
வெள்ளத்தில் உருக்குலைந்திருக்கிறது உத்தரகாண்ட். ஆண்டவனை தரிசிக்கச் சென்றவர்கள், அங்கே பூமிக்குள் புதைந்து ஆண்டவனைச் சேர்ந்த சோகம்... நமக்கெல்லாம் ஆறாத காயம். ‘‘ஐயோ... எத்தனை பேர் ஆபத்தில் இருக்காங்க! என் மகன் பிரவீன் இப்ப அங்கேதான் ஹெலிகாப்டர் மூலமா அவங்களைக் காப்பாத்தறான்’’ எனக் கடந்த வாரம் வரை பேப்பர் படித்துப் பெருமையாய்ச் சொல்லிக் கொண்டிருந்த அந்த வீரத்தாய், இப்போது கண்ணீர்க் கடலில்.
பிரவீன்... மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியினரின் ஒரே மகன். இந்திய விமானப்படையில் ‘ஃபிளைட் லெப்டினன்ட்’ ஆகி பணிக்குச் சென்றவர், தினமும் இரவில் அம்மாவுடன் போனில் பேசுவது வழக்கம். விபத்து நடந்த ஜூன் 25 அன்று மட்டும் காலை 9.45 மணிக்கே வந்திருக்கிறது போன்.
‘‘ ‘இன்னிக்கு ‘எம்ஐ 17’ ஹெலிகாப்டர்ல நான் பறக்கப் போறேன். நல்லா போயிக்கிட்டிருக்கும்மா... நிறையப் பேரைக் காப்பாத்தியிருக்கோம். பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு’ன்னு சொன்னான் என் புள்ள. ‘இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்புடா. நிறைய பேரைக் காப்பாத்து... உன் உடம்பையும் கவனமா பார்த்துக்கோ’ன்னு சொன்னேன். ஆனா, இப்ப...’’ - அதற்கு மேல் பேச முடியாமல் சாய்கிறார் மஞ்சுளா. உறவுகள் அவரைச் சுற்றி அமர்ந்திருக்கின்றன.
‘‘சின்ன வயசுல இருந்தே பிரவீனுக்கு பைலட் ஆகறதுதான் லட்சியம். நிறைய புத்தகங்கள் படிப்பான். படிப்பு, விளையாட்டு, டான்ஸ்னு எல்லாத்திலும் கெட்டி. இரக்க குணம் ஜாஸ்தி. இன்சூரன்ஸ் ஏஜென்ட்டைப் பார்க்கும்போதெல்லாம், ‘என்னால ஒரு சின்ன லாபம் உங்களுக்குக் கிடைக்கட்டும்’னு ஒரு பாலிசி போட்டுக்கச் சொல்வான்...’’ என்கிறார் பிரவீனின் சித்தப்பா கிருஷ்ணன்.
‘‘டிவிஎஸ் ஸ்கூல்லதான் படிச்சான். எலக்ட்ரானிக்ஸும், மெக்கானிக்கலும் சேர்ந்திருக்கிற ‘மெக்கட்ரானிக்ஸ்’தான் படிப்பேன்னு மதுரை தியாகராஜர் எஞ்சினியரிங் கல்லூரியில சேர்ந்து, முதல் ரேங்க் எடுத்து பாஸானான். பொண்ணு பார்த்து தை மாசம் கல்யாணம் பண்ண இருந்தோம்’’ - சொல்லும்போதே வார்த்தைகள் தடுமாறுகிறது பிரவீனின் தாத்தா சின்னசாமிக்கு.

பிரவீன், 2009ல் விமானப்படையில் சேர்ந்திருக்கிறார். ஹைதராபாத் ஏர்போர்ட் அகாடமியில் பைலட் பயிற்சி முடித்து, பேரக்பூரில் இருந்தபோதுதான் உத்தரகாண்ட் மீட்புப் பணிக்குச் சென்று விபத்தில் பலியாகி இருக்கிறார்.
‘‘எனக்கு உடம்பு சரியில்லைன்னு லீவ் எடுத்து வந்தவன் போன மாசம் 26லதான் திரும்ப வேலைக்குப் போனான். இந்த மாசம் 26ம் தேதி செத்துட்டான்னு சேதி வருது. எம் பேரன் உடம்பையாவது கொண்டு வந்து காட்டுங்கய்யா... அவன் முகத்தைப் பார்த்து நான் அழணும்’’ என்று தாத்தா கதறும்போது, ஆறுதல் சொல்ல எவரிடமும் வார்த்தைகள் இல்லை.
வரப் போகும் தன் மனைவிக்காக, வீட்டின் பின் பகுதியை ஒட்டி, கூடுதல் வசதிகளுடன் புதிய அறைகளைக் கட்டி வைத்திருக்கிறார் பிரவீன். அந்த அறைகள் இன்று ஊமையாய் கதவடைத்துக் கிடக்கின்றன.
- செ.அபுதாகிர்
படங்கள்: ஜி.டி.மணி