
=விலைமதிப்பில்லாததுதான்
மயானத்தில்
பிணம் எரிப்பவனின்
அழுகை
=பழைய புத்தகமென
எடைக்குப் போட மனசில்லை,
குழந்தையின் கையெழுத்து
=நகரத்துச் சாலைகள் எதுவும்
கொண்டு வருவதேயில்லை
ஒற்றையடிப் பாதையின் சுகம்!
=கோயிலுக்குள்
நுழைகிறது குழந்தை.
நல்ல தரிசனமென
வணங்குகிறார் கடவுள்!
=திருமண மண்டபங்களில்
எங்கேனும்
ஒளிந்திருக்கத்தான் செய்கிறது,
சந்தோஷங்களுக்கிடையே
சில முதிர்கன்னிகளின் அழுகை
=மௌனங்களாக உறைந்திருக்கிறது
விடுமுறை நாள் பள்ளியின்
கண்ணீர்த்துளி
=குழந்தைகள் சொன்ன கதைகளை
அவர்கள் தூங்கியபிறகு
பொம்மைகளிடம்
கேட்டுக் கொண்டிருந்தார் கடவுள்!
பெ.பாண்டியன்