காசில்லா மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் தாசில்தார்!





சரியாக மாலை 6 மணி. மதுரையில் மகாத்மா காந்தி தொடங்கிய சேவாலயம் விடுதி. பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் பிளாக்போர்டு முன்பு அமர்ந்திருக்க, கையில் சாக்பீஸ், நோட்ஸ்கள் சகிதம் உள்ளே நுழைகிறார் பாலாஜி. ‘‘இன்னைக்கு இங்கிலீஷ் கிளாஸ்’’ என்றதும் மாணவர்கள் சுறுசுறுப்பாக நோட்டுகளைப் புரட்டுகின்றனர். ஆசிரியர் என்றால் பாடம் எடுக்கத்தான் செய்வார்கள்... இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? பாலாஜி ஓர் ஆசிரியரல்ல... ஏழை மாணவர்களுக்காக ஆசிரியராகவும் இரட்டைப் பணியாற்றும் ஒரு தாசில்தார்!
கடந்த ஏழாண்டுகளாக மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் தொடர்ந்து 90 சதவீதத்திற்கும் மேல் மார்க் வாங்கியிருப்பதற்கு பாலாஜியின் உழைப்பும், அவர் கொடுக்கும் நோட்ஸும் முக்கிய காரணம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது இவரது இலவச சேவை!

‘‘இதுக்கு நான் மட்டுமே காரணம் இல்லைங்க. சென்னை மேயர், மாநகராட்சிப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும்தான்’’ எனத் தன்னடக்கம் காட்டும் பாலாஜி எம்.எஸ்சி., எம்.எட்., எம்.பில் முடித்தவர். இத்துடன் எட்டு எம்.ஏ பட்டங்களும் பெற்றுள்ளார்.

‘‘சிவகங்கை மாவட்டம் மானாமதுரைதாங்க எனக்குப் பூர்வீகம். 1989ல் பி.எஸ்சி முடிச்சேன். அதுக்குள்ளே பெரும்பாடாகிருச்சு. வீட்டில் அவ்வளவு கஷ்டம். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்துல ஒரு பள்ளியில 2 வருஷம் ஆசிரியரா வேலை பார்த்தேன். அப்போதான் படிக்கக் கஷ்டப்படுற மாணவர்களுக்காக கூடுதல் கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். என்னைப் போல யாரும் கஷ்டப்படக்கூடாது... அதனால படிப்பு சொல்லிக் கொடுக்க இதுவரைக்கும் ஃபீஸ் வாங்கினதில்லை. நமக்குன்னு ஒரு நல்ல வேலை இருந்தா, இந்தப் பசங்களுக்காக இன்னும் நிறைய செய்யலாமேன்னு நினைச்சப்பதான், டி.என்.பி.எஸ்.சி மூலம் வேலை கிடைச்சது. அதுக்கப்புறம் காலையில வேலை... மாலையில டியூஷன்னு பழக்கமாக்கிக்கிட்டேன்’’ என்கிறார் பாலாஜி. இந்த டியூஷன் ஏழை மாணவர்களை மட்டும் படிக்க வைக்கவில்லை. பாலாஜியையும் படிக்க வைத்திருக்கிறது.

‘‘ஒருநாள் அக்கவுன்டன்ஸி, காமர்ஸ் படிக்கிற மாணவர்கள் வந்து, ‘எங்களுக்கும் பாடம் சொல்லித் தாங்க’ன்னு கேட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சேன். இதனால மற்ற துறை படிப்புகளையும் படிச்சுட்டு சொல்லிக் கொடுப்போம்னு எல்லா கோர்ஸையும் படிக்க ஆரம்பிச்சேன்’’ எனும் பாலாஜி எம்.ஏயில் சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு போன்ற பிறமொழி பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

‘‘கொஞ்சம் கொஞ்சமா வேலையில பதவி உயர்வு கிடைச்சு தாசில்தார் பணிக்கு வந்தேன். எவ்வளவு பணிச்சுமை கூடினாலும் இலவச டியூஷனை நிறுத்தலை. என்னைத் தேடி வர்ற பசங்களைத் தாண்டி, நேரடியா நானும் பசங்களைத் தேடிப் போக நினைச்சேன். மதுரையிலுள்ள 24 மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் போய், ஆசிரியர்கள்கிட்ட பேசி வகுப்புகள் எடுத்தேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களே என் வீட்டுக்கு வந்து படிப்பாங்க. அப்படி மொத்தமா நிறைய மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கும்போதுதான் அவங்களுக்கு எளிமையான ஒரு நல்ல நோட்ஸ் தேவைப்படுதுன்னு தெரிஞ்சுது. உடனே பழைய கொஸ்டீன் பேப்பர்களை எல்லாம் புரட்டி பாடவாரியாக எடுத்து, கேள்வி பதில்களை தயார் செஞ்சு நோட்ஸா மாத்தினேன். இத உடனே கொடுத்தா படிக்க மறந்துருவாங்க... அல்லது தொலைச்சுருவாங்க. அதனால, தேர்வுக்கு ரெண்டு மாசம் முன்னாடிதான் கொடுப்பேன். இதைப் படிக்கிற மாணவர்கள் நிச்சயம் தொண்ணூறு சதவீதத்துக்குக் குறையாம மார்க் வாங்கலாம்!’’ எனும் பாலாஜி, ஒரு வருடம் டெபுடேஷனில் சென்னை வந்த கதை அலாதியானது.

‘‘மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் பப்ளிக் எக்ஸாம்ல காட்டின ரிசல்ட்டைப் பார்த்துட்டு சென்னை மேயர் சைதை துரைசாமிதான் என்னை டெபுடேஷனில் சென்னைக்கு வரவழைச்சார். ஒரு வருஷம்... 70 மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் போய் வகுப்புகள் எடுத்தேன். 10, 12ம் வகுப்பில் உள்ள பின்தங்கிய மாணவர்களை மட்டும் செலக்ட் பண்ணி, மேயர் உதவியோட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூணு வேளை உணவு கொடுத்து அவங்களுக்கு வகுப்புகள் எடுத்தோம். அவங்க பெற்றோரையும் அழைச்சுப் பேசினோம். இதனால இந்தாண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 90 சதவீதத்துக்கும் மேல தேர்ச்சி பெற்று நல்ல ரேங்கில் வந்திருக்கு. இதுக்கு மேயருக்குதான் நன்றி சொல்லணும்’’ - உற்சாகம் பொங்கப் பேசும் பாலாஜி, இதுவரை சுமார் பத்தாயிரம் மாணவர்களை உருவாக்கியுள்ளாராம். அவர்களில் பலர் அவருடன் இணைந்து இலவச வகுப்புகளில் பாடம் நடத்தி ஏழை மாணவர்களுக்குக் கை கொடுக்கிறார்களாம்.

‘‘எளிமையா புரியும்படி சொல்லிக் கொடுத்தா போதும்... அவங்க நல்ல ரேங்க் வாங்குறது உறுதி. நம்ம ஊர்ல நினைவாற்றலையும் அறிவாற்றலையும் குழப்பிக்கிட்டு பின்தங்கிய மாணவர்கள்னு ஒரு வர்க்கத்தையே உருவாக்கி வச்சுட்டோம்’’ என்கிற பாலாஜி, பணி வாழ்க்கையிலும் சறுக்கி விடவில்லை. தற்போது தாசில்தாருக்கு வழங்கப்படும் குற்றவியல் நடுவருக்கான பயிற்சியில் இருக்கிறார் அவர்.
இது நல்லவிதமான ஸ்பிலிட் பர்சனாலிட்டியா இருக்கே!
- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஜி.டி.மணி