பவுடர் அடித்தால் புற்நோய் வரும்





டால்கம் பவுடர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக நம் உயிரோடு, உணர்வோடு கலந்து மளிகை லிஸ்ட்டில் ‘மஸ்ட்’ ஆகிவிட்ட ஒன்று. ஆனால் அந்தப் பவுடர், புற்றுநோய்க்கு ‘வெல்கம்’ சொல்லி வரவேற்கிறதென்றால் அதிர்ச்சி அலை அடிக்காதா என்ன? அப்படியொரு அதிர்ச்சியைத்தான் அமெரிக்கா மற்றும் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கொடுத்திருக்கிறார்கள். டால்கம் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தும் சுமார் 2 ஆயிரம் பெண்களிடம் இவர்கள் சோதனை நடத்தியபோது, அதில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு கருப்பை புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பொதுவாகவே உலகில் டால்கம் பவுடர்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களும் குழந்தைகளும்தான். எனவேதான் இந்த கேன்சர் ஆபத்து ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் என்றும், பெண்கள் டால்கம் பவுடரைப் பயன்படுத்தினால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து 30 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம்.
நாம் பயன்படுத்தும் முகப் பவுடர்கள் ‘டாக்’ என்ற ஒருவகை பாறைகளை வெட்டியெடுத்து தயாரிக்கப்படுபவை. இந்த டாக் தாதுவில் மக்னீசியம் மற்றும் சிலிக்கான் அடங்கியிருப்பதால், அவை கேன்சரை தரலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கமாக உள்ள புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (International Agency for Research on Cancer) ‘டாக்’ தாதுவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவே கூறுகிறது.

இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? அச்சமும் கேள்வியுமாக சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜயராகவனைச் சந்தித்தோம்...
‘‘இங்கிலாந்தில் 1970களிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டு, டால்கம் பவுடர் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் வரும் என நிரூபித்துள்ளனர். அங்கே நர்ஸாகப் பணியாற்றிய பெண்களிடம் திடீரென புற்றுநோய்த் தாக்குதல் அதிகம் ஏற்பட்டது. முக்கியமாக அவர்களைத் தாக்கியது மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்தான். நர்ஸ்களை மட்டும் இந்த நோய் ஏன் அதிகம் தாக்க வேண்டும் என்று ஆராய்ந்தபோதுதான், அவர்கள் அணியும் இறுக்கமான ஆடைகளும் பூசிக்கொள்ளும் டால்கம் பவுடர்களும் கவனிக்கப்பட்டன. டால்கம் பவுடரை பெண்கள் பயன்படுத்தும்போது அவர்களின் வியர்வையில் அந்தப் பவுடர் கலந்து உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. பெண்ணுறுப்பு அல்லது சிறுநீர்ப்பாதை வழியாக இது மேலேறி, கருப்பை அல்லது கருவாய்ப் பகுதிகளில் கட்டிகளை ஏற்படுத்தலாம். இதன் அறிகுறி உடனே தெரியாது. கட்டிகள் ஏற்பட்டு, அது புற்றுநோயை உருவாக்கி பிரச்னைகளைக் கொடுக்க குறைந்தது பத்து, பன்னிரண்டு வருடங்களாவது ஆகும். அமெரிக்காவில்தானே... லண்டனில்தானே... நம் ஊரில் இந்த ஆபத்து உண்டா? என்றால் நிச்சயம் அந்த நாடுகளை விட இங்கு அதிகமாக இருக்கும். காரணம், வியர்வையும் உஷ்ணமும் இங்கு அதிகம்’’ என்றவர், இதற்காக அதீத பயமோ, பீதியோ தேவையில்லை எனவும் ஆறுதல் தந்தார்.

‘‘டால்கம் பவுடரும் புற்றுநோயை உண்டாக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, டால்கம் பவுடர்தான் புற்றுநோயை உருவாக்கியது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. அதன் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. அதற்காக பவுடரே பயன்படுத்தக் கூடாது எனும் அளவுக்கு பயப்படத் தேவையில்லை. சொல்லப் போனால் டால்கம் பவுடரால் சில உபயோகங்களும் இருக்கின்றன. அது தோலில் எண்ணெய் வடிதலை நிறுத்தும். அடிபட்டு ரத்தம் வடியும் இடத்தில் பவுடரை இடும்போது, அது ரத்தத்தை உறையச் செய்து, கூடுதல் ரத்த இழப்பைத் தடுக்கும். பொதுவாக தோல் நோய்களைத் தடுக்கிறது. இருந்தும் அளவுக்கு மீறும்போது அமுதம் கூட நஞ்சுதான்’’ என்றார் அவர்.

‘‘டால்கம் பவுடர்கள் நேரடியாக உறவாடுவது நம் சருமத்தில்தானே. அதற்கு பாதிப்புகள் ஏதும் இல்லையா?’’ என்ற கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனையின் தோல் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் கே.மனோகரன் முன் வைத்தோம்.

‘‘சந்தனம் கலந்து தயாரிக்கப்படும் பவுடர்கள்தான் சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் நோய்களை உண்டாக்குகின்றன. இதனால் தோலில் வெள்ளைத் தேமல் ஏற்படும். அடுத்து வியர்க்குரு பவுடர்களை குளிர்ச்சியாக இருப்பதாக நினைத்து நிறைய பேர் பயன்படுத்துவார்கள். ஆனால் அவை தோலில் உள்ள வியர்வைத் துவாரங்களை அடைத்து, கட்டிகளை உண்டாக்கிவிடும். டால்கம் பவுடர்களின் உறிஞ்சுதிறன் குறைவுதான். அவை வியர்வைத் துவாரங்களை அடைக்காது. எனவே, கேன்சர் வரும் என பயப்பட வேண்டியதில்லை’’ என்றார் அவர் உறுதியாக.
- பேராச்சி கண்ணன்
படங்கள்:ஆர்.சந்திரசேகர்