
ஒரு வேலையை ஈடுபாட்டோடு நேசித்துச் செய்யமுடியாத அளவுக்கு அதன்மீது உங்களுக்கு வெறுப்பு வந்துவிட்டால், அந்த வேலையிலிருந்து விலகிவிடுவதே நல்லது.
- கலீல் ஜிப்ரான் பொதுவாக நம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தை அல்லது குறைந்தபட்ச சந்தோஷம் ஏற்படுத்தும் சம்பவங்களை ‘முக்கியமான சம்பவங்கள்’ என்று நினைத்து வருகிறோம். இப்படி உங்கள் வாழ்வில் மிகமிக முக்கியமானது என்று கருதும் ஒரு சம்பவத்திற்கு நீங்கள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பீர்கள்?
உதாரணமாக, நீங்கள் மிக முக்கியமானதாகக் கருதும் ஒரு பரீட்சைக்குப் படிக்கிறீர்கள்... விருப்பமான வேலைக்குச் செல்கிறீர்கள்... வியாபார நிமித்தம் ஆர்டர் பிடிக்க ஒரு வி.ஐ.பியை சந்திக்கப் போகிறீர்கள்... ஆசைப்பட்டவரை திருமணம் செய்யப் போகிறீர்கள்...
இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாகவே அதிக உழைப்பைக் கேட்கும். கூடுதல் கவனம் செலுத்தினால் தவிர, இது போன்ற அதிமுக்கிய விஷயங்களில், நீங்கள் விரும்பும் பலனை எதிர்பார்க்க முடியாது. ஒரு வீட்டைக் கட்டுகிற நாம் எவ்வளவு சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்வோம்? ஒரு படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கும் முன் எவ்வளவு கேள்விகளை நமக்குள் கேட்டிருப்போம்?
இயல்பாகவே இதுபோன்ற முக்கியமான வேலைகள் கூடுதல் உழைப்பைக் கேட்பதாலும், உங்களது மனமுவந்த ஈடுபாட்டாலும் நீங்கள் வழக்கத்தை விட அதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்... இது உண்மைதானே?
சரி, இதுபோன்ற பெரிய பெரிய விஷயங்கள் அல்லது சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் எத்தனை நடந்திருக்கும்? நீங்கள் மிக முக்கியமானதாகக் கருதியிருக்கும் தேர்வின் முடிவு, வேலை, திருமணம், முதல் குழந்தை... இதைத் தவிர, அவரவர் சூழலுக்கு ஏற்ப ஒன்றிரண்டு கூடுதலாக இருக்கலாம். ஆனால், பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் தவிர வேறு எதுவும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. மொத்த ஆயுட்காலத்திலேயே பெரிய சம்பவங்கள் என்று பார்த்தால், நான்கைந்துக்கு மேல் தேறாது. எனவே, பெரிய பெரிய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில், சில வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. அப்படியானால், நாம் தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

பெரிய விஷயங்களை எதிர்பார்த்து, அவற்றை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்! உதாரணமாக, பிளஸ் 2 பரீட்சைக்குத் தயார் ஆகிறோம் என்றால், ஒரே நாளில் தயாராகி விடுவதில்லை. ஏறக்குறைய பத்தாவது வகுப்பிலிருந்தே இதற்கான முயற்சியைத் துவக்கி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் சின்னச்சின்ன முயற்சி... சிறுகச் சிறுக பயிற்சி... மெல்ல மெல்ல தயார் ஆகிறோம்.
ஆக, பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற வேண்டுமென்றால் அதற்குப் பின்னால் நிறைய சின்னச்சின்ன சம்பவங்கள் ஒளிந்திருக்கின்றன. சின்னச்சின்ன சம்பவங்களின் தொகுப்புதான் பெரிய சம்பவம். அப்படியானால், எப்போதாவது நிகழக்கூடிய பெரிய திருப்புமுனையை நோக்கி நம் வாழ்வை நகர்த்திச் செல்வது சிறுசிறு நிகழ்வுகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சிறியதும் மிகச் சிறியதுமான இந்தச் சம்பவங்களே... வழக்கமான - அன்றாடம் நிகழக்கூடிய அல்ப சம்பவங்களே... பெரிய பெரிய நிகழ்வுகளுக்கு இடையே இருக்கின்றன. இதே நிலைதான் உங்கள் பணி வாழ்விலும்.
உங்கள் ஒட்டுமொத்தப் பணி வாழ்விலுமே நீங்கள் பெரிய வேலை அல்லது சாதனை அல்லது மனதுக்கு திருப்தி அளித்த வேலை என்று மொத்தமே பத்துப் பதினைந்து வேலைகள்தான் செய்திருப்பீர்கள்! ஒருவர் எவ்வளவுதான் திறமையான எஞ்சினியராக இருந்தாலும் கூட, பெரிய பெரிய கட்டிடங்களையோ, பெரிய பெரிய பாலங்களையோ அனுதினமும் கட்டிக்கொண்டேவா இருக்கிறார்? எவ்வளவுதான் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்றாலும் கூட, அவர் ஒவ்வொரு மேட்ச்சிலுமா செஞ்சுரி அடிக்கிறார்? யோசித்துப் பாருங்கள்!
எனவே, உங்கள் பணி வாழ்வில் பெரிய பெரிய வேலைகள் அல்லது சாதனைகளை விட, சின்னச்சின்ன வேலைகளைத்தான் நீங்கள் அதிகம் செய்திருப்பீர்கள். அல்லது, பெரிய வேலைகள் தொடர்பான சிறிய வேலைகளைச் செய்வதிலேயே தினங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதுதான் நிகழக்கூடியது... சாத்தியமானது. அதாவது நிதர்சனம்!
பெரிய வேலைகளை நீங்கள் எப்படியும் கூடுதல் கவனத்துடன் செய்து முடித்து விடுவீர்கள். சந்தேகமில்லை. அதன் முக்கியத்துவம் கருதி, உங்களது அதிக உழைப்பையும், சிரத்தையையும் வழங்கி விடுவீர்கள். எனவே அது வெற்றிகரமாகவும் முடியக் கூடும்.
நிறைய பேர் நினைப்பது அல்லது செய்கிற தப்பு இங்குதான். பெரிய வேலைகளுக்கு மட்டும்தான் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்... அதை அலட்சியமாகச் செய்யக்கூடாது... பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்! சரி, ஆனால் பெரிய பெரிய வேலைகளோ வருடத்திற்கே ஓரிரு முறைதான் வருகின்றன. மீதி தினங்களுக்கு? சின்ன வேலைகள், அல்ப வேலைகள், வழக்கமான வேலைகள்... இவற்றைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும்.
சின்ன வேலைகள்தானே... வழக்கமான வேலைகள்தானே... அதற்கு கடினமாக உழைக்க வேண்டுமா? கவனம் செலுத்த வேண்டுமா? என்ற நினைப்பு எல்லோருக்கும் வரும். இது மிகவும் தவறு. எப்போதோ வர இருக்கிற பெரிய வேலைகளுக்காக, இந்த சின்ன வேலைகளை நீங்கள் கோட்டை விட்டால், அது ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் பெரிய வேலைகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலைகளையும் பாதிக்கும். பாதிக்காமல் இருந்தால் கூட, எப்போதோ வர இருக்கிற பெரிய வேலைகளுக்காக, இன்று இந்தச் சின்ன வேலையை அலட்சியமாக நினைப்பது எவ்
விதத்தில் நியாயம்?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகம் செய்யக் கூடியவை சிறுசிறு வேலைகள்தான். அன்றாடக் கடமைகள்தான் உங்கள் பணி வாழ்விற்கே அர்த்தம் கொடுக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமது பணிவாழ்வில் பெரிய வேலைகள் எப்போதாவதுதான் வரும். ஆனால் சிறிய பணிகள் என்றுமே இருக்கும். சிறிய வேலைகளை முழு ஈடுபாட்டோடு செய்கிற உங்களால்தான், பெரிய வேலைகளையும் ஈடுபாட்டோடு செய்ய முடியும்.
ஏனென்றால், பெரிய வேலைகளை செய்வதற்கான பொறுமையும், ஆற்றலும் உங்களுக்கு ஒரே நாளில் வந்துவிடாது. திடீரென முழு ஈடுபாடு உங்களுக்கு எங்கிருந்து வரும்? சின்னஞ்சிறு வேலைகளை ஈடுபாட்டுடன் செய்து வந்தால், அது பெரிய வேலைகளைச் செய்வதற்கான பயிற்சியாக அமையும். நாளடைவில் பெரிய பொறுப்புகள் வரும்போது, அதைச் சுமையாக நினைக்காத அளவிற்கு எளிமையானதாக மாற்ற இந்தப் பயிற்சியே உங்களுக்கு உதவும்.
பெரிய வேலைகளைச் செய்து முடிப்பதற்கு தன்னம்பிக்கை மிக அவசியம். அதை நீங்கள் சின்னச் சின்ன வெற்றிகளிலிருந்தே பெற முடியும். எனவே, சிறிய வேலைகளை அலட்சியம் செய்யாதீர்கள். விசேஷ நிகழ்ச்சி ஒன்றுக்காக வீட்டை நன்கு சுத்தம் செய்து, அலங்கரித்து, அழகூட்டி அனைவரையும் அசத்துவது பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது சாதாரண தினங்களில் உங்கள் வீடு எப்படி தோற்றம் தருகிறது என்பதில்தான் இருக்கிறது!
(வேலை வரும்...)