கொலை ஆயுதங்களாகும் உயிரிகள்!





சரித்திரமெங்கும் வில்லன்கள் வில்லன்களாகவே இருந்து மரித்துப் போகிறார்கள். திருந்தி வாழ்ந்தால், இன்னும் சீக்கிரமாக சாகடிக்கப்படுகிறார்கள். உலகத்தையே ஆள நினைக்கும் வில்லன்களையே பொதுவாக ஹாலிவுட் படங்கள் காட்டுகின்றன. 3டி அனிமேஷன் படங்களும்கூட இதில் விதிவிலக்கில்லை. மிகக் கொடூரமான ஒரு வில்லன், நல்லவனாக மாறி ஹீரோ அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்றும் கதைதான் ‘டிஸ்பிகபிள் மீ 2’. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாகத்தில் வில்லனாக இருந்து க்ளைமாக்ஸில் ஹீரோ ஆன க்ரு, இந்தப் படத்தில் சூப்பர் ஹீரோ. டெக்னாலஜியில் கவனிக்கத் தகுந்த அனிமேஷன் படமான இது, இந்த வாரம் ரிலீஸ்!

தான் தத்தெடுத்த மூன்று பெண்களோடு, பாசமுள்ள அப்பாவாக அமைதியாக வாழ்கிறார் க்ரு. அவர்களுக்கு உதவி செய்ய ‘மினியன்ஸ்’ என்ற மஞ்சள் உடை அடியாள் படை இருக்கிறது. ஒருநாள் அவரைக் கடத்திப் போகிறார்கள் ‘ஆன்ட்டி-வில்லன் லீக்’ அமைப்பினர். கடலுக்கடியில் செயல்படும் தங்கள் தலைமையகத்துக்கு க்ருவை அழைத்துப் போய், மீண்டும் உளவாளியாக மாறச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

ரகசியமான ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வேதிப்பொருளை புதிய வில்லன் கோஷ்டி ஒன்று திருடிச் சென்றுவிட்டது. அந்த வில்லன் யார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அந்த வேதிப்பொருள் அபாயகரமானது. எந்த உயிரியையும் அழிக்கமுடியாத கொலைகார ஆயுதமாக மாற்றும் வல்லமை படைத்தது. அப்படி கொலைகார ஆயுதமாக மாறும் உயிரி, புதிது புதிதாக தன் இனத்தை உருவாக்கிக் கொண்டே போகும். ‘‘திருடிய அந்த வில்லனைக் கண்டுபிடிக்க நீதான் சரியான ஆள்’’ என்கிறார்கள்.

நதி போல ஓடிக்கொண்டிருக் கும் தன் வாழ்வின் அமைதியைக் குலைக்க விரும்பவில்லை க்ரு. நிராகரித்துவிட்டு வருகிறார். அவரது மூத்த மகள், ஒரு ஹோட்டல் அதிபரின் மகனை காதலிக்கிறாள். அந்த ஹோட்டல் அதிபரை பார்க்கும் க்ரு, ஷாக் ஆகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்படும் ஒரு பயங்கர வில்லனே அவன். விதி அவரை ஆபத்தான விளையாட்டில் இறக்குகிறது. அந்த ஹோட்டல் அதிபரின் ரகசிய மறைவிடத்தை அடைகிறார் அவர். அங்கே அவருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது விசுவாசப் பட்டாளமான மினியன்களில் சிலரைத்தான் வேதிப்பொருள் கொடுத்து, கொலை ஆயுதங்களாக மாற்றி இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள். ‘‘நான் உலகை ஆளப் போகிறேன். நீயும் உடன் வா’’ என அழைக்கிறான் வில்லன். தனது அடியாட்களே எதிரிகள் ஆகிவிட்டார்கள். இந்தச் சூழலை வென்று அவர் உலகத்தைக் காப்பாற்றுவதே படம்.
- ரெமோ