கடைசி பக்கம்





ஞாயிற்றுக்கிழமைகளில்கூட நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கும் பிஸியான மனிதர் அவர். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு, சமீபத்தில்தான் தனியாக நிறுவனம் தொடங்கியிருந்தார். ஆரம்ப காலத்தில் இருக்கும் ஒரு தொழில் நிறுவனம் கேட்கும் உழைப்பை அவர் கொட்ட வேண்டியிருந்தது. வீட்டு நிர்வாகத்தை மனைவி திறம்பட கவனித்து, எதிலும் குறை இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், குழந்தைகள் தந்தையின் நெருக்கத்தை ரொம்பவே மிஸ் செய்தன.

பள்ளியில் கோடை விடுமுறை விட்டபோதுகூட அவர்களை எங்கும் கூட்டிச் செல்ல முடியவில்லை. கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு! ‘‘குழந்தைகளுக்கு வெளியுலகைக் காட்டு’’ என்று உளவியல் நிபுணரான நண்பர் எச்சரித்தார். அந்த வார இறுதியை விடுமுறை ஆக்கிக் கொண்டு சுற்றுலா போனார்கள். ‘எந்த ஊர் போகலாம்’ என்பதையும் குழந்தைகளே முடிவு செய்துகொண்டு, உற்சாகமாகக் கிளம்பின. அது, கடலை ஒட்டிய ஒரு மலைப் பிரதேசம். கடல் காற்று ஆக்ரோஷமாக வீச, அதனிடையே மலைச்சாலையில் காரை ஓட்டுவது சவாலான விஷயமாக இருந்தது. குழந்தைகள் இந்த சாகசத்தை ரசித்தன.

‘‘கொஞ்ச தூரத்தில் ஒரு சுரங்கம் வரும்’’ என்று மூத்தவன் சொன் னான். அதேபோலவே வந்தது. அடுத்ததாக, ‘‘இன்னும் ஒரு திருப்பம்தான். அப்புறம் நாம ஒரு பாலத்து மேல போகணும்’’ என்றான் சின்னவன். அதேபோல  பாலம் வந்தது. அவருக்கு ஆச்சரியம். ‘‘நாம இதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்லையே. எப்படித் தெரியும்?’’ என குழந்தைகளைக் கேட்டார். ‘‘கம்ப்யூட்டர் கேம்ல இந்த ஏரியா இருக்குப்பா. அந்த சுரங்கத்துலதான் அண்ணனோட மாடு எப்பவும் சாகும். என் கழுதை இந்தப் பாலத்துல போக முடியாம, ஆத்துல விழுந்துடும்’’ என்றான் சின்னவன்.
நிழல்களில் நிஜத்தைத் தொலைக்காதீர்கள்!