதோட இல்லாம, ராகத்தோட பேர், பாடலை இயற்றியவர் யார்னு எல்லாத்தையும் சொல்லிப் பாடினார்... எல்லாமே நமக்குத் தெரிஞ்ச ராகமா இருக்கு. நேத்தி ஒரு கச்சேரி போனேன். அந்த வித்வான் அபூர்வ ராகத்தில அமைஞ்ச கீர்த்தனையாவே எல்லாத்தையும் பாடிண்டிருந்தார்’’ என்றார். அதற்கு அந்த வித்வான், ‘‘அபூர்வ ராகம் பாடுவது இருக்கட்டும் ஓய்! அவர் கச்சேரி பாடறதே அபூர்வமா எப்பவாவதுதான்’’ என்றார்.

நித்யஸ்ரீ அன்றைய மெயினாக கீரவாணி ராகத்தைப் பாடின விதம், நாதஸ்வர இசையை ஞாபகப்படுத்தியது. ஒரு ராகத்தில் குறைந்தபட்சம் 5 அல்லது 6 கீர்த்தனையை பாடம் பண்ணினால்தான், பாடும்போது அந்த ராகத்தின் ஸ்வரூபம் நன்றாகத் தெரியும். கீரவாணி ராகத்தை நித்யஸ்ரீ பாடும்போது. ‘வரமுலொஸகி’, ‘அம்பவாணி’... இப்படிப் பல கீர்த்தனைகளின் மூர்ச்சனைகள் தானாக வெளிவந்தது. அன்றைய ‘கலிகியுண்டே’ கீர்த்தனை, பாடிய ஸ்வரம், வயலின், பத்ரி மிருதங்கம், ராஜகணேஷ் கஞ்சிரா எல்லாம் சேர்ந்து ரசிகர்களைக் கட்டிப் போட்டு விட்டது.


‘ஸுஸ்வரகானமணி’ மதுரை மணி ஐயரின் நூற்றாண்டு விழா, கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. நூறு வருடங்களுக்கு ஒரு முறையாவது இப்படி ஒரு மகாவித்வான் தோன்றுவாரா என்பது சந்தேகம்தான். அவருடைய மருமான் டி.வி.சங்கரநாராயணனின் கச்சேரியை எத்தனை தடவை கேட்டாலும், திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றுவது உண்மை. ஸ்ருதி சுத்தத்திற்கு இன்னொரு பெயர்தான் டி.வி.எஸ். அப்படி ஒரு தெய்வீகக் குரல். அந்தப் பாட்டில் உள்ள உற்சாகமும், புத்துணர்ச்சியும் அனுபவித்தால்தான் தெரியும். பாரதிய வித்யா பவனில் அவர் பாடிய கச்சேரி, மயிலாப்பூர் மாடவீதியில் வலம் வந்த சிவனுக்கே அர்ப்பணம்.

தனது மகன் சங்கர் மஹாதேவனுடன் இணைந்து டி.வி.எஸ் பாடினார். டெல்லி சுந்தர்ராஜன் வயலின்; மன்னார்குடி ஈச்வரன் மிருதங்கம். கச்சேரியைக் கேட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து பரவசப்பட்டார்கள். டி.வி.எஸ்ஸின் பாட்டில் ஒரு பாவம், ஸர்வ லகு ஸ்வரப் பின்னல், ஸ்பஷ்டமான உச்சரிப்பு... ‘‘இப்படி பாட்டைக் கேட்டுப் பல நாளாச்சு’’ என்றனர் பலர். ‘காவா வா’ வராளி எடுத்து, கரஹரப்ரியா ராகத்தை அவர் பாடிய விதம் ரசிகர்களை சொக்க வைத்தது. ‘ராமா நீ ஸமாந’ பாடினது ரொம்ப சரி. ‘‘ராமா! உமக்கு சரி சமானம் யாரு’’ என்று இவருக்காகத்தான் தியாகராஜர் எழுதிவைத்துவிட்டுப் போனாரோ!

மோஹன ராகத்தை ஆரம்பித்த உடனே ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள். ‘‘ஆஹா, கபாலி பவனி வரப் போகிறார்’’ என்று ஆவலோடு இருந்தார்கள். ‘ஆபால கோபாபலம்’ என்று அநுபல்லவியிலிருந்து ஆரம்பித்து, பல்லவி ‘காபாலி’ தொட்ட உடனே ஆரம்பித்த கைதட்டல், மாடவீதியை ரெண்டு ரவுண்டு பல்லக்கில் கபாலீஸ்வரர் சுற்றி வரும் வரை தொடர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத அந்தப் பாட்டை வேறு யாரால் அப்படி உருக்கமாகப் பாட முடியும்? வயலின் சுந்தர்ராஜன் கை ரொம்ப அமர்க்களம். ‘காபாலி’ பாட்டுக்கு அந்த மிருதங்கம் ‘ஈச்வரார்ப்பணம்’ தான்.


டி.வி.எஸ்ஸின் விருத்தம் பாகேஸ்ரீ, ஹம்ஸானந்தி ராகத்தில், தொட்ட இடத்திலெல்லாம் உருக்கம். ‘ஸ்ரீநிவாச திருவேங்கட’, ‘ஸாரஸமுகி’, ‘எப்போ வருவாரோ’... இப்படி ரசிகர்கள் கேட்டு, எதிர்பார்த்து, லயித்து ரசிக்கிற கச்சேரிகள் எல்லாம் இனிமேல் வருமா? தியாகராஜர், பாபனாசம் சிவன், முத்தையா பாகவதர் போன்றவர்களின் பாடல்களைப் பாடி, ‘‘அந்த சங்கீதம் எங்கேயும் போகவில்லை, டி.வி.எஸ் மூலமாக உலகம் பூராவும் இன்னும் பலப்பல வருடங்கள் ஒலிக்கப் போகிறது’’ என்று சொல்லாமல் சொன்னது கச்சேரி.

அதே ஹாலில் பின்னி கிருஷ்ணகுமார் மற்றும் திருவனந்தபுரம் கிருஷ்ணகுமார் கச்சேரி சோபித்தது. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் வர்ணத்தோடு கச்சேரி களைகட்டியது. ‘விதுலகு’ என்ற மாயா மாளவ கௌள கீர்த்தனையை ரெண்டு பேரும் மாறிமாறிப் பாடிய விதம் ரசிக்க வைத்தது. ரஞ்சனி ராகத்தை ரஞ்சகமாக இருவரும் படிப்படியாகப் பாடி, குமார் வயலினோடு குழைத்துக் கொடுத்தார்கள். மன்னார்கோவில் பாலாஜி கை பரம சௌக்கியம். ‘துர்மார்க சராதமுலனு’ பாட்டு இனிமை.

நம் இசைப் பாரம்பரியத்தில் இரட்டைப் பாட்டு அந்தக் காலத்திலிருந்தே பிரசித்தம். ஆலத்தூர் சகோதரர்களை மறக்க முடியுமா? ஒரே ஸ்ருதியில் இரட்டைப் பாட்டு... ஒரு பாட்டாகக் கேட்கும். அந்தக் காலத்து சங்கீதம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பழைய வித்வான்களின் உன்னதமான, காணக் கிடைக்காத, அரிதான, விலை மதிப்பற்ற புகைப்படக் கண்காட்சி இந்த சீஸனில் நாரத கான சபையில் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தாலே நமக்குப் புண்ணியம் கிடைக்கும். எப்பேர்ப்பட்ட வித்வான்கள்... எவ்வளவு மகான்கள்... மேதைகள் நமது கர்நாடக சங்கீதத்தில்! அவர்களை நினைத்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்!
(சாரல் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்