உத்தரகாண்ட போல ஆகுமா தமிழகம்





பத்து நாட்கள் கடந்தும் பலியான உயிர்களின் எண்ணிக்கையைக் கணிக்க முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களை விட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் தப்பி வந்தவர்கள். ஒரு சீசனுக்கான ஒட்டுமொத்த மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்ந்துவிட்டது உத்தரகாண்டில். சுமார் 341 செ.மீ மழை. மேகவெடிப்பு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். வானிலை ஆய்வு மையங்களால் ஆபத்தைக் கணிக்க இயலவில்லை. ஆனால் உத்தரகாண்ட் பேரிழப்புக்குப் பிறகு ஒன்றை மட்டும் உறுதியாகக் கணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ''இனி பெய்யும் பெரும்பாலான மழைகள் இப்படியான பேய்மழைகளாகத்தான் இருக்கும். நாடு இந்தப் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும்’’ என்கிறார்கள்.

‘‘அண்மைக் கால வானிலையைக் கணிக்கிறபோது, எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’’ என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சித் துறை இயக்குனர் அறிவுடைநம்பி.

‘‘2005ல் மும்பை இதுபோன்ற ஒரு மழையைச் சந்தித்தது. ஒரு சீசனுக்குப் பெய்ய வேண்டிய மழை முழுதுமாக ஓரிரு நாளில் கொட்டியது. கடந்த சில வருடங்களாக பருவநிலையில் பல மாற்றங்களைக் காணமுடிகிறது. வழக்கமாக அதிக மழைப்பொழிவு இருக்கும் இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. எதிர்பாராத பகுதிகளில் மழை பொழிகிறது. இப்படி பெருமழை பெய்வதால் இருவித பிரச்னைகள் ஏற்படும். எதிர்பாராத வெள்ளம் பொங்கி இழப்பு ஏற்படும். இன்னொன்று, ஒட்டுமொத்த தண்ணீரும் வீணாகிவிடும். நிலத்தடி நீர்மட்டம் உயராமல் போய், குடிநீர்த் தட்டுப்பாடு வரலாம். சென்னை போன்ற அடர்த்தியான பகுதிகளில் இப்படியான மழைபெய்தால் இழப்புகள் கடுமையாகவே இருக்கும்’’ என்கிறார் அறிவுடைநம்பி.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகள் ஒரு பெருமழையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். ‘‘வடிகால்கள் அனைத்தும் துண்டாடப்பட்டு விட்டன. பரந்து கிடந்த ஏரிகள் தூர்க்கப்பட்டு அரசு அலுவலகங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டு விட்டன. தொடர்ந்து நான்கு நாட்கள் சாதாரணமாக மழைபெய்தால் கூட சென்னை தாங்காது’’ என்கிறார், சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காகப் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

‘‘1946ல் பருவமழைக் காலத்தில் சென்னையில் 819 மி.மீ மழை பெய்தது. பெரிதாக எந்த இழப்பும் ஏற்படவில்லை. ஆனால் 2005ல் பருவமழைக் காலத்தில் 774 மி.மீ மழை பெய்தது. இது சாதாரண மழைதான். ஆனால் பேய் மழை என்று மீடியாக்கள் வர்ணித்தன. காரணம், 3 நாட்கள் சென்னை மிதந்தது. தற்காலிக நலனைக் கருத்தில் கொண்டே நம் அரசுகள் திட்டங்களைத் தீட்டுகின்றன. அனைத்து திட்டங்களும் இயற்கைக்கு முரணாக இருக்கின்றன. பருவகாலங்களில் மழையும், புயலும் வருவது இயல்புதான். ஆனால், அதன் வீரியத்தை நாமே அதிகப்படுத்தி இழப்புகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். உத்தரகாண்டில் ஏற்பட்ட பேரிழப்புக்கு 80 சதவீதம் மனிதத்தவறுகளே காரணம் என்கிறார்கள். தமிழகத்திலும் அப்படி நிறைய தவறுகளைச் செய்து வைத்திருக்கிறோம். நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அனைத்தும் ஐ.டி காரிடார்களாகவும், கல்லூரிகளாகவும் உருமாறிவிட்டன. மழைநீர்க் கால்வாய்கள், ஓடைகள் அனைத் தையும் அழித்துவிட்டோம்’’ என்கிறார் நித்யானந்த்.

‘‘சென்னையில் முக்கிய வடிகாலான பக்கிங்காம் கால்வாய் துண்டாடப்பட்டு விட்டது. கூவம், அடையாறு ஆறுகளின் மீத வெள்ளத்தைச் சுமந்துசெல்லும் பக்கிங்காம் கால்வாயின் தலையில்தான் இன்று பறக்கும் ரயில் ஓடுகிறது. சென்னையின் மிகப்பெரும் நீர்பிடிப்புப் பகுதியான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தலையில்தான் வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. 1960களில், 5000 ஹெக்டேர் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி இப்போது 500 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. பல நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், இன்றைக்கும் சென்னை மாநகராட்சி அங்குதான் குப்பையைக் கொட்டுகிறது. கோயம்பேடு உள்பட தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஏரிகளில்தான் கட்டப்பட்டுள்ளன. முகப்பேர் ஏரி குடியிருப்புத் திட்டம் என்று பெயரே சூட்டுகிறார்கள். மாம்பலம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் எல்லாம் ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை என்று தெருக்கள் உள்ளன. ஆனால் ஏரியும் கால்வாயும் காணாமல் போய்விட்டன. ஆற்றுப்படுகைகள், நீர்பிடிப்புப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று விதியே இருக்கிறது. ஆனால் அரசுகளே அந்த விதிகளை மதிப்பதில்லை.

இருந்த வடிகால்கள் காணாமல் போனது ஒருபுறம் இருக்க, இருக்கும் வடிகால்களும் பராமரிப்பில்லாமல் கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள். சாதாரண மழைக்கே சென்னை துண்டாகிவிடுகிறது. இருக்கும் நீராதாரங்களை எல்லாம் அரசுகளே ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, கால்வாய்க்கரை குடிசைவாசிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று விரட்டுவதுதான் வேடிக்கை’’ என்கிறார் பருவநிலை மாற்றம் பற்றி ‘கொதிக்கும் பூமி’ என்ற நூலை எழுதியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதி.வள்ளியப்பன்.

‘‘பேரிடர் மேலாண்மையில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது. மாறிவரும் பருவநிலையை எதிர்கொள்ள எந்தத் திட்டமும் நம் அரசுகளிடம் இல்லை. இயற்கைக்கு எதிரான அத்துமீறல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட கேதார்நாத் பகுதியில் மட்டும் நீர்வழிப்பாதையை மறித்து 70 மின்திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நிகழ்ந்ததைப் போன்ற சம்பவம் தமிழகத்திலும் நிகழக்கூடும். குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பெரிய பாதிப்புக்கு உள்ளாகலாம். வால்பாறை, ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் பகுதிகள் பெருமழையைத் தாங்கும் தன்மையை வெகுவாக இழந்துவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 நதிகள் உற்பத்தியாகின்றன. அடர்த்தியான, உயர்ந்த மரங்களால் நிறைந்த பகுதிகள் இவை. இலைகள் உதிர்ந்து மெத்தை போல படர்ந்திருக்கும். மழைநீரை மண்ணும், இலைகளும், வேர்களும் தாங்கிப்பிடித்து மெதுவாக கீழே அனுப்பும். நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்பில்லை. இன்று மரங்களை அழித்து காபி, டீ எஸ்டேட்களாக்கி விட்டோம். அடிக்கிற மழை நதியில் இணைந்து அதிவேகத்தில் நிலத்தைத் தாக்கும். வேர்களின் பிடிப்பில்லாததால் மண் சரிந்து இழப்புகள் ஏற்படலாம். இயற்கையை மதிக்காமல் செயல்பட்ட மனிதர்கள் அதன் எதிர்வினையை அனுபவிக்கும் நேரம் இது’’ என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்
சுந்தர்ராஜன்.
- வெ.நீலகண்டன்