
வாரா வாரம் விலை ஏறுகிறது அரிசி. அதைவிட வேகமாக சரிகிறது ரூபாயின் மதிப்பு. நூறு ரூபாயில் பை நிறைய காய்கறி வாங்கிப் பழகியவர்களைப் பார்த்து சிரிக்கிறது சின்ன வெங்காயம். தக்காளியின் விலை தங்கம் விலை போல தினம் தினம் மாறுகிறது. ரூபாயும் நாணயங்களும் புழக்கத்துக்கு வராத பழங்காலத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் மக்கள். நெல்லைக் கொடுத்து புளியும், உளுந்தைக் கொடுத்து துணியும் வாங்கிய பண்டமாற்று முறையில் இத்தனை சிக்கல்கள் இல்லை; நிச்சயமற்ற நிலை இல்லை. இதுதான் இப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் படு வேகமாக பாப்புலர் ஆகிவருகிறது. பழைய இரும்புக்கு வெங்காயமும், பித்தளைக்கு பேரீச்சம்பழமும் வாங்கும் காயலான் கடை வியாபாரம் இல்லை இது. சற்றே நவீனப்படுத்தப்பட்ட வடிவம்!
‘ஃபுட் ஸ்வாப் நெட்வொர்க்’ என இதற்குப் பெயர் சூட்டி இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில்தான் முதலில் ஆரம்பித்தது. கேத் பாய்னே என்ற பெண்மணிதான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். 2010 மார்ச் மாதத்தில் நான்கு பெண்களோடு இணைந்து இவர் துவக்கிய இயக்கம், இன்று அமெரிக்காவைத் தாண்டி கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, பிரான்ஸ் என கொடி கட்டிப் பறக்கிறது.
திடீரென சமையலறை கண்டெய்னரைத் திறந்து பார்த்தால் மிளகாய்த் தூள் இருக்காது. பழகிய பக்கத்து வீட்டில் கொஞ்சம் வாங்குவோம். அவர்கள் மிளகாய்த் தூள் வைத்துத் தரும் பாத்திரத்தை சும்மா தரக்கூடாது என்று, சாயந்திரம் கொஞ்சம் பஜ்ஜி போட்டு சூடாக நிரப்பி, பாத்திரத்தைத் திரும்பத் தருவோம். நம்ம ஊரில் சிம்பிளாக நடக்கும் இந்த அண்டை வீட்டு பண்டமாற்றுதான் கொஞ்சம் பெரிய லெவலில் அங்கு நடக்கிறது.

குழந்தைகளுக்குத் தருவதற்காக புது கேக் ரெசிபி ஒன்றை முயற்சி செய்து பார்த்தார் கேத் பாய்னே. நன்றாக வந்தது. ஆனால் அவர்கள் சாப்பிட்டது போக, நிறைய மீதம் இருந்தது. உணவை வீணாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. சமூக வலைத்தளத்தில் பழக்கமான எமிலி ஹோ என்பவருடன் அதைப் பகிர்ந்து கொண்டார். இப்படி ஆரம்பித்ததுதான் இந்த இயக்கம்.
வீட்டில் செய்த கேக், சாண்ட்விச், ஊறுகாய் முதல், தோட்டத்தில் விளைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் என எதையும் இங்கு பண்டமாற்று செய்யலாம். மாதத்தில் இரண்டு முறை சந்திப்பு நிகழும். ஒவ்வொரு குழுவில் இருப்பவர்களுக்கும், சந்திப்பு நடக்கும் இடம் தெரியப்படுத்தப்படும். கிச்சனில் சமைத்ததோ, தோட்டத்தில் விளைந்ததோ... தூய்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இந்த சந்திப்பு இரண்டு மணி நேரம் நடக்கும். ஸ்டால் வைக்க அரை மணி நேரம். தாங்கள் கொண்டு வந்திருக்கும் பொருளை கச்சிதமாக அடுக்கி வைத்து, என்ன பொருள் அல்லது என்ன உணவு, என்னென்ன அயிட்டங்களைப் போட்டு உருவாக்கியது என ஒவ்வொன்றிலும் ஒரு அட்டையை எழுதி வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் என்ன எடுத்து வர வேண்டும், எவ்வளவு எடுத்து வர வேண்டும் என எதற்கும் எல்லை இல்லை. அடுத்த ஒரு மணி நேரம், குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று ருசி பார்ப்பார்கள். தங்களுக்கு ஏதாவது பிடித்திருக்கிறது என்றால், அந்த அட்டையில் தங்கள் பெயரை எழுதி, தாங்கள் இதைப் பெற்றுக்கொண்டு எதைப் பண்டமாற்று செய்ய விரும்புகிறார்கள் என எழுதி வைக்க வேண்டும். கடைசி அரை மணி நேரத்தில் பண்டமாற்று நிகழும். இரண்டு தரப்பும் விரும்பினால், எழுதிய அட்டைகளை வைத்து பொருட்களை மாற்றிக் கொள்வார்கள். ஆப்பிளுக்கு முட்டை, உருளைக்கிழங்குக்கு கீரை, சாக்லெட்டுக்கு சாண்ட்விச் என எதையும் எதற்கும் மாற்றிக்கொள்ளலாம்.
யாரும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளக் கூடாது; பர்சுக்குள் கையைவிட அனுமதி இல்லை. எந்தப் பொருளையும் விற்கக்கூடாது. இவை மட்டுமே நிபந்தனை. நன்றாக சாக்லெட் செய்யத் தெரிந்த ஒருவருக்கு சைனீஸ் நூடுல்ஸ் பக்குவமாக வராது. தன் கைவண்ணத்தில் சாக்லெட் செய்து எடுத்துவந்து, வீட்டுக்கு நூடுல்ஸ் எடுத்துப் போகலாம். ‘‘உணவு எங்கிருந்து வருகிறது என்பது குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. அவர்களை இங்கு கூட்டி வந்தால், உணவு குறித்த அக்கறை அவர்களுக்கு வருகிறது. உணவு ரொம்ப முக்கியமானது. அதை வீணாக குப்பையில் போடக்கூடாது என்ற உணர்வு எல்லோருக்கும் வருகிறது. புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதனால்தான் இந்த அமைப்பு வேகமாக வளர்கிறது’’ என்கிறார் பிரிட்டனில் இப்படி அமைப்பை நடத்தும் விக்கி ஸ்விஃப்ட்.
இப்போது உணவைத் தாண்டி துணிகள், அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என எல்லைகள் விரிகிறது. இதில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்த இந்தியா இன்னும் விழிக்கவில்லை.
- அகஸ்டஸ்