ராஜ மரியாதை பெறும் கோமாளிகள் : அந்தர மனிதர்கள்





பறை அதிருகிறது. முளைப்பாரிகள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. வேட்டு போடத் தொடங்கிவிட்டார்கள்.
‘‘கோமாளியக் கூப்பிடுங்கப்பா... பாரி எடுக்க நேரமாயிருச்சு...’’ - ஊர் நாட்டாமை குரல் கொடுக்கிறார். கண்ணைப் பறிக்கிற வண்ணத்தில் தொளதொள ஜிகினா உடை, சோழிகளால் கோர்க்கப்பட்ட கோரைப் பற்கள், காகிதக்கூழ் தொப்பி, கலகலக்கும் சலங்கை, சணல்கயிறு தாடியோடு பறையடிக்கு ஏற்ப அடவு கட்டி இளசுகளை கலகலக்க வைத்துக்கொண்டிருக்கிற கோமாளி, ஆட்டத்தை நிறுத்திவிட்டு முளைப்பாரியைத் தொட்டுக் கொடுக்கிறார். பயபக்தியோடு அதைப் பெற்றுச் சுமக்கிறார்கள் பெண்கள். கைத்தடியைச் சுழற்றியபடி கோமாளி முன்னே செல்ல, அவரின் சேட்டைகளை ரசித்தபடி ஊர்வலம் பின்னே செல்கிறது.

‘‘கோமாளியை நீங்க சர்க்கஸ்ல பாத்திருப்பீங்க. நாடகத்துல பாத்திருப்பீங்க. அந்த மாதிரி இவர் வெறும் காமெடி பீஸ் மட்டுமில்ல. பூசாரியை விட இவருக்கு பவர் ஜாஸ்தி. அவரு தொட்டுக் குடுத்தாதான் முளைப்பாரி நகரும். அவர் கையால விபூதி பூசிவிட்டாத்தான் திருவிழா முடியும். தலையாரி மாதிரி, கணக்குப்பிள்ளை மாதிரி, நாட்டாமை மாதிரி இந்தப் பகுதியில ஊருக்கு ஊர் ஒரு ‘ஊர்க்கோமாளி’ இருப்பாரு. கோமாளி இல்லாம ஊர்ல ஒரு காரியமும் நடக்காது...’’ என்கிறார் பழநியை ஒட்டியுள்ள கொடிக்கால் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர்.
ஊர்க்கோமாளியா... இதென்ன வேடிக்கை?

‘‘இது பாட்டன் பூட்டன் காலத்துல இருந்து நடைமுறையில இருக்கிற பழக்கம். இன்னைக்கு மாதிரி அன்னைக்கு வீட்டுக்கு வீடு டி.வி இல்லை. சினிமா கொட்டகை இல்லை. பொழுதுபோக்குக்கு வாய்ப்புமில்லை. கூத்தைப் பாத்துத்தான் மக்க சந்தோஷப்பட்டாங்க. கூத்துல கோமாளி வர்றப்போ ஊரே கலகலன்னு கிடக்கும். ஒரு கட்டத்துல கோமாளியாட்டம்னு தனியா ஒரு கலையே உருவாயிருச்சு. ஊருக்கு ஊரு பொதுப்பணம் போட்டு கூத்தாட்டக்காரங்கள குடித்தனமா கொண்டாந்து வச்சுக்கிட்டாங்க. நல்லது, கெட்டதுகள்ல அவங்க கலந்துக்கிட்டு மக்களை சந்தோஷப்படுத்துவாங்க.  

இந்தப் பகுதியில நடக்குற கோயில் திருவிழாக்கள் அந்தக் காலத்துல சண்டை, சச்சரவுல முடிஞ்சி போயிடும். உரிமைப் பிரச்னை, பங்காளிங்க பிரச்னைன்னு திருவிழா வந்தாலே பொம்பளங்க எல்லாம் பயந்து போய் கெடப்பாங்க. அந்தமாதிரி இல்லாம, எல்லாரையும் சிரிக்க வச்சு, விழாவை சுமுகமா முடிக்கிறதுக்காகவும் இவங்கள ஆட விடுறதுண்டு. காலப்போக்குல இதுவே மரபா மாறி ஊருக்கு ஒருத்தரை கோமாளியா நியமிக்கிறது இந்தப் பகுதியில வழக்கமாயிருச்சு. இன்னைக்கு கோமாளியா இருக்க பலபேரு கூத்துக்கு சம்பந்தமே இல்லாதவங்க. இருந்தாலும் ஆதி வழக்கம்ங்கிறதால யாரையாவது ஒருத்தரை நியமிச்சாக வேண்டியிருக்கு...’’ என்று ஆதி அந்தத்தை விளக்குகிறார் நத்தம் பகுதியைச் சேர்ந்த பெரியவர்.

திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஊர்க்கோமாளிகள் உண்டு. அவரது குடும்பத்தை ஊர் மக்களே சேர்ந்து பராமரிக்கிறார்கள். அவர் இல்லாமல் நல்லது, கெட்டது எதுவுமே நடக்காது. அங்க சேஷ்டைகள் செய்து மகிழ்வூட்டும் மனிதராக மட்டுமில்லாமல், இறையருள் பொருந்தியவராகவும் அவரைக் கொண்டாடுகிறார்கள் மக்கள்.

‘‘எல்லாரும் கோமாளியா ஆயிட முடியாது. ஊர் கூடி, சாமியழைச்சு, அந்த சாமி யாரைக் கைகாட்டுதோ அவருதான் கோமாளியாக முடியும். அவருக்குப் பிறகு அவரு புள்ள கோமாளியாகலாம். கோமாளிக்கு பல வேலைகள் உண்டு. ஊரு பிரச்னை எதுவா இருந்தாலும் நாட்டாமைக்கு பக்கத்துல அவருதான் நிப்பாரு.. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாக்கூட போலீஸ்காரரு, ‘ஊரு கோமாளி எங்கேய்யா’ன்னுதான் முதல்ல கேப்பாரு. கோமாளிக்கு முதல் வேலை ஊரை சந்தோஷமா வச்சுக்கிறது... ஒரு ஊருல காளியம்மா, கருப்பண்ணன்னு பல சாமிங்க உண்டு. வருஷத்துக்கு ஏழெட்டு திருவிழாங்க நடக்கும். இந்தத் திருவிழாவுக்கு நாள் குறிக்கிறதுல இருந்து, போலீஸ்ல அனுமதி வாங்குற வரைக்கும் எல்லாத்திலயும் கோமாளி இருப்பாரு. எந்தப் பக்கம் வீதியுலா போகணும்ங்கிறதக்கூட கோமாளிதான் தீர்மானிப்பாரு. திருவிழா உறுதியான உடனே கோமாளி, கையில கங்கணம் கட்டிக்குவாரு. அதுதான் திருவிழாவுக்கு அடையாளம். கோமாளி கங்கணம் கட்டிப்புட்டா, ஊருக்குள்ள மது, மாது, சூது கூடாது. புகையைக்கூட விட்டுறணும்...’’ என்கிறார் பழநியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி கோமாளி.

எல்லா ஊர்வலங்களிலும் கோமாளி தனக்கேயுரிய உடையோடு ஊர்வலத்தின் முன் நடந்து சேஷ்டைகள் செய்கிறார். இந்த உடைகளை ஊர் நிர்வாகம் கோமாளிக்கு வாங்கித் தருகிறது. பயன்படுத்திய பிறகு, சாமிப் பொருட்களோடு சேர்த்து இந்த உடையையும் பாதுகாக்கிறார்கள். பறையிசைக்குத் தகுந்தவாறு ஆடியபடி பெண்களை கேலி செய்வது, இளைஞர்களைச் சீண்டுவது, குழந்தைகளைச் சிரிக்க வைப்பது என கோமாளி கூட்டத்தை சுவாரஸ்யமாக்குவார்.

கோமாளி காலில் விழுந்து திருநீறு வாங்கியபிறகுதான் பூசாரியே கோயிலுக்குள் செல்வாராம். கோமாளியிடம் விபூதி வாங்க கிராமமே வரிசையில நிற்குமாம். செல்வந்தர்கள் கூட அவரிடம் கைகட்டி நிற்பார்களாம்.   

‘‘கோமாளிக்குன்னு சில மந்திரங்கள் இருக்கு. இதெல்லாம் மூதாதையர்கள் உருவாக்குனது. இன்னைக்கும் வழிவழியா வந்துக்கிட்டிருக்கு... அந்த மந்திரத்துக்கு மனுஷங்க மட்டுமில்லாம மிருகம், புழு, பூச்சி, செடி, செத்தைகள் கூட கட்டுப்படும். திருவிழா ஆரம்பிச்சுட்டா, ஊருல அசம்பாவிதங்கள் நடக்காம இருக்க, மந்திரக்கட்டு செஞ்சிருவோம். விழா முடியுற வரைக்கும் யாரையும் பூச்சிங்க கடிக்காது. எல்லா பூச்சி வாய்களையும் மந்திரத்தால கட்டிருவோம். எறப்பு, பொறப்பு, விலக்குன்னு தீட்டுகளும் நடக்காது. அதுகளையும் கட்டி வச்சு எல்லையில நிறுத்திருவோம். பேய் புடிச்சு ஆடுறவங்க, பயந்து அழுகுறவங்களையும் எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வருவாங்க. அவங்களுக்கும் மந்திரம் சொல்லி திருநீறு பூசுவோம். கெட்ட ஆவிங்கல்லாம் அரண்டு ஓடிடும்...’’ என்கிறார் வெள்ளைச்சாமி கோமாளி.

சர்க்கஸ், நாடகங்களில் கோமாளியை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஆனால் ஊர்க்கோமாளிக்கு கிராமங்களில் ராஜ மரியாதை. கோமாளி வீட்டு விசேஷங்கள் பொதுக்காரியமாகவே நடந்தேறுகிறது. வருடாவருடம் ஊர் பொதுப்பணத்தில் கோமாளிக்கு ஊதியம் வழங்கப்படும். நல்லது, கெட்டதுகளில் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். கோமாளி குடும்பத்துப் பிள்ளைகளின் எதிர்காலமும் ஊர் பொறுப்பு. கோமாளிக்கு ஆண் வாரிசு இல்லாதபட்சத்தில், சாமியழைத்து புதிய கோமாளியைத் தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர், எந்த வேலை பார்த்தாலும் அதை விட்டுவிட்டு கோமாளியாகி விடுவார். பல கிராமங்களில் நமக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காதா என்று இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுவாம்.

‘‘நல்லா படிச்சு வேலையில இருந்த புள்ளைக கூட இப்போ கோமாளியா வேஷம் கட்டிக்கிட்டு ஊரைச் சிரிக்க வைக்குதுங்க. இது சாதாரண வேலையில்லை. பல கிராமங்கள்ல கோமாளிய சாமியாவே பாக்குறாங்க. ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு இதுல பல விஷயங்கள் இருக்கு. கோமாளி வேஷத்தைப் போட்டுக்கிட்டுத் தப்பு பண்ணினா அந்த சாமியே தண்டிச்சிரும்’’ என்கிறார் இதே பகுதியைச் சேர்ந்த முருகேசக் கோமாளி.
நாடகங்களில் ஊறுகாயாக உபயோகப்படுகிற கோமாளியை ஊரே முதன்மையாகக் கொண்டாடுவதைப் பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: பா.கணேசன்