நையாண்டி





கடந்த இருபத்து அஞ்சு வருஷமா மூடி மறைச்சு வச்சிருந்த உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு மதிப்பிற்குரிய மக்களே... நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டுல வசிக்கிற தமிழர்களும், சென்னையில வசிக்கிற தமிழர்களும் ஒண்ணு கிடையாது. அவர்களுக்குள் வித்தியாசம் இருக்கு!

திசென்னை தமிழர்களுக்கு மின்வெட்டைப் பற்றித் தெரியும்; ஆனா தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மின்வெட்டைத் தவிர எதுவும் தெரியாது.
திசென்னை தமிழர்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வருவாங்க. தமிழ்நாட்டு தமிழர்கள் சென்னைக்கு போறப்ப எல்லாம் பண்டிகைதான்.
திசென்னை தமிழர்களுக்கு பக்கத்துக்கு வீட்டுக்காரன் பேரு தெரியாது, ஆனா எத்தனை வகை பீட்சா இருக்குன்னு தெரியும். தமிழ்நாட்டு தமிழர்களுக்கு பீட்சா பத்தி தெரியாது; ஆனா பக்கத்துக்கு வீட்டுக்காரன் பேரு தெரியும்.
திசென்னை தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு தமிழர்கள் ஏமாளிகள். தமிழ்நாட்டு தமிழர்களைப் பொறுத்தவரை சென்னை தமிழர்கள் கோமாளிகள்.

உங்கள் அன்பான, அழகான, அறிவான, ஒருவேளை உங்களைப் பொறுத்தவரை இது எதுவுமே இல்லாத உங்கள் கணவர் குடித்து விட்டு வந்திருக்கிறாரா என கண்டுபிடிக்க சிக்கென சிம்பிள் வழிகள். ஏன்னா, இப்பல்லாம் மனசுல நேசம் இருக்கோ இல்லையோ... சரக்குல வாசமில்ல!
றீ வீட்டுக்கு வந்ததிலிருந்து வாயை வழக்கத்துக்கும் அதிகமாக அகலமாக வைத்து இளித்துக்கொண்டிருக்கிறாரா? ஆடு சிக்கிடுச்சு!
றீ நைட்டு 12 ஆகியும் படுக்கப் போகாம டிவில எதாவது சித்த வைத்திய நிகழ்ச்சியோ, ராசிக்கல் நிகழ்ச்சியோ வச்ச கண் வாங்காம பாத்துக்கிட்டு இருக்காரா? அப்போ வாட்டர் மேட்டர்தான்.
றீ வழக்கத்துக்கு மாறாக கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கிறாரா? எது போட்டாலும் சலிச்சுக்காம சாப்பிடுறாரா? ‘கோ’ பட கார்த்திகா மாதிரி புருவத்த தூக்கி வச்சுக்கிட்டு இருக்காரா? அப்போ காலையில கும்மாங்குத்து குத்த ரெடியாயிடுங்கோ!

சூப்பர்ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தை 3டியில் விடுறாங்களாம். அதே போல வேறு என்ன படங்களை விட்டால் நல்லா இருக்கும்னு ரூம் போட்டு குப்புறப் படுத்து யோசிச்சோம்...
முதல்ல இந்த ‘பருத்திவீரன’ விடணும். அந்தப் படத்துக்குப் பிறகுதான் பல பேரு பரட்டைத் தலை, முள் தாடி, மூணு மாசம் துவைக்காத லுங்கி, வாயில முப்பது மார்க் பீடின்னு ஹீரோக்களை காட்ட ஆரம்பிச்சாங்க. ‘பருத்திவீரன்’ கார்த்தி 3டி எஃபெக்ட்ல நம்ம கிட்டக்க வர்றப்போ ஒரு சீப்ப எடுத்து தலை சீவி, புது சட்டை, வேட்டி மாட்டி விட்டுட்டா போதும்... இனி படம் எடுக்கிறவங்க மேல சொன்ன கெட்டப் இல்லாம படம் எடுப்பாங்க. அப்புறம் நம்ம குல்லா படத்த 3டியில் விடணும். எங்கேயோ 200 மீட்டர் தள்ளி நடக்கிற தல, இப்போ நம்ம கிட்டக்க வந்து ரெண்டு அடி தூரத்துல நடப்பாரு. கை குலுக்கறவங்க கை குலுக்கிக்கலாம், கட்டிப் புடிக்கிறவங்க கட்டி புடிச்சுக்கலாம். இளைய தளபதி சாரோட எல்லா படத்தையும் 3டியில விடலாம். அப்போதான் அவரு எல்லா படத்துலயும் ஒரே கட்டம் போட்ட சட்டைய போட்டு இருக்காரான்னு கரெக்டா கண்டுபிடிக்க முடியும். அப்புறம் இந்த ‘குஸ்தி’ படத்த விடணும். அப்போதான் வம்பு சார் போட்டு இருக்கிறது போலீஸ் யூனிபார்மா... இல்ல, பள்ளிக்கூட என்.சி.சி. யூனிஃபார்மான்னு தெரியும்.

சென்ற வாரத்துல என் எதிர்வீட்டுக்காரரை, அவரது மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அழைத்திருந்தார்கள். விஷயம் இதுதான்... வகுப்பாசிரியர் அந்த சிறுமியை மிரட்டும்போது, அவள் ‘கொய்யாலே’ என்று சத்தம் போட்டு விட்டாளாம். மேலும் அவள் வகுப்பு குழந்தைகள் கண்டிப்பான டீச்சர்கள் வரும்போது, ‘வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க...’ என கலாய்க்கிறார்களாம். ‘வீட்டுப்பாடம் செஞ்சியா’ன்னு கேட்டா ‘அவ்வவ்வ்வ்வ்’ என வடிவேலு போல வாயைச் சுழிக்கறாங்களாம். ஹோம்ஒர்க் செய்யாததுக்கு வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னால் ‘வட போச்சே’ என கமென்ட் சொல்லிச் செல்கிறார்களாம்.

இது கண்டிக்கப்பட வேண்டியதுதான் எனினும் தண்டிக்கப்பட வேண்டியதில்லை. உண்மையில் அசாதாரணமான நிகழ்வுகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் இந்தப் பழக்கம் போற்றப்பட வேண்டியது. இப்படியாக குழந்தைகளின் கற்பனைத் திறனில் வீடு கட்டிக் குடியிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமா கண்ட மாபெரும் சிரிப்பு வைத்தியன். பல கவலைகளுக்கு இடையே சிக்கி தவித்த தமிழக மக்களை வாய் விட்டு சிரிக்க வைத்த உன்னதக் கலைஞன். மக்கள் மனதில் அப்பிக் கிடந்த ஒட்டடைகளை தனது சேட்டைகளால் தூசு தட்டிய அற்புதக் காமெடியன். என் மகள் சென்ற வாரம் இரண்டு வயதைப் பூர்த்தி செய்தாள். இதுபோல தமிழகம் முழுவதும் எண்ணற்ற குழந்தைகள் விவரம் புரிய ஆரம்பிக்கும் அற்புதமான சூழலில், அத்தகைய அற்புதக் கலைஞன் இல்லாதது அந்த குழந்தைகளுக்கு பெரும் இழப்புதான். வாழ்க தமிழக அரசியல் நாகரிகச் சூழல்.

மனிதர்களை விட யானைகள் சந்தோஷமாய் இருப்பது நமக்கு மிக முக்கியம், கருத்து மோதல் எனில் கட்சி விட்டு கட்சி தாவுங்கள், நீதி அரசியல் செய்ய வழி இல்லையெனில் சாதி அரசியல் செய்யுங்கள், மடமையை கொளுத்துவதற்கு பதிலாய் குடிசைகளைக் கொளுத்துங்கள், எதிர்ப்பவர்களை அடக்கி வைக்க அவதூறு வழக்கு போடுங்கள், விளையாட்டிலும் ஊழல் செய்யுங்கள், விலைவாசி ஏற்றுங்கள், அடுத்தவர் திட்டங்களை முடக்கி வையுங்கள், அதே சமயம் உங்கள் திட்டங்களை முடுக்கியும் விடாதீர்கள்.
ஆனால் நாட்டு மக்களின் வயிற்றை நிரப்ப பாடுபட்டு வயிறு நிறையாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை மட்டும் தடுத்து விடாதீர்கள். ஏனெனில் அது நிச்சயம் உங்களுக்கு விழப்போகாத அதிருப்தி ஓட்டுதான்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்
கூட்டணில சேர்க்கவில்லையென கூவி ஏசிப்புட்டு, இப்போ அந்தக் கட்சியிலயே சேர்ந்து கும்மியடிக்கும் நாஞ்சில் சம்பத்து!