
என் பக்தர்கள் தவறி விழும் நிலை ஏற்படும்போது, எனது கரங்களை நீட்டுகிறேன். அவர்கள் ஒருபோதும் விழுந்துவிட நான் அனுமதிக்க மாட்டேன்.
- பாபா மொழிசாயி அன்போடு நிமிர்ந்து பார்த்தார்.
‘‘மகல்சாபதி... நான் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். இனி இந்த பயில்வான் உடைகளை அணியப் போவதில்லை. சரீரத்துடன் குஸ்தி போடுவது எனக்குத் தேவையில்லை. வேறு குஸ்தி என் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நான் தயாராக வேண்டும்.’’
‘‘பின் என்ன உடைகளை அணிவீர்கள்?’’
‘‘தாத்யா...’’
‘‘சொல்லுங்கள் சாயி...’’
‘‘எனக்காக ஒரு சுத்தமான வெள்ளை கஃபனியும், தலையைச் சுற்ற ஒரு துணியும் தேவை. நாளை முதல் நான் அந்த வேஷத்தில் இருப்பேன்!’’
சில நாட்கள் கழித்து சாயியை தரிசிக்க ஷீரடிக்கு வந்த கங்காகீர் ஆச்சரியமடைந்தார்.
‘‘சாயி... உங்களுடைய தோற்றம் முழுவதும் மாறிவிட்டது. முதலில் பார்ப்பதற்கு பயில்வான் போல இருந்தீர்கள். இப்பொழுது என்ன இப்படி? தலையில் துணி சுற்றியிருக்கிறீர்கள்... கஃபனி வேறு..?’’
‘‘கங்காகீர், நீ இதற்கு முன் பயில்வானாகத்தானே இருந்தாய். எல்லாம் எனக்குத் தெரியும். இப்பொழுது இவர்கள் எதிரில் சொல். உன்னுடைய பயில்வான் தோற்றம் எப்படி மாறியது? நீ அறிவார்ந்த விஷயங்களைக் கற்றறிய எப்பொழுது திசை மாறினாய்?’’
‘‘சொல்கிறேன் சாயி... எனக்கு பயில்வான் ஆவதில் ரொம்ப ஆசை. அதற்காக இரவும் பகலும் தேகப்பயிற்சி செய்தேன். பிறகு குஸ்தி விளையாட்டில் இறங்கினேன். ஊரெல்லாம் சுற்றினேன். நிறைய போட்டிகளில் பல பேரை வென்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இதனால் எனக்கு ஸ்வாமியின் நாமத்தை உச்சரிக்க வேளை கிடைக்கவில்லை. ஏதோ ஒரு வேதனை மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. இவ்வளவு ஆரோக்கியமான, வலிமை மிக்க தேகத்தைக் கொடுத்த கடவுளை ஆராதிக்க முடியவில்லையே, இது பாவமல்லவா? வெற்றிக்களிப்புக்கும் ஆதங்கத்துக்கும் நடுவில் நான் மாட்டிக் கொண்டிருந்தேன்...’’
எல்லோரும் கங்காகீரின் கதையை சுவாரசியமாகக் கேட்டனர்.

‘‘சாயி! என் மனக்கொந்தளிப்பு தொடர்ந்தது. ஒரு நாள் ஒரு பெரிய போட்டி நடந்தது. என்னுடன் மோதியவனும் பிரபலமானவன். போட்டிக்காக நிறைய விளம்பரமும் பிரமாண்டமான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். நிறைய மக்கள் கூடி, கைதட்டி எங்களை வரவேற்றார்கள். சிறிது நேரம் சிங்கம் - புலி போல ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டோம். வியர்வையில் நனைந்தோம். இருந்தாலும், விடாமல் குஸ்தி போட்டோம். ஜனங்களின் உற்சாகம், கைதட்டல், விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. போட்டி நடுவே, என் மனக் கலக்கம் தலை தூக்கியது.
சும்மா அடித்து நொறுக்குவதில் என்ன லாபம்? எதற்காக இந்த உடலை வீணே சிரமப்படுத்த வேண்டும் என்கிற நினைப்பு எழுந்தது. இதில் என் மனம் கலங்கியது. அதனால் தேகமும் சண்டைப் பிடியிலிருந்து தளர்ந்துகொண்டே வந்தது. நான் களைத்துவிட்டேன் என்று நினைத்து, எதிராளி என்னை சரமாரியாகக் குத்தினான். என்னால் தடுக்கத்தான் முடிந்தது. இதைப் பார்த்து என் ரசிகர்கள் சத்தம் போட்டு, என்னை உற்சாகப்படுத்த முயன்றார்கள்.
அந்த நேரத்தில் ஒரு வெள்ளையான உருவம் என் கண்ணில் பட்டது. கிட்டே வந்து சொல்லிற்று... ‘கங்காகீர், ஏன் இப்படி தேகத்தை வருத்துகிறாய்? எப்பொழுது நீ உன்னை அறிந்துகொள்ளப் போகிறாய்? குஸ்தி போட்டு தேகத்தை வருத்துவதாக இருந்தால், கடவுளுடன் விளையாடு. தோற்கடிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால் அதர்மம், அநீதி, அக்கிரமம் இவற்றுடன் சண்டை போடு. வெற்றியடைய வேண்டும் என்றால், முதலில் உன்னுடன் போராடி வெல். ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்றால், ஒரு நிலையில் நிற்காமல் அலைபாயும் மனதை இறுக்கிப் பிடி. உன்னுடைய குஸ்தியே வேறு... உன்னுடைய மைதானமே வேறு... உன்னுடன் சண்டை போடுபவன் வேறு... இந்தக் கணத்தில் விழித்துக்கொள். அப்புறம் பார், உன் வாழ்க்கை உன்னுடையதாகும்!’
அக்கணமே நான் வைராக்கியம் மேற்கொண்டேன். குஸ்திப் போட்டி என்னவாயிற்று என்று இன்று ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று, எதற்காக வாழ வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன். மனதிலிருந்த கலக்கம் அகன்றது. எப்பொழுது சாயியைப் பார்த்தேனோ, அப்பொழுது முதல் என் தேகமும் ஆத்மாவும் பரிபூர்ணமாக சுத்தமடைந்தது. நான் இப்பொழுது பரமானந்தத்தை அனுபவிக்கிறேன்’’ என்று சொல்லி முடித்தார் கங்காகீர். அவருடைய முகம் முழுநிலவு போல பிரகாசமாக இருந்தது.
‘‘மகல்சாபதி, நான் ஏன் குஸ்தியை விட்டேன் என்று இப்பொழுது புரிந்துகொண்டாயா?’’ - சாயி கேட்டதும், எல்லோரும் சிரித்தார்கள்.
சாயியின் புகழ் நாளுக்கு நாள் பரவிக்கொண்டிருந்தது. ‘பைத்தியக்கார பக்கீர்’ என்று ஜனங்கள் அவரை கேலி செய்தார்கள். காரணம், அவருடைய நடவடிக்கைதான். நேர்பாதையில் செல்லமாட்டார். தன் இஷ்டப்பட்ட வழியில்தான் நடப்பார். பிறகு அதுவே சரியான வழியாகிவிடும். கிழிசல் துணிகளைத்தான் அணிவார். தரையில் துவளும்படி கஃபனி, தலையில் வெள்ளைத்துண்டு இதுதான் அவருடைய வேஷம். அவரிடம் கூடவே இருக்கும் பொருட்கள் ஜிலிம், டமரேல், சட்கா மற்றும் புகையிலை. தன் துணிகளை அவரே துவைத்துக்கொள்வார். பல பெண்கள் துவைத்துக்கொடுக்க முன்வந்தாலும், அவர்களை விரட்டிவிடுவார். நன்றாகத் துவைத்த வெள்ளைத் துண்டை தலை முழுவதும் மறைத்துக் கட்டி, இடது காதின் பின்பக்கமாகத் தொங்கவிடுவார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சரீரத்தைப் பற்றி அவர் என்றும் கவலைப்பட்டதில்லை. காலில் செருப்பு இல்லாமலே எல்லா இடங்களிலும் சுற்றுவார். ஆனால் ஒரு முள்கூட அவருடைய காலில் குத்தியதில்லை, அடியும் பட்டதில்லை! நாளெல்லாம் மனம் போனபடி அலைவார். சில நாள் மரத்தின் நிழலில் உட்கார்ந்து அறிவுரைகள் கூறுவார். சில நாள் வெயில், மழை பார்க்காமல் நடந்து போவார். பழைய கோணி விரிப்பிலேயே உட்காருவார். சில சமயம், நாளெல்லாம் ஒரே இடத்தில் உட்காருவார். ஒரே கோணியை விரித்து உட்காரவும், படுக்கவும், போர்த்திக்கொள்ளவும் பயன்படுத்துவார். பனிவிழும் நாட்களில், கட்டைகளைச் சேர்த்துக் கொளுத்தி ‘துனி’ உண்டாக்கி, அதனால் உடலை சூடாக்கிக் கொண்டார்.
கோணி ஆசனத்தில் தெற்குப் பக்கம் நோக்கி உட்கார்ந்து, இடது கையைச் சுவர்ப்பிடியின் மேல் வைத்து, எதிரில் பெரிதாக எரியும் ‘துனி’யைப் பார்த்துக் கொண்டிருப்பார். சிறிதளவே இடமிருந்த அந்த மசூதியில் முதன்முதலாக சாயி அக்னியை வளர்த்து ‘துனி’ உண்டாக்கியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில், முஸ்லிம்கள் அக்னி பூஜை செய்வதில்லை. சர்ச்சைக்குத் தீர்வு ஏற்படாததால், முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பைச் சொன்னார்கள்.
‘‘நீங்கள் வருவீர்கள் என்று நினைத்தேன்... பெரியவரே! எதற்காக முகத்தை கோபத்துடன் வைத்திருக்கிறீர்கள்? தாங்கள் நமாஜி. ஐந்து வேளை தொழுகை செய்பவர். அல்லாவுக்கு பிரியமானவர் நீங்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அல்லா ஒருபொழுதும் கஷ்டங்களைக் கொடுக்கமாட்டார். பின் எதற்கு இவ்வளவு வருத்தத்துடன் வந்திருக்கிறீர்கள்?’’ என்றார் சாயி சிரித்துக்கொண்டே.
‘‘மகனே! எங்கள் மதத்தவர்கள் எல்லோரும் சவாலை எதிர்கொள்ள இருக்கிறோம்.’’
‘‘என்ன சவால்?’’
‘‘நீ எங்கிருக்கிறாயோ, அதுதான் எங்களுடைய மசூதி’’ என்றார் சாச்சா.
‘‘சரி... நான் இங்குதானே இருக்கிறேன்! ஏனெனில் பள்ளிவாசல் அல்லாவின் உறைவிடம்!’’
‘‘ஆமாம்! ஆனால் எதற்காக மசூதியில் நெருப்பை வளர்த்திருக்கிறாய் மகனே?’’
‘‘ஏன்? அதில் என்ன தவறு?’’
‘‘மசூதியில் அக்னி இருக்கக் கூடாது.’’
‘‘அப்படியா?’’ - பெரிதாகச் சிரித்துக்கொண்டே சாயி சொன்னார்... ‘‘என்னுடைய அன்புச் சகோதரர்களே! இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் மனிதர்களுக்காக உண்டாயின. கடவுளுக்காக அல்ல. மனிதன் பழக்கவழக்கங்களுக்காகப் பிறந்தவன் அல்ல. சரி, எனக்குச் சொல்... நெருப்பு நல்லதா, கெட்டதா?’’
‘‘நல்லதுதான்!’’
‘‘நீ சாப்பாட்டைச் சமைப்பது நெருப்பினால். நம் உடலில் நீர் இருக்கிறது. அப்படியே உஷ்ணம் இருக்கிறது. நம் சரீரத்திலிருந்து உஷ்ணம் வெளியேறிவிட்டால், உடலில் உயிர் இருக்காது. கண்ணிலிருந்து வெப்ப ஒளி போய்விட்டால், அவன் குருடனாகிவிடுவான். ஒரு நாள் சூரியன் உதிக்காமலேயே இருந்துவிட்டால், எல்லோருடைய கதியும் என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்!’’
‘‘மகனே சாயி! நெருப்பு கெட்டது அல்ல. ஆனால், நாம் சந்திரனை அனுசரித்து வாழுகிறோம்... சூரியனைப் பார்த்து அல்ல.’’
இதைக் கேட்டு, சாயி பெரிதாகச் சிரித்தார்.
‘‘என்னப்பா ஆயிற்று, இவ்வளவு பெரிதாக சிரிப்பதற்கு?’’
‘‘சாச்சா, நீங்கள் சூரியனை அனுசரிப்பதில்லை, சந்திரனைப் பார்த்துதான் வாழ்கிறீர்கள். சரி, சந்திரன் எதனால் வாழ்கிறான்? சந்திரனே சூரியனை அனுசரித்துத்தான் வாழ்கிறான். சூரியன் கொடுக்கும் ஒளியில்தான் சந்திரன் பிரகாசிக்கிறான். பின்..?’’
‘‘ஆனாலும் மசூதியில் நெருப்பு வளர்ப்பது தவறு. இது இந்துக்களின் வழக்கம். அவர்களுடைய பரம்பரைப் பழக்கம். இதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’
சாயி நிமிர்ந்து உட்கார்ந்தார். சுற்றியிருந்தவர்களைப் பார்த்து கம்பீரமான குரலில் பேசலானார்...
‘‘பழக்கவழக்கங்கள், நியமம், நிஷ்டை இவற்றை நிர்மாணித்தது யார்? மனிதர்கள்தான். யார் யாருக்கு என்ன தோன்றியதோ, அதைச் செய்தார்கள். இஸ்லாம் பிறந்தது உஷ்ணப் பிரதேசத்தில். அங்கு முதலிலேயே உஷ்ணம் அதிகமாக இருந்தது. அதனால், அங்கு அக்னி தேவைப்படவில்லை. இந்த இஸ்லாம் இமாலயப்பிரதேசத்தில் பிறந்திருந்தால், அக்னி தேவைப்பட்டிருக்கும். இதே மாதிரி, இந்துக்களும் உஷ்ணமான பிரதேசத்தில் பிறந்திருந்தால், அவர்களும் குளுமையான, அமைதியான சந்திரனையே பூஜித்திருப்பார்கள். இந்துக்களின் கடவுளான சிவன், விஷத்தை உண்டபோது அவருடைய உடல் எங்கும் உஷ்ணமான எரிச்சல் பரவியது. அப்பொழுது அவர் தனக்குக் குளுமையும் அமைதியும் கிடைப்பதற்காகத் தன்னுடைய ஜடையில் சந்திரனைத் தரித்துக் கொண்டார். சந்திரன், சூரியன் எல்லோருக்கும் பொதுவானவர்கள்.
இயற்கையான மரம், செடிகளின் இலைகள் பச்சை நிறத்தில்தான் இருக்கின்றன. ஆனால், பூக்களோ மஞ்சள், சிவப்பு, நீலம் போன்ற பல நிறங்களில் இருக்கின்றன. கடவுள் ஒருவரே. ஆனால், பல மதங்கள் இருக்கலாம். அவை எல்லாம் சமயங்கள் ஆகிவிடாது. மதம் என்றால் அது கடவுளிடம் அழைத்துச்செல்லும் வழி. இதை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டால் அதற்குச் சிறப்பு உள்ளது. இல்லை என்றால் இல்லை.’’
எரிந்துகொண்டிருக்கும் துனியைப் பார்த்துக்கொண்டே சாயி தொடர்ந்தார்...
‘‘சகோதரர்களே! இந்த அக்னியானது என்னை ஊக்குவிக்கிறது. எப்படியென்றால், நாம் வாழ்வது நமக்கு மட்டும் அல்ல. பிறர் வாழ்க்கையிலும் ஒளி காட்டுவதற்காகவும் கெட்ட செயல்கள், எண்ணங்கள் முதலியவற்றை பஸ்பம் செய்வதற்காகவும். தவிர, சரீரத்தின் கடைசி ரூபம் ‘சாம்பல்’ என்பதை, இந்த அக்னியானது எனக்கு போதிக்கிறது. இந்த ‘துனி’ எனக்கு குருவாகவும் ஆசிரியராகவும் இருந்து எரிந்துகொண்டே, இந்தத் தத்துவங்களைக் கற்றுக் கொடுக்கிறது...’’
சாயியின் இந்த இனிமையான பேச்சு எல்லோருக்கும் பிடித்திருந்தது.
(தொடரும்)
படங்கள்:
சி.எஸ்.ஆறுமுகம்
தமிழகத்தில் சாயி தானாக வந்த சிலை!தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேலவெளி கிராமத்தில் குடிகொண்டிருக்கும் சாயி கோயிலின் தோற்றம் வித்தியாசமானது. 1949ல் முகவரிகள் ஏதும் இல்லாது பெரிய பார்சல் ஒன்று தஞ்சைக்கு வந்த ரயிலில் வந்திறங்கியது. அதற்குள் நாலரை அடி உயர மார்பிள் கல்லினாலான சாயி சிலை தரிசனம் தந்திருக்கிறது. ஷீரடியிலேயே 1952ம் ஆண்டில்தான் பாபா சிலை நிறுவப்பட்டிருக்க, அதற்கும் முன்பு இங்கு வந்த இந்தச் சிலையை ஒரு அதிர்ஷ்ட தேவதையாகத்தான் பொதுமக்கள் பார்க்கிறார்கள்.
இந்தச் சிலையை வைத்து 1950களில் பாலசுப்ரமணியம் என்பவரின் தலைமையில் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 2002ல் கே.பி.சுவாமிநாதன், குருகோவிந்தன் என்பவர்களால் அறக்கட்டளை நிறுவப்பட்டு, இன்றிருக்கும் பெரிய கோயில் கட்டப்பட்டது.
‘‘இந்தக் கோயிலின் முன் மண்டபத் தூண்கள் கிறிஸ்துவ ஆலய வடிவிலும், கோபுரங்களும் மேல் பகுதிகளும் இஸ்லாமியக் கட்டிட முறையிலும், உள் பகுதி இந்து மத அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு’’ என்கிறார்கள் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் பாலசுந்தரமும் பொருளாளர் சிவசங்கரனும். பக்தர்களுக்காக தினமும் காலை 6 முதல் 1 மணி வரையும் பிற்பகல் 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேஷ நாளான வியாழன் அன்று அன்னதானமும் உண்டு.
ஆலயத் தொடர்புக்கு:
99944 56030, 94437 22102