கர்ணனின் கவசம் : 17 கே.என்.சிவராமன்





‘‘ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைத் தொகுத்த வேத மகரிஷிய இங்க சந்திக்க முடியுமான்னு தயக்கத்தோடயே வந்தேன். என்னோட பிரார்த்தனை வீண் போகலை. பூர்வ ஜன்மத்துல கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கேன் போல... அதனாலதான் மகாபாரத இதிகாசத்தை விநாயகரை வைச்சு எழுத வச்ச ராஜரிஷியை சிரமமில்லாம தரிசிக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு...’’ என்றபடி தரையில் விழுந்து வியாச பகவானை நமஸ்கரித்தார் பரமேஸ்வர பெருந்தச்சன்.
வெண்மை நிற தாடிக்குள் புன்னகை தவழ, தன் முன்னால் தரையில் விழுந்து கிடந்த பரமேஸ்வர பெருந்தச்சனை ஏறிட்டார் வியாசர். அவரையும் அறியாமல் அவரது வலக்கை உயர்ந்து ஆசீர்வதித்தது.

‘‘மங்களம் உண்டாகட்டும்... எழுந்திரு பரமேஸ்வரா... எப்படி இருக்க?’’
‘‘உங்களோட ஆசீர்வாதம் இருக்கிறப்ப எனக்கென்ன கவலை..? சந்தோஷமா இருக்கேன்’’ கை கட்டியபடி பவ்யமாக நின்றார் பரமேஸ்வர பெருந்தச்சன்.
‘‘மகிழ்ச்சியா இருக்கிறவன் எதுக்காக சிரமப்பட்டு அருவியை கயிறா மாத்தி என்னை சந்திக்க ஏறி வரணும்..?’’
‘‘உங்களை வணங்கிட்டு போகலாம்னுதான்...’’ இழுத்தார் பரமேஸ்வரன். அதைக் கேட்டு சட்டென்று சிரித்துவிட்டார் வியாசர்.
‘‘இதுக்கு முன்னாடி பலமுறை டுடுமா அருவில குளிக்க வந்திருக்க. அப்ப எல்லாம் என்னை பார்க்கவும், வணங்கவும் நீ வரலையே..?’’
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பரமேஸ்வர பெருந்தச்சன் தலை
குனிந்தார். மாறாத புன்னகையுடன் தொடர்ந்தார் வியாசர். ‘‘என்ன காரியமா என்னைப் பார்க்க வந்திருக்க..?’’
மௌனமாக நின்றார் பரமேஸ்வர பெருந்தச்சன்.
‘‘பலமுறை சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். பொக்கிஷம் இருக்கிற இடத்தை என்னால சொல்ல முடியாது...’’ என்றார் வியாசர்.
‘‘தெரியும் குருவே... நானும் அதைக் கேட்க இங்க வரலை...’’
‘‘பின்ன?’’
‘‘எந்தப் பாதை வழியா போனா புதையலை அடையலாம்... இதை மட்டும் இந்த எளியவனுக்கு சொன்னா போதும்...’’
‘‘அது ஆபத்தான வழி...’’
‘‘துணைக்குத்தான் நீங்க இருக்கீங்களே...’’
‘‘இந்த விஷயத்துல என்னோட உதவி மட்டுமில்ல... யாரோட துணையும் உனக்குக் கிடைக்காது...’’

‘‘பரவாயில்ல குருதேவா... தனியாவே இதை நான் சந்திக்கறேன். எனக்கு கல்வியையும், வித்தையையும் சொல்லிக் கொடுத்தது நீங்கதான். உங்களாலதான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கேன். அப்படிப்பட்ட உங்க மாணவனால எந்த ஆபத்தையும் சமாளிக்க முடியும். அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லைன்னாலும் எனக்கு இருக்கு...’’
பரமேஸ்வர பெருந்தச்சனையே உற்றுப் பார்த்த வியாசர், சில நொடிகள் கண் மூடி தியானித்தார். பகவான் கிருஷ்ணரின் உருவம் அவர் மனதில் எழுந்தது. எல்லாம் அவரது விளையாட்டு என்பதை உணர அதிக நேரம் பிடிக்கவில்லை. கண்களைத் திறந்தார்.

‘‘பரமேஸ்வரா... இதுதான் உன் விதின்னா யாராலயும் அதை மாத்த முடியாது...’’ என்றபடி எழுந்த வியாசர், தன் முன்னால் அடக்கத்துடன் நின்றிருந்த சீடனின் அருகில் வந்தார். ‘‘மணல் மனிதனே 58 ரிஷிகள் தவம் செய்யும் மணல் குகைகளாக சிதறியிருக்கிறான். ஜடாயுவின் சிறகில் மறைந்திருக்கிறாள் தாரா. அவளது சிரசில் வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. சரஸ்வதியின் மறைவே, காளிங்கனின் நர்த்தனம். நர்த்தனத்தின் முடிவே மதுரை வெள்ளியம்பல நடராஜர். நடராஜரின் சொரூபமே கபாடபுரத்தின் இருப்பு. அந்த இருப்பின் சுவாசத்தில் துடிக்கிறது பொக்கிஷத்தின் வரைபடம். அந்த வரைபடத்தின் புள்ளிகளே இன்றைய கோயில்கள். கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின் மொழியே புதையலின் திசைகளைக் காட்டும் கருவிகள்...’’
நிறுத்திய வியாசர், ‘‘போய் வா பரமேஸ்வரா... இதுக்கு மேல பாதையை சொல்ல எனக்கு உத்தரவில்ல...’’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் குகையின் இருண்ட பகுதிக்குள் விடுவிடுவென சென்றார்.

அங்கு -
வியாசரின் வருகைக்காகவே காத்திருந்தாள் ராஜராஜ சோழனின் தமக்கையும், வந்தியத் தேவனின் மனைவியுமான குந்தவை. அவள் மடியில் சுயநினைவற்று படுத்திருந்தான் ரவிதாசனின் மகனான சங்கர்.
‘‘என்ன ராஜி... திரும்பவும் சங்கரை காணுமா?’’ செல்போனை எடுத்ததுமே சலனமில்லாமல் கேட்டான் ரவிதாசன்.
‘‘ஆமாங்க...’’
‘‘பாதாள அறைலதான அவனை படுக்க வைச்ச?’’
‘‘ம்...’’
‘‘தைரியமா இரு... போக வேண்டிய இடத்துக்குத்தான் போயிருக்கான்...’’
‘‘அது எனக்கும் தெரியுங்க... ஓரளவு நாம எதிர்பார்த்ததுதான். ஆனா, நான் கூப்பிட்டது அதுக்காக இல்ல...’’
‘‘பின்ன?’’
‘‘பாதாள அறை சுவருல பழைய நாகரிகங்களோட ‘மேப்’பை வரைஞ்சிருந்தோம் இல்லையா?’’
‘‘ஆமா...’’
‘‘அதுல இப்ப புதுசா இன்னொரு கோடு உருவாகியிருக்கு...’’
‘‘என்னது?’’
‘‘அந்தக் கோடும் வளைஞ்சு வளைஞ்சு போய் கடல்ல கலக்குது... அதுவும் எந்த இடத்துல தெரியுமா?’’
‘‘சொல்லு...’’
‘‘துவாரகா...’’
அதிர்ந்தான் ரவிதாசன். மறுமுனையில் பதற்றத்துடன் தொடர்ந்தாள் ராஜி. ‘‘எனக்கென்னவோ அந்தக் கோடு சரஸ்வதி நதியா இருக்கும்னு தோணுதுங்க...’’
‘‘அப்படீன்னா எல்லாம் ஒரு முனைல சேர ஆரம்பிச்சிருக்குனு அர்த்தம். இதனாலதான் ஆயி தஞ்சைக்கு வந்திருக்கா போலிருக்கு...’’
‘‘என்ன... ஆயி இப்ப இங்கதான் இருக்காளா?’’
‘‘ஆமா... ருத்ரன் வீட்ல இருக்கா...’’
‘‘அப்படீன்னா அந்தக் கிழவி பெட்டியை எடுக்கறதுக்குள்ள அதை நான் கைப்பற்றிடறேன்...’’
‘‘அதுக்குள்ள நானும் இங்க வந்த வேலையை முடிச்சிடறேன்...’’
‘‘ஜாக்கிரதைங்க. குந்தி தேசத்து இளவரசியை பத்திரமா பார்த்துக்குங்க...’’

‘‘கவலைப்படாத. பாலா இப்ப எங்கூடத்தான் இருக்கா...’’ என்று செல்போனை அணைத்த ரவிதாசன், உற்சாகத்துடன் புல் தரையில் ஓடிக் கொண்டிருந்த பாலாவை பார்த்தான். அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடந்தவன், அவளை எட்டிப் பிடித்தான். ‘‘ஓடக் கூடாது. மாமா கையையே பிடிச்சுக்கணும்... என்ன?’’
‘‘சரி அங்கிள். இது என்ன இடம்?’’
‘‘இதுவா?’’ என்றபடி அண்ணாந்து பார்த்த ரவிதாசன், உணர்ச்சிப் பொங்க சொன்னான். ‘‘காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்...’’
‘‘ஓ... அப்பா அடிக்கடி சொல்ற கோயில் இதுதானா..?’’
இருவரும் மெல்ல கோயிலுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் கைடு சொல்லிக் கொண்டிருந்தான்...
‘‘சொன்னா ஆச்சர்யமா இருக்கும். ஆனா, அதுதான் உண்மை. ராஜசிம்ம பல்லவன் காலத்துல இந்தக் கோயிலை கட்ட ஆரம்பிச்சு, அவனோட பேரன் காலத்துல முடிச்சிருக்காங்க. அதாவது மூணு தலைமுறை சேர்ந்து கட்டிய கோயில் இது. ஒருவகைல ராஜராஜ சோழன் தஞ்சைல பெரிய கோயிலை கட்ட இந்த ஆலயம்தான் இன்ஸ்பிரேஷனா இருந்தது. இதனோட விசேஷம் என்ன தெரியுமா..?’’ - நிறுத்திவிட்டு தன்னைச் சுற்றிலும் பார்த்தவன் சில நொடிகளுக்குப் பின் உற்சாகத்துடன் தொடர்ந்தான்.

‘‘இந்தக் கோயில் கற்களால மட்டும் கட்டப்படலை. மணலாலயும் கட்டப்பட்டிருக்கு. ஆமா, செவ்வக வடிவத்துல இருக்கிற இந்த கைலாசநாதர் கோயிலோட சுற்றுப்புறத்துல மொத்தம் 58 குகைகள் சின்னச் சின்னதா இருக்கு. இதை மணல் குகைகள்னும் சொல்வாங்க. இதுலதான் 58 ரிஷிகள் தவம் செய்ததா ஒரு நம்பிக்கை...’’
பாலாவின் கையை இறுகப் பற்றியபடியே அந்த ‘மணல் குகைகளை’ ரவிதாசன் பார்வையிட ஆரம்பித்தான்.
சிரமப்பட்டு இமைகளைத் திறந்த ஃபாஸ்ட்டுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. எங்கிருக்கிறோம்... எந்த நிலையில் இருக்கிறோம்... என்றே தெரியவில்லை. கை கால்களை அசைக்க முடிந்தது. ஆனால், சம்மட்டியால் யாரோ அடிப்பது போல் தலை வலித்தது. எழுந்து கொள்ள முயற்சித்தான். முடியவில்லை. படுத்த நிலையிலும் உடல் தள்ளாடியது. பிடிமானத்துக்காக கையைத் துழாவினான். யாரோ அந்தக் கையைப் பிடித்தார்கள்.

கனத்த தலையை மெல்ல திருப்பி யாரென்று பார்த்தான். சூ யென்!
‘‘மரக்கலத்துல இருக்கோம். ஆனா, ரெண்டு பேருமே ஆபத்துல சிக்கியிருக்கோம். என்னனு நீயே பாரு...’’ என்றபடி ஃபாஸ்ட்டின் தலையை கைத்தாங்கலாகப் பிடித்துத் தூக்கினான். தெரிந்த காட்சியைப் பார்த்து ஃபாஸ்ட் அதிர்ந்தான். அங்கே கடற்போர் நடந்து கொண்டிருந்தது.
‘‘நாம கடற்கொள்ளையர்கள்கிட்ட சிக்கியிருக்கோம்...’’
‘‘இது... இது... எந்த இடம்..?’’
‘‘பகவான் கிருஷ்ணரோட சாம்ராஜ்ஜியம். துவாரகா...’’
பதிலே பேசாமல் மீண்டும் படுத்தான் ஃபாஸ்ட். உடலெங்கும் வலித்தது. அசைய முடியவில்லை. தன் முகத்தில் ஓங்கி ஓங்கிக் குத்திய சூ யென்னின் உருவமே மனக் கண்ணில் எழுந்தது.
‘‘எதுக்காக என்னை அடிச்ச?’’ முனகலுடன் கேட்டான்.

‘‘நானா... உன்னையா..? என்ன உளர்ற?’’
‘‘யாரு உளர்றது? சும்மா நடிக்காத சூ யென்... நீயும் நானும் ஒரே நோக்கத்துக்காகத்தான தமிழகம் வந்திருக்கோம்..? நமக்குள்ள ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருக்கத்தான செய்யுது? அதை ஏன் மீறின..? நீ ரவிதாசன் வீட்ல இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்ட பிறகும் நான் பேசாமத்தான இருந்தேன்... உன் பாதைல குறுக்கிடலையே... அப்படியிருக்கிறப்ப என் விஷயத்துல மட்டும் நீ ஏன் தலையிட்ட? ரோட்ல என்னை துரத்திப் பிடிச்சு எதுக்காக என் முகத்துல அப்படி குத்தின..?’’ - வலியை அனுபவித்தபடியே வார்த்தைகளைச் சிதற விட்டான் ஃபாஸ்ட்.

‘‘நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியலை. இந்தக் கப்பலுக்கு என்னைக் கூட்டிட்டு வந்ததே நீதான்... உன்னை எங்க நான் அடிச்சேன்?’’
‘‘எ...ன்...ன...து... நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தனா?’’
‘‘பின்ன நாம எப்படி வந்தோம்னு நினைக்கற? ‘இந்தக் கப்பல் துவாரகா போகுது. அங்க போனா பொக்கிஷத்தோட வரைபடம் கிடைக்கும். அதை வைச்சு புதையலை கைப்பற்றலாம். பிறகு நாம பங்கு போட்டுக்கலாம்’னு சொன்னது நீதானே?’’

‘‘அப்படி நான் எதுவும் சொல்லலை... சில ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே துவாரகாவை கடல் விழுங்கிடுச்சு. இப்ப கிருஷ்ணரோட சாம்ராஜ்ஜியம் இருக்கிறது கடலுக்குள்ள. அங்க எந்தக் கப்பலாலயும் போக முடியாது. தவிர துவாரகாவுல பொக்கிஷத்துக்கான வரைபடம் இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது...’’ கண்களை மூடியபடி மூச்சு வாங்கிய ஃபாஸ்ட், ‘‘நீ சொல்றது உண்மைனா என்னவோ தப்பு நடந்திருக்கு. உன்னைப் போலவே ஒருத்தன் எங்கிட்ட வந்திருக்கான். என்னை மாதிரியே இன்னொருத்தன் உன்னை ஏமாத்தியிருக்கான். மொத்தத்துல நாம ரெண்டு பேருமே இப்ப சிக்கல்ல மாட்டியிருக்கோம்...’’ என்றான்.
‘‘இப்ப என்ன பண்றது?’’
‘‘ஒண்ணும் செய்ய முடியாது. கடற்கொள்ளையர்கள் கிட்ட சிக்கி அடிமையாக வேண்டியதுதான்...’’ என்று ஃபாஸ்ட் முடிக்கவும், அவர்கள் இருந்த கப்பல் தலைகுப்புற கவிழ்வது போல் ஆட்டம் காணவும் சரியாக இருந்தது. இதனால் படுத்துக் கொண்டிருந்த ஃபாஸ்ட், தூக்கி எறியப்பட இருந்தான். நல்லவேளையாக சூ யென், பாய்ந்து அவன் உடலை அணைத்துக் கொண்டான். கூடவே கப்பலின் பக்கவாட்டில் இருந்த இரும்புக் கம்பியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

ஆட்டம் கண்ட கப்பல் ஓரளவுக்கு நிலை பெற்றதும், ஃபாஸ்ட்டை கைத்தாங்கலாகப் பிடித்து நிறுத்தினான் சூ யென். வெளியே தெரிந்த காட்சி இருவரையும் அதிர வைத்தது. அவர்கள் வந்த கப்பலைத் தாக்க வந்த கடற்கொள்ளையரின் கப்பல் பாதியாகப் பிளந்து கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.
கூடவே கடலுக்குள்ளிருந்து ஐந்து தலை நாகம் ஒன்று பிரமாண்டமாக எழுந்தது. அதன் வால் நுனி, மெல்ல நீண்டு, இருவரும் இருந்த கப்பலைச் சுற்ற ஆரம்பித்தது.
‘‘இது... இது... என்னவகையான நாகம்?’’ - பயத்துடன் கேட்ட சூ யென்னுக்கு அச்சத்துடன் பதில் சொன்னான் ஃபாஸ்ட்.
‘‘காளிங்கன்...’’
(தொடரும்)