இடைவெளியை இல்லாமல் செய்யும் ப்ரயாஹ்!





கஷ்டம்னா என்னன்னு தெரியாம வளர்ந்தவங்க நாங்க. எந்தப் பொருளா இருந்தாலும் இன்னைக்குக் கேட்டா நாளைக்கு எங்க பேரன்ட்ஸ் வாங்கிக் கொடுத்திடுவாங்க. ஸ்கூல் ஃபிரண்ட்ஸோட தீபாவளி, புத்தாண்டை எங்காவது மால்கள்ல ஜாலியா கொண்டாடுவோம். ஒரு வருஷம் தீபாவளியை குழந்தைகள் காப்பகத்தில கொண்டாடலாமேன்னு ஒரு யோசனை தோணுச்சு. அதுதான் எங்க வாழ்க்கையை மாத்துச்சு. நம்ம சமுதாயத்துல இவ்வளவு மோசமான ஏற்றத்தாழ்வுகள் இருக்குங்குற உண்மையே அப்பத்தான் எங்களுக்கு உறைச்சுது. இந்த மேடு பள்ளத்தைக் குறைக்க நம்மால முடிஞ்ச வேலைய செய்யணும்னு அன்னைக்குத் தீர்மானிச்சோம்...’’ - முதிர்ச்சியாகப் பேசுகிறார் அவினாஷ்.

வாய்ப்பு மறுக்கப்பட்டு, குப்பங்களுக்குள் முடங்கிக் கிடக்கிற குழந்தைகளுக்கு கல்வியையும், நல்ல வாழ்க்கையையும் அமைத்துத் தரும் ‘ப்ரயாஹ்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் அவினாஷ்.
அவினாஷோடு கைகோர்த்துள்ள 25 பேரும் பொறியியல் பட்டதாரிகள். இந்த ஆண்டுதான் படிப்பை முடித்திருக்கிறார்கள். ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். பணி வாய்ப்புகளை உதறி விட்டு முழுநேரமாக ப்ரயாஹில் இயங்குகிறார்கள்.  

‘‘ஒரே ஸ்கூல்ல படிச்சாலும், கல்லூரியில ஆளுக்கொரு திசைக்கு பிரிஞ்சிட்டோம். ஆனா ‘ப்ரயாஹ்’ பத்தி பேசிக்கிட்டே இருந்தோம். படிப்பு முடிஞ்சதும் பல பேருக்கு கேம்பஸ்லயே வேலை கிடைச்சுது. ஆனா, ‘அடுத்த ரெண்டு வருஷங்களுக்கு யாரும் வேலைக்குப் போகக் கூடாது’ன்னு முடிவு பண்ணிட்டோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லார்கிட்டயும் பணம் கலெக்ட் பண்ணி, காப்பகங்கள்ல இருக்கிற குழந்தைகளுக்கு உடைகள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தந்தோம். அந்தக் குழந்தைகள் புத்தகங்கள்ல படம் பாத்தாங்களே தவிர, அவங்களால படிக்கமுடியலே. 15 வயசு பையனுக்கு ஏ,பி,சி,டி தெரியல. சின்னச்சின்ன கணிதங்களைக் கூட அவங்களால புரிஞ்சுக்க முடியலே. புத்தகம் கொடுத்தா மட்டும் போதாதுன்னு புரிஞ்சபிறகு, செயல்திட்டங்களை மாத்திக்கிட்டோம்’’ என்கிறார் ஸ்வேதா. எஸ்.ஆர்.எம்மில் கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் முடித்திருக்கிறார்.   

‘‘ஒரு பக்கம் வறட்சி, இன்னொரு பக்கம் வெள்ளம் மாதிரி நிரந்தரமா ஒரு ஏற்றத்தாழ்வை இந்தியா சுமந்துக்கிட்டிருக்கு. நமக்குப் பக்கத்திலேயே நம் தம்பி, தங்கைகள் நல்ல கல்வி கிடைக்காம, வாய்ப்புகள் கிடைக்காம தவிக்கிறாங்க. இன்னொரு பக்கம், கல்வியோட தரம் கேள்விக்குறி ஆகிக்கிட்டே போகுது. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரங்களுக்கு ஒரு கல்வி. ஒரு நாடு தன் குடிமக்கள் எல்லோருக்கும் சமமான கல்வியை வழங்கணும். அதே நேரம், எல்லாத்துக்கும் அரசையே நம்பிக்கிட்டிருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் கடமை இருக்கு. நாம கத்துக்கிட்டதை மத்தவங்களுக்குக் கத்துக்கொடுக்கணும்ங்கிறதுதான் எங்க முதல் ப்ராஜெக்ட். சிந்தாதிரிப்பேட்டைதான் எங்களோட முதல் களம்’’ என்கிறார் பிரவீன்.

‘ப்ரயாஹி’ல் நிறைய குழுக்கள் உண்டு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பணியைக் கவனிக்கிறது. சிலபஸ் டீம், குழந்தைகளின் தன்மைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குகிறது. ஒலியை முதன்மைப்படுத்தி பாடங்களைத் தயாரித்திருக்கிறார்கள். டீச்சிங் டீம், களப்பணியாற்றுகிறது. குழந்தைகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து, ஆடல், பாடல் என மகிழ்வித்து பாடம் நடத்துவது இவர்களின் வேலை. ஆங்கிலம், அடிப்படைக் கணிதத்திற்கு முதன்மை தருகிறார்கள். அடுத்து மார்க்கெட்டிங் டீம். நிதி திரட்டுவது இவர்கள் வேலை.

‘‘குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறோம். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி கொடுக்கிறோம். சில அரசுப்பள்ளிகள்ல உள்கட்டமைப்பு வசதிகள் கம்மியாயிருக்கு. பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்கிறமாதிரி உள்கட்டமைப்பை மேம்படுத்துற வேலையையும் செய்யிறோம். குடும்பச்சூழல் கல்வியை பாதிக்காம இருக்க கவுன்சிலிங் கொடுக்கிறோம். 1600 மாணவர்கள் எங்க கவனத்துல இருக்காங்க. தனியார் பள்ளிகள்ல படிக்க விரும்புற குழந்தைகளை அந்தப் பகுதிகள்ல உள்ள பள்ளிகள்ல சேத்துவிட்டு, முழுச்செலவையும் நாங்களே ஏத்துக்குறோம். எங்க கருத்தோட இணையுற இளைஞர்களை ப்ரயாஹ்ல சேத்துக்கிட்டிருக்கோம். உறுப்பினர்கள் அதிகமானா வேலைத்திட்டங்களை விரைவுபடுத்த முடியும். இன்னும் 2 வருஷத்தில நண்பர்கள்கிட்ட ‘ப்ரயாஹை’ ஒப்படைச்சுட்டு நாங்கள்லாம் வேலைக்குப் போயிடுவோம். எங்க வருமானத்துல பெரும்பகுதியை எங்க அமைப்புக்குக் கொடுப்போம். இந்தியா முழுவதும் எங்க பணிகளை விரிவுபடுத்துவோம். கல்வியில இருக்கிற இடைவெளியை இல்லாமல் செய்வோம்’’ - சுவாமிநாதனின் கனவுகள் விரிகின்றன.
‘ப்ரயாஹ்’ என்றால் சங்கமம் என்று பொருள். நல்ல நோக்குடைய நண்பர்களின் சங்கமம் இந்தியாவின் அழுக்குகளை அகற்றட்டும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்